பிராணாயாமம் – கும்பகத்தின் சிறப்பு

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.   – (திருமந்திரம் – 571)

விளக்கம்:
இடைகலை, பிங்கலை வழியாக மூச்சுக் காற்றை ஏற்றி இறக்கி பூரிப்பு பெறுவோம். இடையே காற்றைப் பிடித்து நிறுத்தி கும்பகம் செய்யும் முறையை அறிந்தோம் இல்லை. கும்பகம் செய்யும் முறையை அறிந்து கொண்டால் யமனை வெல்லும் குறிக்கோளை அடையலாம்.

இடைகலை என்பது இடது பக்க மூச்சு, பிங்கலை என்பது வலது பக்க மூச்சாகும். கும்பகம் செய்யும் முறையை நன்றாக கற்றவர் நோயில்லாமல் அதிக நாள் வாழலாம்.

(கால்  – காற்று,  கூற்று – யமன்,    குறி – குறிக்கோள்)

let us inhale through our left and right nostrils alternatively,
and feel elated. We don't know how to retain the breath in between.
If we know the method of retaining the breath inside,
We are destined to spurn the God of Death, Yama.

கவிக் கள்ளைக் குடித்து வெறி ஏறுதடா!

நூலகம் வலைப்பக்கத்தில் 1943ஆம் வருடத்து மும்மாத இதழ் ஒன்று படிக்க நேர்ந்தது. ’கலாநிதி’ என்பது அந்த இதழின் பெயர். அதன் உள்ளடக்கம் சுவாரசியமாக இருந்ததால் எடுத்துப் படித்தேன். சில இலக்கியக் கட்டுரைகளுடன் ஒரு மொழி ஆராய்ச்சிக் கட்டுரையும் உள்ளது, உபயோகமான தகவல்கள் நிறைந்தவை. அந்தக் கட்டுரையின் தொடர்ச்சியான அடுத்த பகுதிகள் கிடைக்குமா என்பது தெரியவில்லை, கிடைத்தால் மிகவும் பயன் உள்ளவையாக இருக்கும்.

அப்புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே வந்த போது “தமிழ்க்கவிப் பித்து” என்ற தலைப்பில் ஒரு பாடல், அதைப் படிக்கும் போது ரொம்பவே உணர்ச்சி வசப்பட வைத்தது. அந்தப் பாடலை இங்கே பகிர்கிறேன், இதை எழுதிய  ‘க.ச. ஆனந்தன்’ அவர்களுக்கு நமது கோடி வணக்கங்கள்.

தமிழ்க்கவிப் பித்து

பொன்னின் குவையெனக்கு வேண்டிய தில்லை – என்னைப்
போற்றும் புகழெனக்கு வேண்டிய தில்லை
மன்னன் முடியெனக்கு வேண்டிய தில்லை – அந்த
மார னழகெனக்கு வேண்டிய தில்லை.

கன்னித் தமிழெனக்கு வேணுமே யடா! – உயிர்க்
கம்பன் கவியெனக்கு வேணுமே யடா!
தின்னத் தமிழெனக்கு வேணுமே யடா – தின்று
செத்துக் கிடக்கத்தமிழ் வேணுமே யடா!

உண்ண உணவெனக்கு வேண்டிய தில்லை – ஒரு
உற்றா ருறவனிரும் வேண்டிய தில்லை
மண்ணில் ஒருபிடியும் வேண்டிய தில்லை – இள
மாத ரிதழமுதும் வேண்டிய தில்லை.

பாட்டில் ஒருவரியைத் தின்று களிப்பேன் – உயிர்
பாயு மிடங்களிலே தன்னை மறப்பேன்
காட்டில் இலக்குவனைக் கண்டு மகிழ்வேன்  – அங்குக்
காயுங் கிழங்குகளும் தின்று மகிழ்வேன்.

மாட மிதிலைநகர் வீதி வருவேன் – இள
மாதர் குறுநகையிற் காத லுறுவேன்
பாடி யவரணைக்கக் கூடி மகிழ்வேன் – இளம்
பச்சைக் கிளிகளுடன் பேசி மகிழ்வேன்.

கங்கை நதிக்கரையில் மூழ்கி யெழுவேன் – பின்பு
காணும் மதுரைநகர்க் கோடி வருவேன்
சங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் – அவர்
தம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்.

செம்பொற் சிலம்புடைத்த செய்தி யறிந்து – அங்குச்
சென்று கசிந்தழுது நொந்து விழுவேன்
அம்பொன் னுலகமிது கண்டனெ னடா! – என்ன
ஆனந்த மானந்தங் கண்டனெ னடா!

கால்கள் குதித்துநட மாடுதே யடா! – கவிக்
கள்ளைக் குடித்துவெறி யேறுதே யடா!
நூல்கள் கனித்தமிழில் அள்ள வேண்டும் – அதை
நோக்கித் தமிழ்பசியும் ஆற வேண்டும்.

தேவர்க் கரசுநிலை வேண்டிய தில்லை – அவர்
தின்னுஞ் சுவையமுது வேண்டிய தில்லை
சாவிற் றமிழ்படித்துச் சாக வேண்டும் – என்றன்
சாம்பல் தமிழ்மணந்து வேக வேண்டும்.