தமிழனின் பெருமை சொல்லும் சினிமாக் கதை

அன்றைய விடியற் பொழுது அந்த கிராமத்துக்கு அவ்வளவு சிறப்பானதாய் இல்லை. காலையில் அந்த ஊர் மாரியம்மன் கோவிலுக்குப் போன பூசாரியால் பூட்டை திறக்க முடியவில்லை. அது திருவிழா நடந்து கொண்டிருந்த சமயங்கிறதுனால என்னவோ ஏதோன்னு கூட்டம் கூட ஆரம்பிச்சிருச்சு. ‘பூசாரிக்கு கைல வலு இல்லை போல’ன்னு கேலி பண்ணி ஆளாளுக்கு வந்து திறக்க முயற்சி பண்ணினாங்க. எப்படி எப்படியோ சாவியை திருகி பார்த்தாங்க, எதுக்கும் பூட்டு அசைஞ்சு கொடுக்கலை.

ரொம்ப நேர முயற்சி பண்ணினதுக்கு அப்புறம் பூட்டு ரிப்பேர் செய்யுற காதர் பாயை கூப்பிட முடிவாச்சு. முப்பது வருஷத்துக்கு மேலாக அதே தொழிலாக உள்ள பாய் வந்தவுடன் இதோ பூட்டு திறந்தாச்சுன்னு தான் எல்லாரும் நெனச்சாங்க. கால் மணி நேரம் அரை மணியாச்சு, ஒரு மணி நேரம் ஆச்சு, ஒண்ணும் முடியல. பாய் “பூட்டுல ஒண்ணும் பழுதில்ல. சாவியும் சரியாதான் பிடிக்குது. என்னன்னே புரியலை” ன்னார். கூட்டத்தில கொஞ்சம் பரபரப்பும் நிறைய கிசுகிசுப்பும் பரவ ஆரம்பிச்சுது. ஏதோ சாமி குத்தம்ன்னு ஒரு பரவலான அபிப்பிராயம் உருவாயிற்று.

“பூட்ட ஒடைக்கிறத தவிர வேற வழியில்ல” பாய் சலிப்பாய் சொன்னார்.

“நீங்க ஒடைக்க வேணாம் பாய். ஒரு முஸ்லிம் இந்து கோயில ஒடச்சான்னு சொல்வாங்க” பெரிசு ஒண்ணு தன் கடமையை நினைவு படுத்திக் கொண்டது.

பிறகு லேத் வேலை செய்யும் மாரியப்பனை கூப்பிட்டு கோவில் பூட்டை உடைக்கச் சொன்னார்கள். வெட்டிரும்பும் சுத்தியலுமாய் வந்த மாரியப்பன் கோவில் வாசல் பக்கம் வந்ததும் கொஞ்சம் தயங்கினான்.

“ஏலேய் ஒண்ணும் தப்பில்லேல! திருலா நேரம் இப்படி கோவில பூட்டி வைக்கக் கூடாது. சாமி காரியம்னு நெனச்சு ஒட” இது இன்னொரு பெருசு. அவருக்கென்ன?

பயபக்தியுடன் மாரியம்மனை கும்பிட்டு விட்டு வெட்டிரும்பை பூட்டின் மேல் வைத்து சுத்தியலால் தட்ட ஆரம்பித்தான். நங் நங் ன்னு சத்தம் வந்துச்சே ஒழிய பூட்டு அசைஞ்சு கொடுக்கலை. கூட்டத்தில் இருந்த வயசுப் பொண்ணுங்க பக்கம் இருந்து வந்த கேலிச் சிரிப்பு காதில் விழவும் ரோஷத்தில் கொஞ்சம் வேகத்தை கூட்டினான். முழு பலத்தையும் பிரயோகித்ததில் அந்த வெட்டிரும்பு சில்லு சில்லாய் உடைந்து தெறித்தது. மாரியப்பன் உசிரு கொஞ்ச நேரம் நின்னு போச்சு. இப்போ அந்த பூட்டை பார்க்கவே எல்லோருக்கும் பயமாய் இருந்தது.

கடவுள் நம்பிக்கை இல்லாத பெரியண்ணா கூட ‘ஆத்தா உன்ன ஏதாது பேசிருந்தேன்னா மன்னிச்சிருத்தா’ன்னு மனசுக்குள்ள வேண்ட ஆரம்பிச்சுட்டார். அந்த ஊர் ஹிஸ்ட்ரி வாத்தியார் மட்டும் பயமில்லாமல் ஒரு ஆர்வத்தோட கோவில் வாசலுக்கு வந்து யோசனையோட பார்த்தார். உடைந்த இரும்பு துண்டுகள் கால்களை குத்துவதாய் இருந்தது. மாரியப்பன் ஒரு ஓரமாக அரை நினைவில் தன் மனைவியின் மடியில் படுத்திருந்தான். வாத்தியார் பூட்டை திறக்கவெல்லாம் முயற்சி பண்ணலை. அந்த பூட்டை ஆராய்வதில் தான் ஆர்வமாயிருந்தார். கையிலிருக்கும் டார்ச்சை உபயோகித்து நுணுக்கமாய் பார்த்தார். அந்த பூட்டப்படும் பகுதியை உற்றுப் பார்த்தவருக்கு வேர்க்க ஆரம்பித்தது. நாக்கு, தொண்டையெல்லாம் உலர்ந்தது.

அவசரமாய் சட்டைப்பையில் இருந்த லென்ஸை எடுத்து அதன் வழியாக பார்த்தவர் “அணுகுண்டு வச்சாக் கூட இந்த பூட்ட தெறக்க முடியது”ன்னு சொல்லிட்டு அப்படியே மயங்கி விழுந்திட்டார். அவரை மடியில் தாங்க அவருக்கு சொந்தமாய் மனைவி கிடையாது.

கண் விழிச்சு பார்த்த ஹிஸ்ட்ரி வாத்தியார் அந்த ஊர் மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தார். அந்த சிறிய ஊரில் பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சியாளர்களும் கூடியிருந்தார்கள். வாத்தியார் கண் விழிப்பது தெரிந்ததும் அவரை சுற்றிக் குழுமினார்கள்.

“ஸார் என்ன நடந்தது?”

“மயக்கமடைகிற அளவுக்கு நீங்க என்ன பாத்தீங்க?”

“ஸார் நீங்க என்ன சொன்னாலும் நாங்க நம்ப மாட்டோம். அதான் பேட்டி எடுக்க வந்திருக்கோம். மக்களுக்கு உண்மைய கொண்டு போகணும் அதான் எங்களுக்கு முக்கியம்.”

“ஒலகம் அழியப் போதுன்றாங்களே, அதோட அறிகுறியா இது?”

ஆளாளுக்கு கேள்வி கேட்க தயாரான நேரம் மின்சாரம் தடைபட்டு இருளானது. அந்த இருட்டில் வாத்தியாரின் குரல் கேட்டது.

“மின்சாரத்தை கண்டு பிடித்த தமிழன் இன்று இருளில் இருக்கிறான்”. கொஞ்சம் நிறுத்தி விட்டு சொன்னார்.

“நான் சொல்வது உங்களுக்கு நம்ப முடியாததாய் இருக்கலாம். தமிழன் ஐந்தாம் நூற்றாண்டிலேயே மின்சாரத்தை கண்டுபிடித்து பயன்படுத்தி விட்டான். அதுவும் அணுவிலிருந்து. அதற்கான ஆதாரமெல்லாம் என்னிடம் உள்ளது”.

வந்த பத்திரிக்கையாளரில் ஒருவர் மட்டும் தெளிவாய் இருந்தார். “அதெல்லாம் இருக்கட்டுங்க. இப்போ கோவில் கதவ ஏன் தெறக்க முடியல. அத சொல்லுங்க”.

“நான் சொன்ன மின்சார விஷயத்திற்கும் அதுக்கும் சம்மந்தம் இருக்கு. தமிழனிடம் ஒரு அபூர்வ கலை இருந்தது. அது அழிந்து ஆயிரத்து ஐநூறு வருஷம் ஆயிருச்சு. அந்தக் கலையில் வல்லவனால் தனது தலை முடி ஒன்றினால் எப்படிப்பட்ட பூட்டையும் கட்டிப் போட முடியும். இந்த கோயில் பூட்டும் அப்படித்தான் ஒரு தலை முடியால் கட்டப்பட்டிருக்கு”. இதை கேட்கவும் ஊரே திகைச்சுப் போய் நின்னது.

“நான் தான் கட்டினேன்” அந்த இருட்டில் ஒரு தீக்குசியை உரசி அந்த வெளிச்சத்தில் தன் முகம் காட்டியபடி வந்தான் அந்த தமிழு என்று அழைக்கப்படும் தமிழன்பன்.

“ஏன் தமிழு இப்படி செஞ்சே?” பாசத்தோடு ஒரு பாட்டி கேட்டது.

“நேத்து கோயில் பூசாரி சாமி கும்பிடப் போன என் தங்கச்சிக்கு குங்குமப் ப்ரசாதம் குடுக்கல. அதான் மொத்தமா கோயிலுக்கு ஒரு பூட்ட போட்டேன்.” சொல்லி விட்டு அவனும் அவன் தங்கையும் சேர்ந்து ஒரு குத்தாட்டம் போட்டார்கள்.

(முதல் பாகம் இத்தோடு முடிவுற்றது)

One thought on “தமிழனின் பெருமை சொல்லும் சினிமாக் கதை

Comments are closed.