சொரிமுத்து ஐயனாரின் மகிமை (உண்மைச் சம்பவம்)

“பாபநாசத்துக்குப் போகனும்” என்று உத்தமவில்லி சொன்ன போது கோபமாக வந்தது. அந்தப் படத்தைப் பார்த்து விட்டு அப்போது தான் வெளியே வந்திருந்தோம். “இல்ல! படம் பாத்துட்டு பாபநாசம் அருவிக்குப் போகணும் போல இருக்கு” என்றார். நல்லவேளையாக பாகுபலிக்கு கூட்டிப் போகவில்லை. அந்த வார ஞாயிற்றுக்கிழமையே பாபநாசத்துக்கு கிளம்பியாயிற்று.

செல்லும் வழியில் திட்டத்தில் சின்ன மாறுதல். மணிமுத்தாறு அருவி குழந்தைகள் குளிக்க வசதியாக இருக்கும் என்று. மணிமுத்தாறு அருவியில் குளித்து விட்டு பாபநாசம் மலையேறி காரையார் அணைக்குப் போகும் வழியில் உள்ள சொரிமுத்து ஐயனார் கோவிலுக்கு போன போது காரை பார்க் செய்ய இடம் கிடைக்கவில்லை. அவ்வளவு வேன்கள்! இவ்வளவு கூட்டத்தில் ஐயனாரை பெர்சனலாக பார்க்க முடியாதே எனக் கவலையாக இருந்தது. கோவிலுக்கு உள்ளே போய்ப் பார்த்த போது தான் தெரிந்தது, அவ்வளவு கூட்டமும் கோவிலுக்கு வெளியே சமையலில் பிஸி என்பது.

கோவிலில் கூட்டம் இல்லை, செல்ஃபோனில் சிக்னல் இல்லை. இதைவிட வேறென்ன நிம்மதி வேண்டும்? காட்டுக்குப் போனால் நாட்டில் உள்ள பிரச்சனை எல்லாம் மறந்துதான் போகிறது. நல்ல தரிசனம். பூரணை, புஷ்கலை ஆகியோருடன் இருந்ததால் ஐயனார் சாந்தமாகக் காணப்பட்டார்.

போதுமான நேர தரிசனத்துக்குப் பிறகு பிரகாரத்தைச் சுற்றி வந்தபோது அந்தப் பெண் என் கவனத்தை ஈர்த்தார். காரணம் color, texture and glossiness எல்லாமே சரியான அளவில் அமைந்திருந்தது, அவர் படையலுக்கு எடுத்து வைத்துக்கொண்டிருந்த சர்க்கரைப் பொங்கலில். பொங்கலைப் பொறுத்தவரை, ருசி பார்க்காமல், கண்ணால் பார்த்தே சொல்லி விடலாம் அதன் தரத்தை. அந்தப் பெண் எடுத்து வைத்த பொங்கலின் நிறமும் தளதளப்பும் என் ஐம்புலன்களையும் சோதித்தது.

ஐயனாரை நினைத்துப் பொறாமைப்பட்டவாரே பிரகாரத்தைச் சுற்றி வந்தேன். எதிலுமே மனம் செல்லவில்லை. நினைவு பூராவும் அந்தப் பொங்கல் தான். மனத்தைத் தேற்றிக்கொண்டு வந்து சிறிது நேரம் தியானம் செய்தேன். தியானத்தில் பொங்கலெல்லாம் கரைந்தது. கண் விழித்த போது உத்தமவில்லி ஒரு சிறிய வாழை இலையை என் கையில் வைத்தார். இலையில் நான் பார்த்து ரசித்த அதே பொங்கல்!

ஐயனார் அருள் சொரிவதைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று தான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.