நீரில் கலந்த பால் போல் நம்மில் கலந்திருக்கிறான்!

ஆரும் அறியாத அண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே.  – (திருமந்திரம் – 450)

விளக்கம்:
இந்த உலகின் மொத்த வடிவமே சிவபெருமானின் திருவுருவமாகும். அதனால் அவன் உருவத்தை யாராலும் காண முடியாது. பூமி முதலான ஐந்து பூதங்களால் ஆன இந்த உடலில் சிவபெருமான் நீரில் கலந்த பால் போல, பிரிக்க முடியாதவாறு கலந்திருக்கிறான். அவனது அந்த அருள் தரும் தன்மையை நாம் மனச்சோர்வினால் மறக்கக்கூடாது. சிவபெருமான் நம் உடலிலும் உயிரிலும் கலந்திருக்கிறான் என்பதை நாம் எப்போதும் உணர்ந்திருந்தால், இடையறாத இன்பம் பெறலாம்.


ஞானமே வடிவானவன்!

உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்ணின்ற மாமணி மாபோத மாமே.  – (திருமந்திரம் – 449)

விளக்கம்:
சிவபெருமான் நம்முள்ளே ஒளி விடும் சோதியாகவும், நம் உயிருடன் பொருந்தி இருக்கும் உடலாகவும் விளங்குகிறான். விண்ணில் வாழும் தேவர்கள் விரும்பும் மேலான பொருளாகவும், இந்த மண்ணுலகில் வாழும் பக்தர்களால் புகழப்படும் திருமேனியனாகவும் அவனே விளங்குகிறான். மிகப்பெரிய ஞான வடிவமாக விளங்குபவன் நம் சிவபெருமான்.


மிக அகலமானவன்!

அகன்றான் அகலிடம் ஏழுமொன் றாகி
இவன்றா னெனநின் றெளியனும் அல்லன்
சிவன்றான் பலபல சீவனும் ஆகி
நவின்றான் உலகுறு நம்பனு மாமே.  – (திருமந்திரம் – 448)

விளக்கம்:
சிவபெருமான் ஏழு உலகங்களையும் தனக்குள் அடங்கி இருக்கச் செய்கின்றவன். அவ்வளவு அகலமான உருவத்தை உடையவன் அவன். இவன் தான் கடவுள் என எளிதில் சுட்டிக் காட்ட முடியாத அரியவன் அவன்! அவனே இந்த உலகில் எல்லா உயிர்களிலும் கலந்திருக்கிறான். உலகின் ஒரே நம்பத் தகுந்தவனான நம் சிவபெருமான் நமக்களிக்கும் உபதேசத்தைக் கேட்டுப் பயன் பெறுவோம்.


அனைத்துக்கும் ஆதாரமானவன்!

ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம்
ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழி
ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
ஆதி படைத்தவை தாங்கிநின் றானே.  – (திருமந்திரம் – 447)

விளக்கம்:
முதன்மையானவன் ஆன சிவபெருமானே இந்த உலகின் ஆதாரமான ஐந்து பூதங்களைப் படைத்தான். அவனே பல யுகங்களைப் படைத்து அருள் செய்தான். எண்ணில்லாத தேவர்களைப் படைத்தவன் நம் சிவபெருமானே! அவன் தான் படைத்த அனைத்தையும் அருள் செய்து காக்கின்றான்.


படைத்தவன் அவனே! ஆள்பவனும் அவனே!

படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.  – (திருமந்திரம் – 446)

விளக்கம்:
சிவபெருமான் ஏழு உலகங்களையும் படைத்து அவற்றை எல்லாம் தன்னுடைய உடைமையாகக் கொண்டான். வானுலகில் உள்ள தேவர்களை எல்லாம் படைத்தவன் அவனே! அவர்களை எல்லாம் ஆள்பவனும் அவனே! இந்த உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் அவனே படைத்து ஆள்கிறான். எல்லாவற்றையும் படைத்தவன் நம் சிவபெருமான் என்பதால், அவனே மேலானவனாகிறான்.


நான் அவன் விருப்பத்திற்கு உரியவன்!

உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.  – (திருமந்திரம் – 445)

விளக்கம்:
சிவபெருமான் ஏழு உலகங்களையும் தன்னுடைய விருப்பத்தினால் படைத்தான். பல யுகங்களையும் விரும்பிப் படைத்தான். மண், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களையும் விரும்பியே படைத்தான். இந்த உடலும் உயிரும்  படைக்கப் பட்டதும் அவன் விருப்பப்படியே !

நாமெல்லாம் சிவபெருமானின் விருப்பத்திற்கு உரியவர்களே.


சிவபெருமானின் எண்குணங்கள்

விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப்
படையுடை யான்பரி சேஉல காக்குங்
கொடையுடை யான்குணம் எண்குண மாகுஞ்
சடையுடை யாஞ்சிந்தை சார்ந்துநின் றானே.   – (திருமந்திரம் – 444)

விளக்கம்:
சிவபெருமானை யாருடனும் ஒப்பிட முடியாது. அவனை யாரும் படைக்கவில்லை, அவன் தான் அனைத்தையும் படைக்கிறான். அதனால் தான் அவனை நாம் விகிர்தன் என்று அழைக்கிறோம். அந்த விகிர்தன் காளையை ஊர்தியாகக் கொண்டவன், மிகுந்த பூதப் படைகளைக் கொண்டவன். நமக்கெல்லாம் அவன் கொடுத்தப் பரிசே இந்த உலகம். எட்டு குணங்களைக் கொண்ட நம் சிவபெருமான் நாம் வேண்டியவற்றை எல்லாம் அருளும் கொடைத்தன்மை உடையவன். அவன் நம் சிந்தையில் எப்போதும் இருக்கிறான்.

சிவபெருமானின் எட்டு குணங்கள் –
1. தன் வயத்தன்
2. தூய உடம்பினன்
3. இயற்கை உணர்வினன்
4. முற்றும் உணர்ந்தவன்
5. பாசங்களை விட்டு நீங்கியிருப்பவன்
6. பேரருள் உடையவன்
7. முடிவில்லாத ஆற்றல் உடையவன்
8. வரம்பில்லாத இன்பம் உடையவன்


உயிர்கள் விதவிதமாய் இருந்தாலும் …

குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்
குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்
அசைவில் உலகம் அதுயிது வாமே.   – (திருமந்திரம் – 443)

விளக்கம்:
குயவன் தான் செய்யும் பாத்திரங்களை எல்லாம் ஒரே மாதிரி செய்வதில்லை. சக்கரத்தில் ஏற்றும் மண்ணைக் குயவன் தன் மனம் போனபடி விதவிதமான வடிவங்களில் பாத்திரமாகச் செய்வான்.  விதவிதமானப் பாத்திரங்களை அவன் செய்தாலும், சக்கரத்தின் இயக்கம் ஒன்று போலவே இருக்கும். அது போலவே, நம் தலைவனான சிவபெருமான் விதவிதமான உயிர்களைப் படைத்தாலும், குயவனின் சக்கரம் போல் இந்த உலகம் இயங்கும் விதம் நிலையானதாக இருக்கும்.


நம் சிந்தையை உச்சியில் நிறுத்துவோம்!

உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
தச்சு மவனே சமைக்கவல் லானே.   – (திருமந்திரம் – 442)

விளக்கம்:
நமது உச்சந்தலைக்கு மேல் விளங்கும் ஒளி மிகுந்த நாதத்தை விரும்பித் தியானித்திருந்தால், நமக்கு இறப்பு என்பதே கிடையாது. (அதாவது நம்முடைய இறப்பு மற்றவர்களுடையது போல் துன்பம் மிகுந்ததாக இருக்காது). அனைத்தையும் விஞ்சும் சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று சுடர்களைத் தைத்து, இந்த உலகில் உயிர்களை எல்லாம் படைக்கிறான், எல்லாம் வல்ல நம் சிவபெருமான்.


உயிரை உடலோடு கட்டுவான், பின்பு அவிழ்ப்பான்

எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர்நிலை என்னுமிக் காயப்பை
கட்டி அவிழ்ப்பான் கண்ணுதல் காணுமே.   – (திருமந்திரம் – 441)

விளக்கம்:
எட்டுத்திசையும் வீசுகின்ற காற்றோடு, வட்ட வடிவமாய் உள்ள கடல் நீர், அக்னி, நிலம், வானம் ஆகியவற்றைச் சேர்த்து ஐம்பூதங்களால் நம் உயிரையும் உடலையும் ஒன்றாகக் கட்டி வைத்திருப்பவன், நெற்றிக்கண்ணை உடைய நம் சிவபெருமான் ஆவான். கட்டிய உயிரையும் உடலையும் அவிழ்ப்பவனும் அவனே!