main

இலக்கியம்

பெரியாழ்வார் எனக்காக எழுதிய பாடல்!

September 18, 2013 — by Rie

நெய்க் குடத்தைப் பற்றி ஏறும்
    எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள்
    காலம் பெற உய்யப் போமின்.
மெய்க் கொண்டு வந்து புகுந்து
    வேதப் பிரானார் கிடந்தார்
பைக் கொண்ட பாம்பு - அணையோடும்
    பண்டு அன்று பட்டினம் காப்பே! - பெரியாழ்வார்.

நெய்க் குடத்தைப் பிடித்து ஏறும் எறும்புக் கூட்டத்தைப் போல, என் உடலெங்கும் பரவி நிற்கும் நோய்களே! தப்பித்து ஓடி விடுங்கள். வேதங்களின் தலைவனான எம்பிரான், தனது பாம்புப் படுக்கையுடன் வந்து என்னுள்ளே வசிக்கிறார். இந்த உடலாகிய ஊர் முன்பு போல் இல்லை, இப்போது பெருமாளின் பாதுகாவல் உள்ளது.

இந்தப் பாடலைப் படிக்கும் போது எனக்காகவே, அதுவும் இந்த சமயத்திற்காகவே எழுதப்பட்டது போல தோன்றுகிறது.

இலக்கியம்விளம்பரம்

நிர்வாகத்திற்கு உதவும் காலண்டர்

September 2, 2013 — by Rie2

ஒரு நல்ல நிர்வாகத்திற்குத் தேவையான பாடங்கள் நமது பழந்தமிழ் இலக்கியமான பழமொழி நானூறு செய்யுள்களில் உள்ளன. அந்தப் பழமொழிகள் இப்போதும் ஒரு வெற்றிகரமான நிர்வாகத்திற்குச் சிறந்த வழிகாட்டியாக உள்ளன. பழமொழி நானூறில் உள்ள சில பாடல்களை காலண்டராக வடிவமைத்திருக்கிறோம். எழுத்தாளர் என். சொக்கன் அவர்கள் பழமொழிச் செய்யுள்களுக்கு எளிமையாகவும் ரசிக்கும்படியாகவும் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உரை எழுதியிருக்கிறார். இந்தக் காலண்டர்கள் 2014 புது வருட தினம் அன்று தங்கள் நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்றவையாகும். காலண்டர் தேவைப்படுபவர்கள் sales@scribblers.in க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். தங்கள் நண்பர்களுக்கும் சிபாரிசு செய்யுங்கள். மேலும் விபரங்களுக்கு http://scribblers.in

Calendar_2014
January_2014
July_2014
Page_15

இலக்கியம்

கொறிக்க கொஞ்சம் கலித்தொகை

August 16, 2013 — by Rie

08.51

நமக்குத் தெரிந்த ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி எழுதச் சொன்னால் நம்மால் இரண்டு வரிகளுக்கு மேல் எழுத முடியாது. தெரிந்த விஷயங்களில் நம்மை வியக்க வைக்கும் அளவுக்கு ஆச்சரியங்கள் இராது. ஆமாம் இதிலென்ன இருக்கிறது என்கிற ஒரு மனோபாவம் இருக்கும். ஆனால் புரிந்து கொள்ள முடியாத விஷயங்கள் ஏற்படுத்தும் சுவாரசியங்கள் அதிகம். அவை ஏற்படுத்தும் கற்பனைகள் மாயசக்தி கொண்டவை. எழுத எழுத நிறைய விஷயங்கள் வந்து விழுந்து கொண்டே இருக்கும்.

எனக்கு எதைப் பற்றியும் இரண்டு வரிகளுக்கு மேல் எழுத முடிவதில்லை. ஏனென்று சொல்ல தன்னடக்கம் தடுக்கிறது.

17.27

பழந்தமிழாக இருந்தாலும், கலித்தொகையில் சொற்கள் தொடுக்கப்படுள்ள விதம் வசீகரமானவை.

இடன் இன்றி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு’ என,
கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ?

06.14

முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரைக்
கள்ளினும் மகிழ்செயும் என உரைத்தும் அமையார்.

“என் கூர்மையான பற்களிடையே ஊறும் நீர் கள்ளை விட போதை தருகிறது என்று சொன்னவனுக்கும் இன்னும் ஆவல் தணியவில்லை.” கலித்தொகையில் தலைவி சொல்வது. இது எப்படி இப்போது French kiss எனவும் English kiss எனவும் அழைக்கப் படுகிறது என்று புரியவில்லை, என்னவோ வெளிநாட்டுக்காரர்கள் தான் வந்து இதெல்லாம் சொல்லிக் கொடுத்த மாதிரி.

தீ நீர் என்று சொல்லப்பட்டிருப்பது கூடுதல் கிக்.

17.55

 ‘கணிச்சியோன்’ – அப்படின்னா சிவபெருமான்னு அர்த்தமாம். (கணிச்சி – மழு) மழு என்னும் ஆயுதத்தை கையில் ஏந்தியவன்!

02.25

கூறாமல் குறித்ததன் மேல் செல்லும்

கடவுள் வாழ்த்தில் வரும் வரி இது. சில உயர்ந்த விஷயங்களை மனத்தில் உணர முடியும், ஆனால் சொல்லிலோ எழுத்திலோ அவற்றை வெளிப்படுத்த முடியாது. ‘அதை சொல்ல வார்த்தை இல்லை’ ன்னு சொல்லுவோம். இந்தப் பாடலில் சொல்லப்படுவது ‘கடவுள் மனத்தில் நினைத்துப் பார்க்கும் அளவை விட மேலானவர்!’ இப்படிச் சொல்லலாம் – ‘கடவுளைப் பற்றிச் சொல்ல வார்த்தையும் கிடையாது. அவரை உணரும் சக்தி மனத்திற்கும் கிடையாது.

ஆங்கிலத்தின் GOD என்னும் சொல்லுக்கு ‘That which is’ என்றொரு விளக்கம் சொல்கிறார்கள். நம்மவர்கள் ‘இல்லை! இல்லை! கடவுள் அதற்கெல்லாம் மேலே! இது தான் கடவுள் எனச் சுட்டிக் காட்ட முடியாத பொருள் அவர்’ எனச் சொல்கிறார்கள்.

17.46

சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும், அஞ்சும் நறுநுதல் …

தலைவியின் தோழி தலைவனிடம் சொல்கிறாள் – “நீ சிறிது நேரம் அதிகமாக உறங்கினால் கூட இவனுக்கு ஏதும் உடல்நலக் குறைவோ? என்று பயப்படக் கூடியவள் அழகிய நெற்றி கொண்ட தலைவி”.

இலக்கியம்கட்டுரை

பொருள் கொடுத்து இருள் வாங்கலாமா?

June 18, 2013 — by Rie1

பழமொழி நானூறு பற்றிய என்னுடைய பதிவுகளின் நோக்கம் பழம்பெருமை பேசுவதல்ல, இலக்கியம் பற்றி பேசுவதும் அல்ல. நான் இந்த நூலை சுய முன்னேற்றப் புத்தக வரிசையில், ஒரு சிறந்த நூலாகப் பார்க்கிறேன். நிறைய சுய முன்னேற்ற நூல்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன, எவ்வளவு சிறப்பான நூலாக இருந்தாலும் அவற்றில் ஒரு அன்னியத் தன்மையை உணர முடியும். ஆனால் இவை நமது மொழியிலேயே எழுதப்பட்டவை, ஆயிரக்கணக்கான வருடங்களாக நமது மக்களின் பேச்சு வழக்கில் இருந்த பழமொழிகள் இவை.

பழமொழி நானூற்றில் உள்ள பொருட் செறிவைப் பற்றி ஆராயும் பொறுப்பை உங்களிடமே விடுகிறேன். பாடலுக்கு நான் எழுதியிருக்கும் விளக்கங்கள் ஒரு சின்ன வழிகாட்டி, அவ்வளவு தான். விளக்கத்தைப் படித்த பின் மறுபடியும் பாடலைப் படித்துப் பாருங்கள், உங்கள் வாழ்க்கை அனுபவத்திற்கு ஏற்ப இன்னும் பல நுணுக்கமான பொருள்கள் விளங்கும். இந்த நூலில் உள்ள நானூறு செய்யுள்களும், நம் முன்னோர்களின் பல ஆயிரம் வருட வாழ்க்கை அனுபவங்களின் சாரம், அதனால் இதன் பொருள் புரியும் போது பாடல்கள் எல்லாம் மனதிற்கு நெருக்கமாகி விடும். கொஞ்சம் மெனக்கெட வேண்டும், அவ்வளவு தான். பலாப்பழத்தை வெட்டி சுளை எடுப்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் சுளையின் ருசி?

இந்தக் கட்டுரையில், பழமொழி நானூற்றில் கல்வி என்னும் தலைப்பில் உள்ள பத்து பாடல்களைப் பற்றி பார்க்கிறோம். ‘Empty your cup’ என்று ஒரு ஜென் மொழி உண்டு. கிட்டத்தட்ட அதே பொருளில் ஒரு பழமொழியும் உண்டு – ‘கற்றொறுந்தான் கல்லாத வாறு’. கற்றலின் போது ஏன் அப்படி தமக்கு எல்லாம் தெரியும் என்கிற மனநிலையை விலக்க வேண்டும் என்பதற்கும் பாடலில் விளக்கம் உண்டு. பாடல்களைப் பார்ப்போம் இப்போது.

ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார்.

1. ‘சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லை.’ 2. ‘மரம் போக்கிக் கூலி கொண்டார் இல்லை.’ – இவை இந்தப் பாட்டில் வந்த பழமொழிகள். இளமையில் கல்வி கல்லாதவன் முதுமையில் கற்பது கடினம்! சுங்கச் சாவடியில் வரும் வண்டிகளை போக விட்ட பிறகு வரி வசூல் செய்ய முடியுமா? ஆற்றைக் கடக்க உதவும் ஓடக்காரன், ஆற்றைக் கடந்த பின் பயணிகளிடம் காசு வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தால் காசு வந்து சேருமா? இளமை இருக்கும் போதே முடிந்த அளவு கல்வி கற்று விட வேண்டும்.

சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித் துழன்றொன் றறியுமேல்
கற்றொறுந்தான் கல்லாத வாறு.

கற்றறிந்த ஆசிரியர் முன்பு, கல்வி கற்கும் மாணவர்கள் நமக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலையை தவிர்க்க வேண்டும். தன்னுடைய பாடத்தில் கவனத்தைக் குவித்துப் பொருள் அறிந்து கற்க வேண்டும். ‘கற்றொறுந்தான் கல்லாத வாறு’ என்பது பழமொழி. நிறைய விஷயங்கள் தெரிந்த மாதிரி பெரியவர்களிடம் நாம் பேசினால், அவர்களும் நம்மிடம் அது பற்றி விரிவாக பேசுவார்கள். அப்போது எங்கே ஏதாவது ஏடாகூடமாக பதில் சொல்லி மாட்டிக் கொள்வோமோ என்ற பயமே நமக்கு சோர்வைக் கொடுக்கும். அந்த மனநிலையை தவிர்த்தால் பாடத்தில் கவனமும் குவியும்.

விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்
துளக்கமின் றென்றனைத்தும் தூக்கி விளக்கு
மருள்படுவ தாயின் மலைநாட என்னை
பொருள்கொடுத்துக் கொள்ளா ரிருள்.

விளக்கிற்கு வேண்டிய நெய் முதலியவற்றை விலை கொடுத்து வாங்குவது, அந்த விளக்கு இருள் நீக்கி தெளிவான காட்சி காட்ட வேண்டும் என்பதற்காக. நாம் கற்கும் கல்வி, அறிவு வெளிச்சத்தைத் தருவதாக இருக்க வேண்டும். ‘பொருள் கொடுத்து கொள்ளார் இருள்’ என்பது பழமொழி.  கற்கும் கல்வி நேர்மையான நல்ல விஷயத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும். யாராவது காசு கொடுத்து இருட்டை வாங்குவார்களா? எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால், சாஃப்ட்வேர் எழுதுபவர்கள் புரோகிராமும் எழுதலாம், வைரஸும் எழுதலாம். படித்த படிப்பெல்லாம் வைரஸ் எழுதத்தானா?

ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.

நன்கு கற்ற அறிவுடையவர்கள், உலகில் எந்த நாட்டிற்குச் சென்றாலும், அவர்களின் கல்வி அறிவுக்கு அங்கு நல்ல வரவேற்பிருக்கும். அவர்களுக்கு அங்கு உணவு பற்றிய கவலை தேவையில்லை. கற்றாருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. ‘ஆற்று உணா வேண்டுவது இல்’ என்பது பழமொழி. நிறைந்த கல்வி கற்றவர்கள் பல நாடுகளுக்குச் சென்று வருவார்கள், அவர்களுக்கு அது வேறு நாடு என்ற தயக்கமெல்லாம் இருக்காது. தம் திறமையினால் நிறைய சம்பாதிக்கவும் செய்வார்கள், அதனால் அவர்களுக்கு உணவு பற்றிய கவலையெல்லாம் கிடையாது.

உணற்கினிய இன்னீர் பிறிதுழிஇல் லென்னும்
கிணற்றகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா தினிதோதிக்
கற்றலிற் கேட்டலே நன்று.

கிணற்றில் வாழும் தேரை, இந்தக் கிணறு தவிர வேறு எங்கும் நல்ல நீர் கிடைக்காது என்று நினைக்கும். கல்வி கற்கும் மாணவர்கள், அது போல் இல்லாது, தாம் கற்கும் நூல்களைத் தவிர பிற நூல்களைப் பற்றியும் கேட்டு அறிவதே நல்லது. ‘கற்றலிற் கேட்டலே நன்று’ என்பது பழமொழி. புத்தகங்களை  படிப்பதோடு நின்று விடாமல், விஷயம் தெரிந்தவர்களுடன் உரையாடுவதன் மூலம் அறிவை வளர்த்துக் கொள்வது நல்லது.

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.

‘சிறுவனான இவனுக்கு வழக்கு முடிவு சொல்லத் தெரியாது’ என நினைத்தவர்களுக்கு மத்தியில் நரைமுடியுடன் வயதான வேடத்தில் வந்து வழக்கு தீர்த்தவன் கரிகாற் பெருவளத்தான் என்னும் சோழன். ‘குலவிச்சை கல்லாமல் பாகம் படும்’ என்பது பழமொழி. ஒருவன் கற்கும் கல்வி, தன் குடும்பத்தினரின் தொழில் சம்பந்தப்பட்டதாக இருந்தால் அந்தக் கல்வி மிகவும் எளிதாக இருக்கும்.

புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புன லூர பொதுமக்கட் காகாதே.
பாம்பறியும் பாம்பின கால்.

சிறந்த கல்வி அறிவுடையவரின் திறனை, பிற அறிஞர்கள் எளிதாக  அடையாளம் கண்டு உணர்வார்கள். ‘பாம்பறியும் பாம்பின் கால்’ என்பது பழமொழி. கல்வியறிவு இல்லாதவர்களுக்கு கற்றவர்களுடைய அறிவின் தன்மை விளங்காது.

நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல
மயிலாடு மாமலை வெற்பமற் றென்றும்
அயிலாலே போழ்ப அயில்.

ஒரு இரும்பை இன்னொரு கூர்மையான இரும்பைக் கொண்டுதான் பிளக்க முடியும். அது போல நன்கு கற்ற ஒருவரின் கண்ணோட்டத்தை, அவரை விட நன்கு கற்றவராலேயே உணர முடியும்.  ‘அயிலாலே போழ்ப அயில்’ என்பது பழமொழி. நல்லார் என்பதற்கு கற்றார் என்பது இங்கே பொருள். நலம் என்பதற்கு கண்ணோட்டம் என்றும் பொருள் உண்டு.

கற்றறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பர் - தெற்ற
அறைகல் அருவி அணிமலை நாட!
நிறைகுடம் நீர்தளும்பல் இல்.

முழுமையான கல்வி கற்றவர்கள், தம்மைத் தாமே புகழ்ந்து கொள்ள மாட்டார்கள், அடக்கமாக இருப்பார்கள். முழுமையாகக் கற்காதவர்கள் தான் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வார்கள். ‘நிறைகுடம் நீர் தளும்பல் இல்’ என்பது பழமொழி. கற்றவவர்களின் அடக்கத்தின் பின்னால் இருக்கும் திறமைகள், அரைகுறைகளுக்குப் புரியாது.

விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை யில்லார்
கதிப்பவர் நூலினைக் கையிகந்தா ராகிப்
பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல்
மதிப்புறத்துப் பட்ட மறு.

தரம் குறைந்த நூல்களை நாடாமல், நல்ல நெறிகளைப் படித்து உணர்ந்து அதன்படி நடப்பவர்கள் அதிகாரத்துடன் வாழ்வார்கள். அவர்கள் கொஞ்சம் கீழ்த்தரமாக நடந்தால் கூட நிலாவில் உள்ள கறை போலப் பெரிதாகத் தெரியும். ‘மதிப்புறத்துப் பட்ட மறு’ என்பது பழமொழி.

இலக்கியம்

கண்ணனுக்குப் பிடித்த உணவுகள்

June 9, 2013 — by Rie

ஆண்டாள் இயற்றிய பாடல்களில் பக்தியும் காதலும் அதிகம் இருந்தாலும், இந்தப் பாடல் வேறு ஒரு உணர்வை வெளிப்படுத்துகிறது. இதுவும் ஒரு வித காதல்தான், நாம் நம் குடும்பங்களில் உணர்கிற, பார்க்கிற விஷயமாக இருப்பதால் இந்தப் பாடல் ரொம்பவே பிடித்து விட்டது. என்னுடைய சிறு வயதில், வீட்டில் அம்மா அப்பாவுக்கு சாப்பாடு பரிமாறி விட்டு, அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பார், சமையல் பிடிச்சிருக்கா இல்லையா என்று தெரிந்து கொள்ள. அது தான் ஞாபகம் வருகிறது இந்தப் பாடலைப் படிக்கும் போது.

கார்த்தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடு கின்றன வென்னைவந்திட் டிருடீகே சன்பக்கல் போகேயென்று
வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டடிசி லுண்ணும் போதுஈதென்று
பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும் பத்தவி லோசநத் துய்த்திடுமின்.

இதற்கு உரையாசிரியர்கள் சொல்லும் உரை தவிர்த்து, நான் கொஞ்சம் வேறு மாதிரி பொருள் கொள்கிறேன்.

“குளிர்ந்த கறு மேகமும், கருவிளைப் பூவும், காயாம்பு மலரும், தாமரை மலரும் என்னை ஈர்க்கின்றன. அவை ‘நீயும் கண்ணபிரான் பக்கம் போ’ என்று சொல்வது போல் உள்ளது. கண்ணன் தன்னுடைய அன்றாடப் பணியினால் வேர்த்து, வயிறு பசி எடுத்து வந்து சாப்பிடும் நேரம், அவன் அருகில் அமர்ந்து என்னவெல்லாம் விரும்பிச் சாப்பிடுகிறான் என்று பார்த்துக் கொண்டேயிருப்பேன்” என்று ஆண்டாள் சொல்கிறார். “அப்படி ஒரு பக்திப் பார்வை பார்க்கும் அனுபவத்தை எனக்குக் கொடு” என்று கண்ணனிடம் கேட்கிறார்.