கண்ணனுக்குப் பிடித்த உணவுகள்

ஆண்டாள் இயற்றிய பாடல்களில் பக்தியும் காதலும் அதிகம் இருந்தாலும், இந்தப் பாடல் வேறு ஒரு உணர்வை வெளிப்படுத்துகிறது. இதுவும் ஒரு வித காதல்தான், நாம் நம் குடும்பங்களில் உணர்கிற, பார்க்கிற விஷயமாக இருப்பதால் இந்தப் பாடல் ரொம்பவே பிடித்து விட்டது. என்னுடைய சிறு வயதில், வீட்டில் அம்மா அப்பாவுக்கு சாப்பாடு பரிமாறி விட்டு, அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பார், சமையல் பிடிச்சிருக்கா இல்லையா என்று தெரிந்து கொள்ள. அது தான் ஞாபகம் வருகிறது இந்தப் பாடலைப் படிக்கும் போது.

கார்த்தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடு கின்றன வென்னைவந்திட் டிருடீகே சன்பக்கல் போகேயென்று
வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டடிசி லுண்ணும் போதுஈதென்று
பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும் பத்தவி லோசநத் துய்த்திடுமின்.

இதற்கு உரையாசிரியர்கள் சொல்லும் உரை தவிர்த்து, நான் கொஞ்சம் வேறு மாதிரி பொருள் கொள்கிறேன்.

“குளிர்ந்த கறு மேகமும், கருவிளைப் பூவும், காயாம்பு மலரும், தாமரை மலரும் என்னை ஈர்க்கின்றன. அவை ‘நீயும் கண்ணபிரான் பக்கம் போ’ என்று சொல்வது போல் உள்ளது. கண்ணன் தன்னுடைய அன்றாடப் பணியினால் வேர்த்து, வயிறு பசி எடுத்து வந்து சாப்பிடும் நேரம், அவன் அருகில் அமர்ந்து என்னவெல்லாம் விரும்பிச் சாப்பிடுகிறான் என்று பார்த்துக் கொண்டேயிருப்பேன்” என்று ஆண்டாள் சொல்கிறார். “அப்படி ஒரு பக்திப் பார்வை பார்க்கும் அனுபவத்தை எனக்குக் கொடு” என்று கண்ணனிடம் கேட்கிறார்.