main

அனுபவம்கட்டுரைதத்துவம்நகைச்சுவை

சில பல கிறுக்கல்கள்

August 15, 2013 — by Rie

20.45

காலம் காலமாக நமது கதைகளும், சினிமாக்களும் கணவன் மனைவி உறவை அன்பு, பாசம், தியாகம் என்று என்ன எழவெல்லாமோ சொல்லி over rate செய்திருக்கின்றன. இவ்வித மிகைப்படுத்தல்களால், இன்று அவஸ்தைப் படுவது யார்? நான் தானே :(

18.03

உளவியல் நிபுணர்களால் நிரம்பப் பெற்ற ஃபேஸ்புக் அவைக்கு வணக்கம் பல. உப்புமாவின் வாசனையை வைத்தே கிண்டியவரின் மனச்சிக்கல்களை தொகுக்கும் ஆற்றல் படைத்தவர்கள் ஆயிற்றே! உப்புமா என்றால் தமிழ் சினிமா என்பதைச் சொல்லத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

13.26

‘பார்வை மங்கும் நேரம்’ என்று பாடும் ஸ்ரேயாவைப் பார்க்க பாவமாக இருந்தது. ஆமா வயசாயிடுச்சேன்னு தோணிச்சு! அப்புறம் தான் சொன்னாங்க அது ‘மாலை மங்கும் நேரம்’ன்னு.

00045_01

21.56

மரண விலாஸ்  ஓட்டலில் ரவா தோசை நல்லாயிருக்கும்னு சொன்னா, லிங்க் கிடைக்குமான்னு கேட்கிறாங்க!

16.14

சில அஞ்சலிக் கட்டுரைகளைப் படிக்கும்போது, தனக்குத் தானே அஞ்சலி செலுத்திக் கொள்கிறார்களோ என்று தோன்றுகிறது!

12.58

கரைப்பார் கரைத்தால் உதடும் கரையும்!

08.56

ரொம்ப பெரிய விஷயத்தை எல்லாம் ஃபேஸ்புக்கில் பகிர வேண்டாம் என்று கபீர் சொல்லியிருக்கிறார். “உன்னிடம் உள்ள விலை உயர்ந்த வைரங்களை காய்கறிச் சந்தையில் பிரிக்காதே!”

08.55

Fake idயில் லாகின் செய்து பழகி, நமது Real idயை மறந்து விட்டோம் என்று சொல்கிறார் திருமூலர்.

08.55

ஃபேஸ்புக்கையும் ட்விட்டரையும் நம்பி படத்துக்கு போகாதேன்னு எனக்கு எத்தனை தடவைதான் சொல்றது?

08.53

எனது பைக்கில் அவ்வப்போது பெட்ரோல் எடுக்கும் திருடாளர் கவனத்திற்கு – இப்போது பெட்ரோல் விலை கணிசமாக குறைந்து வருவதால் தாங்கள் தங்கள் எரிபொருள் தேவையை விலைக்கு வாங்கும் வகை எதுவும் வாய்ப்பில் உள்ளதா என்பது பற்றி பரிசீலனை செய்யும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

08.52

Cellphone while driving பற்றி கவலையாகவோ கோபமாகவோ பேசினால், நண்பர்கள் ரொம்பவே கேலி செய்கிறார்கள்.

08.52

இப்போது துக்க வீடுகளையும் ஒப்பிட ஆரம்பித்து விட்டார்கள். துக்க வீட்டில் சம்பந்தப்பட்டவர் யாருடைய வழி அனுப்பதலுக்காகவும் காத்திருப்பதில்லை. அவர் ஏற்கனவே இறந்து விட்டார்.

08.50

சேதனன் ஒளித்து வைத்திருந்த நோட்டுப்புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். சுமார் ஐம்பது அஞ்சலிக் கட்டுரைகள் இருக்கும். எல்லாரும் சாக வேண்டியது தான் பாக்கி என்று சிரிக்கிறான். என்னைப் பற்றி எழுதியிருப்பதைப் பார்த்தால் அவ்வளவு லேசில் சாகக்கூடாது என்று தோன்றுகிறது.

08.49

எந்த யோகப்பயிற்சியிலும் அதை முதலில் பழகும் போது ஒரு வித புது உணர்வு தோன்றுவது இயல்பான ஒரு விஷயமே. இந்த உணர்வு என்பது பயிற்சி செய்யும் எல்லோருக்கும் வரும் விஷயம்தான். இந்த உணர்வில் கவனம் செலுத்தாமல் அதை கடந்து செல்வது பயிற்சியின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். விபஸ்ஸனா பயிற்சியில் இந்த விஷயம் முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது. “Don’t play with sensations” என்பது அவர்கள் அழுத்தமாகச் சொல்லும் விஷயம்.

08.48

நேற்றைய திருமந்திரத்தில் நியமத்தில் இருப்பவர்களின் கடமைகளைப் பற்றி படித்த போது ஓரு விஷயம் ஆச்சரியமாக இருந்தது. பக்தி, தவம், யாகம், தானம் என்று போகும் வரிசையில் சந்தோஷத்தையும் சேர்த்திருக்கிறார் திருமூலர். மனத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதும் யோகத்தின் ஒரு படி என்பதைப் படிக்கும் போது ஓஷோ கிறிஸ்துவைப் பற்றி சொன்ன ஒரு விஷயம் ஞாபகத்தில் வந்தது.

ஓஷோ கிறிஸ்துவை கேலி செய்து நிறைய பேசியிருக்கிறார். ரொம்ப ஓவரா போறாரேன்னு நமக்கே தோணும். ஆனால் மனப்பூர்வமாக சில விஷயங்கள் சொல்லியிருக்கிறார். வேறு யாரும் இந்த அளவுக்கு சொல்லியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. “கிறிஸ்து எப்பேர்ப்பட்ட ஒரு யோகி? அப்படிப்பட்ட யோகி எப்போதும் சந்தோஷமாக மட்டுமே இருந்திருக்க முடியும். சிலுவையில் அறையப்படும் போது அவருக்கு மனத்தில் சின்ன சோகம் கூட தோன்றியிருக்காது. அந்நேரத்திலும் மகிழ்ச்சியாக இருந்திருக்கக் கூடிய யோகி அவர். கிறிஸ்துவின் படத்தை வரைந்தவர்கள் அவரை ஒரு சாதாரண மனிதரைப் போல நினைத்து சோகமாக வரைந்து வைத்து விட்டார்கள்.”

08.47

சிரித்தே அறியாத அவள் உதட்டிலே கத்தியின் கூரால் கீறிப் பார்த்தபோது ஒரு அலட்சியப் புன்னகை வரையக் கிடைத்தது.

08.46

தொல்லைகளைத் தேடிக் கொள்வதில் கூட உன் வழி உனக்கு, என் வழி எனக்கு!

23.11

“விமர்சனம் ஒன்று எழுதி முடிக்கும்போது, ஒரு சினிமாவை இயக்கி விட்ட ஃபீலிங் கிடைக்குது” என்கிறான் சேதனன்.

08.35

மக்கள் தொகையை விட அதிகமாக பயமுறுத்துவது வாகனங்களின் எண்ணிக்கை. இப்போது நம்முடைய தேவை தானியங்கி வாகனங்கள் அல்ல. நகரக்கூடிய சாலைகள்.

06.43

வேறு வழியில்லை! நல்லவனாகத் தான் இருந்து தொலைக்க வேண்டியிருக்கிறது.

15.31

வீட்டில் இருப்பவர்களிடமும், நண்பர்களிடம் பலமுறை கடுமையாகப் பேசியிருக்கிறேன். நினைத்துப் பார்த்தால், இப்போது வருத்தமாக இருக்கிறது, எனது கடுமைக்கான காரணத்தை இன்னும் இவர்கள் திருத்திக் கொள்ளவில்லையே என்று.

16.58

சிரிக்கும் கடவுளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

13.25

முட்டாள்கள்களின் வாழ்க்கைக்கும், போதைக்கு அடிமையானவர்களின் வாழ்க்கைக்கும் கடவுள் பொறுப்பெடுத்துக் கொள்கிறாராம். மற்றவர்கள் பாடு தான் பாவம்.

03.23

நானும் நண்பன் பாலமுருகனும் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு பைக்கில் போயிருந்தோம். சரியான கூட்டம், கோவிலில் இருந்து கிளம்ப 5 மணி ஆகி விட்டது. பாலமுருகனை திருநெல்வேலியில் இறக்கி விட்டுட்டு நான் சிவகாசி திரும்பணும், இருட்டில் தனியாக பைக்கில் போகணுமேன்னு கொஞ்சம் பதட்டத்தில் வரும் போது ஃபோன் வந்தது. எப்பவுமே பைக் ஓட்டும் போது ஃபோனை எடுக்க மாட்டேன். அன்னைக்கு இருந்த பதட்டத்தில் ஃபோனை எடுத்து பேசிக்கிட்டே மெதுவாக பைக்கை ஒட விட்டேன். வழியில் நின்ற ஒரு போலீஸ்காரர் வண்டியை ஓரமாக நிறுத்தச் சொல்லி சைகை காட்டினார்.

எனக்கு முதலில் புரியலை “என்ன ஸார்?” ன்னு கேட்டேன். “ஃபோன் பேசிக்கிட்டே வண்டி ஓட்டிட்டு என்னவா? அங்க போங்க” ன்னு எதிர்ப் பக்கம் நின்ற பெரிய போலீஸ்காரரை காட்டினார். அவருக்கு 50 வயசுக்கு மேல இருக்கும். பக்கத்தில் போன உடனேயே ஊதிக்காட்டச் சொன்னார். நானும் ஊதிக்காட்டிட்டு “அந்த பழக்கமெல்லாம் கிடையாது ஸார்”ன்னு கூச்சத்தோட சொன்னேன். பக்கத்தில் இருக்கும் பாலமுருகன் “அதெப்படி நீங்க ஊதிக் காம்பிக்கச் சொல்லலாம்?’ன்னு கோபத்தோட கேட்க “ஏன் சொல்லக்கூடாதோ?” அவர் எகிற இவன் நம்ம இன்னைக்கு ஊருக்கு போக விட மாட்டானோன்னு பயமாக இருந்தது. “பாலமுருகா விடு! இது அவங்க ட்யூட்டி, நம்ம மேல தப்பு இருக்குல்ல”ன்னேன். “இல்ல, நீங்க கோவிலுக்கு வர்றவங்கள எல்லாம் இப்படி ஊதிக்காமின்னு சொன்னா எப்படி?”ன்னு பாலமுருகன் விடுவதாக இல்லை. ”நீ சாமி கும்பிடத்தான வந்திருக்க? கோவில்ல இருக்கிற எத்தன அய்யருங்க ட்ரங்க் அண்ட் ட்ரைவ்ல மாட்டிருக்காங்கன்னு தெரியுமா உனக்கு? அவங்க பேரெல்லாம் சொல்லட்டுமா?”ன்னு கேட்டார். நான் குறுக்கே புகுந்து “ஸார், அதெல்லாம் வேணாம். என் பேர், அட்ரஸெல்லாம் சொல்றேன், எழுதிக்கிடுங்க ஃபைன் எவ்வளவுன்னு சொல்லுங்க, கட்டிடுறேன்”ன்னு சொன்னேன். என் முகத்தை கொஞ்சம் உற்றுப் பார்த்தவர் “இனிமே இப்படிச் செய்யாதே, போ”ன்னு அனுப்பி வைத்தார்.

அம்மன்புரத்தில் சேவு வாங்குற வரைக்கும் பாலமுருகன் புலம்பிக்கிட்டே வந்தான். “பேரெல்லாம் சொல்றேன்னு சொன்னாரு”ன்னு. ஒரு நல்ல கவர் ஸ்டோரிய ஹெட்லைனோட கட்பண்ணி விட்டுட்டேன்னு அவனுக்கு கோபம் போல!

02.02

சாலையில் பைக் ஓட்டுபவர்கள், சிறு பள்ளமா அல்லது மண் லாரியா என சாய்ஸ் வரும்போது மண் லாரியைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

16.40

என் இருதயம் அடிக்கடி நழுவி வயிற்றுக்குள் விழுந்து விடுகிறது. மீட்டுக் கொண்டு வருவதற்கு நான் படும் பாடு …!

02.01

ஒரு கூடையில் பல விதமான பழங்கள் இருந்தன. ஆரஞ்சு ஆப்பிளைப் பார்த்து தன்னையும் ஆப்பிள் என்று நினைத்துக் கொண்டது. மாதுளை தன்னை கொய்யா என்று நினைத்துக் கொண்டது. சிறிது நேரத்தில் அந்த கூடையில் இருந்த எல்லாப் பழங்களும் தன் ருசியில் கொஞ்சம் மாறிவிட்டது. இனி இந்த ஆப்பிள் புளிக்குதேன்னு கேட்காதீங்க, அதன் சகவாசம் சரியில்லேன்னு அர்த்தம்.

நானும் இப்படித்தான் அடுத்தவனைப் பார்த்து நல்லவனாகி விடப் பார்க்கிறேன்.  வேண்டாத வேலை எனக்கு.

17.38

நன்றாக எழுதுபவர்கள் உணர்ச்சிகளைத் தேக்கி வைக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். என் கதை வேறு, தொடர்ந்து எதையாவது எழுதினால் மனம் நிதானம் அடைகிறது.

17.01

பொய்யை உண்மையாக்க ஒரே வழி – அதை ரகசியம் என்று சொல்லிவிடுவது தான்.

04.37

Erotic story என்பதை புலனுணர்வுக் கதை என்று எழுதலாமே!

04.25

அவளை புலன் விசாரணை செய்து கொண்டிருக்கிறேன். ஐந்து புலன்களாலும் விசாரிக்கப்பட வேண்டியவள் அவள்.

16.57

அடுத்த தெருவில் உள்ள டாக்டர் கைராசியானவர். ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளுக்கு அவர் செய்யும் முதலுதவி – அவர்களிடமிருந்து 21 கிராம் எடையை குறைத்து விடுகிறார்.

16.25

ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. எந்த ஜாதியை என்பதில்தான் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறார்கள்.

05.01

அவனும் அவளும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டே இருந்தாங்களாம். இந்த நிலையை சேதனன் ‘விழிப் புணர்ச்சி’ என்று எழுதுகிறான்.

03.00

சேதனன் தான் செய்த ஒரு கொலையை தற்கொலை என்று சொல்கிறான். கேட்டால் “தற்செயல் போல் நடந்த கொலை தற்கொலை தானே?” என்கிறான்.

17.12

தன் இஷ்டப்படி வந்து, அதிர வைப்பது – அதிர்ஷ்டம்.

16.29

என்னைப் பற்றிக் கவலைப்பட நானாவது இருக்கிறேனே!

02.09

தெரிந்த பெண் ஒருத்தியின் டைரியை அவளுக்குத் தெரியாமல் படித்துப் பார்த்தேன். ஒரு பக்கத்தில் “ஒரு ராஜகுமாரனைத் தேடி எத்தனை தவளையை கிஸ் பண்ண வேண்டியிருக்கிறது?” என்று எழுதப்பட்டிருந்தது.

03.13

கிறுக்குத்தனத்தை எல்லாம் நான் என்னுள்ளே தங்க விடுவதில்லை. ஒரு ப்ளாக்கும், ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட்டும் வைத்திருக்கிறேன்.

16.46

என் இல்லத்தரசியின் அன்பான உபதேசம் – “இந்த வீட்டு மேல ரொம்ப பற்று வைக்காதீங்க! பெறகு உயிர் போற கடேசி நேரத்துல இந்த வீட்ட விட்டு பிரிய மனசு வராது”.  ’வீடு ரொம்ப குப்பையா இருக்கு, கொஞ்சம் பெருக்கி விடு’ ன்னு தானே சொன்னேன்?

05.01

29 August 2013 – blogல் நான் பகிர்ந்து வரும் திருமந்திரப் பாடல் இன்று 300ஆவது ஆகும். இந்நேரம் 500 வந்திருக்க வேண்டியது. என் சோம்பேறித்தனத்தினால் இப்போது தான் 300 வர முடிந்திருக்கிறது.

04.04

எனக்குத் தெரிந்த பெண் ஒருத்தி தன்னுடைய பொய்களை நன்கு சமைத்து பரிமாறுவாள். பச்சைப் பொய் அவளுக்குப் பிடிக்காது.

05.19

ஷிவானி தன் இரு கைகளையும் விரித்துக் காட்டி “ஒங்க மேல பத்து தப்பு இருக்குப்பா, பத்து தப்பு” என்றாள். நானும் சாவகாசமாக உட்கார்ந்து “என்னென்ன தப்பு? சொல்லு” ன்னு கேட்டேன்.

”ஃபஸ்ட் தப்பு அம்மாவுக்கு வண்டி வாங்கித் தர மாட்டேங்கறீங்க. செகண்ட் தப்பு வீட்ல அத எடுத்து வை, இத எடுத்து வைன்னு ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கீங்க” இப்படியே பதினேழு தப்பு வரை அடுக்கியவள் மூச்சு விடாமல் “இவ்வளவு தப்ப வச்சுகிட்டு என்கிட்ட வந்து பேசுறீங்களே, இது எய்ட்டீன்த் தப்பு” என்றாள்.

03.32

வேலை செஞ்சாத்தான் சோறு என்பது மனித இனத்திற்கு மட்டுமே அமைந்த சாபம்.

பிறக்கவும் காசு வேணும், இறக்கவும் காசு வேணும் என்பது சரி தான். ஆனா ரெண்டுமே நம்ம செலவு கிடையாது, அதனால ரொம்ப கவலைப்பட வேணாம்.

20.10

ஆன்மாவிற்கு உணர்வு நிலை மட்டுமே உண்டு. செயல் நிலை கிடையாது.

சில சமயங்களில் இப்படி கனவு வரும் – ஒரு சூழ்நிலையில் இருந்து தப்பி ஓட வேண்டியிருக்கும், ஆனால் கால் அடி எடுத்து வைக்க வராது. நின்ற இடத்திலேயே ஓட முடியாமல் தவித்து நிற்போம். அது தான் ஆன்மாவின் நிலை.

19.55

எங்கே, எப்போது கலையும் இந்தக் கனவு?

19.33

திருமந்திரம் படிக்க ஆரம்பித்தது பக்தியினாலே! ஆனால் படிக்க படிக்க அதில் உள்ள content நிறைய ஆச்சரியங்களைக் கொடுக்கிறது. இப்போ நான் திருமூலரின் சிஷ்யன்.

19.03

இரண்டு விஷயங்கள் தான் சாத்தியம். ஒன்று கரைந்து காணாமல் போய் விடுவோம், அல்லது வேறு ஏதோவாக மாறிவிடுவோம். இதில் செத்துப் போவது என்றால் என்ன அர்த்தம் என்று புரியவில்லை.

காலம் நம்மைக் கடப்பதில்லை. நாமும் காலத்தைக் கடப்பதில்லை. காலத்துடன் ஒருங்கிணைந்த பயணம் நம்முடையது.

மனிதன் வடிவமைத்த கான்செப்ட்களில் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று கடவுள், மற்றொன்று பணம்.

மனிதன் கண்டுபிடித்த கடவுளை மறுப்பவர்கள் பணத்தையும் மறுப்பது தான் நியாயம்.

கடவுள், பணம் இரண்டுமே உருவமாகவும், அருவமாகவும் அருள் பாலிப்பவை.

முட்டைகள் தங்கள் இனத்தை பெருக்கிக் கொள்வதற்காக கோழிகளை இடுகின்றன.