நாடு தாங்காதுடா டே!

“ஒரு ரெண்டு வருஷம் அப்பிடி இப்பிடி கஷ்டமாத்தான் இருக்கும். அப்புறம் அஞ்சு வருஷம்” கொஞ்சம் நிறுத்தி விட்டு சொன்னார் “நீ ரொம்ப கஷ்டப்படுவ” நூத்தியோரு ரூவா வாங்கிய அந்த கைரேகைக்காரர். கருமாரி அம்மன் கோயில் பக்கத்தில் இருப்பவர்.

“ஒம் மவன் ஜாதகம் தான் ஓன் கஷ்டத்துக்கெல்லாம் காரணம். அவன் பெறந்து ரெண்டு வருஷம் வரை அவன் மொகத்த நீ பாக்கக் கூடாதுன்றது தான் பரிகாரம். இப்ப ஒண்ணும் கெட்டு போகல, ஒரு சாந்தி ஹோமம் பண்ணனும். ஐயாயிரம் ஆகும்” இவர் ஒரு ஜாதக நிபுணர். இந்தா பிடி நூத்தியொண்ணு. ஆள விடு.

“நாப்பது வயசில நீ அரசியலுக்கு வருவ. அதுல பெரிய ஆளாயிடுவ.” நாடு தாங்காதுப்பா!

“அய்யர் பொண்ணு மாதிரி ஒரு பொண்ணு வருவா வீட்டுக்காரியா.” என்னத்த சொல்ல?

“பல தொழில் செஞ்சி பல வழில வருமானம் வரும்.” ஒரு தொழிலே ஒழுங்கா செய்ய முடியல.

இது வரை பார்த்ததிலே அந்த திருவண்ணாமலை கைரேகைக்காரர் வித்தியாசமாய் சொன்னார் “இந்த கைல பாக்குறதுக்கு என்ன இருக்கு! எல்லாமே நல்லா இருக்கு. நீ காசு குடுக்காட்டியும் பரவால்ல, போயிட்டு வா.” அஞ்சு ரூபா கொடுத்திட்டு நகர்ந்தேன்.

தெரிஞ்ச ஒரு அக்காவின் பொண்ணுக்கு ஒரு மாப்பிள்ளை சிபாரிசு செய்தேன் “ஏன்யா! ஜாதகம் பாத்த ஜோசியரு மாப்பிள வடகிழக்கு தெசைலருந்து வருவாருன்னு சொன்னாங்க. நீங்க சொல்றது தெற்கு பக்கமால்ல இருக்கு? வேணாம்யா.”

காய்ச்சலா இருக்குதுன்னு பக்கத்தில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு போய் பூசாரிகிட்ட விபூதி கேட்டேன். “கோவிலுக்கு ஒரு மணி வாங்கி மாட்டு. எல்லாம் சரியாப்போவும்.” முனீஸ்வரா!

நண்பர் ஒருவர் சொல்வார் “எந்த நியூமராலஜிஸ்ட்டாவது ஒருத்தன் கிட்ட உன் பேர் சரியாயிருக்கு. ஒண்ணும் மாத்த வேண்டியதில்லைன்னு சொல்லியிருக்காரா? எனக்கு தெரிஞ்சி நிறைய பிரபலங்கள் நியூமராலஜி பார்த்து பேர் மாத்தின பிறகு அவங்க புகழ் குறைய ஆரம்பிச்சிருக்கு. பேரெல்லாம் சொல்ல மாட்டேன். நீயே யோசிச்சிக்கோ.” நமக்கு அந்த அளவு பொது அறிவெல்லாம் கெடையாதுங்க.

எங்க கல்யாணம் ராசி, பொருத்தம் எதுவும் பாக்காம நடந்தது. இப்போ கம்யூட்டர்ல ரெண்டு பேரு ஜாதக விவரம் கொடுத்து பொருத்தம் பார்த்தா, பொருந்தலையாம். Not advisableங்குது. வருஷம் பதினாலு ஆகிப்போச்சு கல்யாணம் பண்ணி.

கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு குறி சொல்ற பெண் வீட்டு வாசல்ல வந்து குடிக்க தண்ணி கேட்டுச்சு. வீட்டுக்காரி சொம்புல தண்ணி கொண்டு வந்து குடுத்தா. அந்த பெண் தண்ணி குடிச்சிட்டு “நீ நல்லா இருப்பம்மா. புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் பிரியாம ஒத்துமையா இருப்பிங்கம்மா”னுச்சு. வீட்டுக்காரி அவளை ஒரு விரட்டு விரட்டினாள் “ஏம்மா குடிக்க தண்ணி குடுத்தா சாபமா குடுக்குற? சொம்ப கீழ வச்சிட்டு எடத்த காலி பண்ணு.”

அந்த பெண்ணுக்கு வேர்த்து விட்டது. பயந்துகிட்டே யோசிச்சவளுக்கு குபுக்குனு சிரிப்பு வந்து, சிரிக்கலாமா கூடாதான்னு புரியாம திருதிருன்னு முழிச்சுகிட்டு சிரிப்பு அடக்க முடியாம ஓடியே போயிருச்சு.

2 thoughts on “நாடு தாங்காதுடா டே!

  1. “ஏம்மா குடிக்க தண்ணி குடுத்தா சாபமா குடுக்குற? சொம்ப கீழ வச்சிட்டு எடத்த காலி பண்ணு.”

    என்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை
    சுவாரஸ்யமான பதிவு
    வாழ்த்துக்கள்

  2. “எங்க கல்யாணம் ராசி, பொருத்தம் எதுவும் பாக்காம நடந்தது. இப்போ கம்யூட்டர்ல ரெண்டு பேரு ஜாதக விவரம் கொடுத்து பொருத்தம் பார்த்தா, பொருந்தலையாம். Not advisableங்குது. வருஷம் பதினாலு ஆகிப்போச்சு கல்யாணம் பண்ணி”

    This matches for me!!!!!!!!!!!!!.

Comments are closed.