மேதகு மேனேஜர்

“ஸார்! டீக்கடை ஓனர கூட்டிட்டு வந்துட்டேன். உள்ள வரச் சொல்லவா?”

“வேணாம். அப்படியே நம்ம கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு கூட்டிட்டு வந்துருங்க!”ன்னு சொல்லிய மேனேஜர், தனது உதவியாளரை ஃபோனில் கூப்பிட்டார். “ஹாஃப் அன் அவர் எந்த காலையும் எனக்கு கனெக்ட் பண்ணாதம்மா. அந்த யூ எஸ் க்ளயண்ட் கூப்பிட்டான்னா, நான் ஒரு முக்கியமான மீட்டிங்க்ல இருக்கேன்னு சொல்லிரு”ன்னார்.

“எக்ஸெல் ஷீட் ரெடி பண்ணிட்டியா பார்த்திபா?”

“எல்லாம் ரெடி ஸார். நீங்க வந்தீங்கன்னா சரியா இருக்கும்”.

மேனேஜர் விறுவிறுப்பாக கான்ஃபரன்ஸ் ஹாலில் நுழைந்த போது, அங்கு கூடி இருந்த முக்கிய பொறுப்பாளர்கள் எல்லாம் தூக்கத்தை உதறி நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். டீக்கடை ஓனர் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். அது ஒரு குளிரூட்டப் பட்ட 14 x 30 ஹால். நடுவே ஒரு நீள மேஜை, அதைச் சுற்றி பத்து நாற்காலிகள். அவற்றின் உயர்ந்த தரம் டீக்கடை ஓனரை உட்காரத் தயக்கியது. பாட்டிலில் அடைக்கப் பட்ட தண்ணீர் நிறைய வைக்கப் பட்டிருந்தன.

“உட்காருங்க ஸார்! இந்த மீட்டிங் எதுக்குன்னு தெரியும்ல?” என்று கேட்ட மேனேஜரை பயத்துடன் பார்த்தார். ‘தெரியலன்னு சொன்னா கோவிச்சுக்குவாரோ?’ன்னு ஓடிய அவருடைய மைண்ட் வாய்ஸ் அவருக்கு எதிரே அமர்ந்திருந்த மணிகண்டனுக்கு மட்டும் கேட்டது. பார்த்திபன் தான் தயார் செய்து வைத்திருந்த எக்ஸெல் ஷீட்டை அங்கிருந்த 52 இன்ச் LED டிஸ்ப்ளேயில் தெரியச் செய்தார். அந்நேரம் உள்ளே வந்த கம்பெனி முதலாளி பாலாஜிநாதன் தன்னுடைய ஐஃபோனை தடவியபடியே வந்து தன் இருக்கையில் உட்கார்ந்தார். தலை நிமிரக்கூட நேரமில்லாத அளவுக்கு  அவருக்கு ஒரு முக்கியமான வேலை. தன்னுடைய ஃபேஸ்புக்கில் திருப்பதி பெருமாள் படத்தை தன்னுடைய தொடர்பில் இருக்கும் 684 பேருக்கும் தனித்தனியாக பகிர்ந்து கொண்டிருந்தார். மொத்தமாக ஷேர் செய்தால் பலன் கிடையதாம்.

மேனேஜர் தன்னுடைய மீட்டிங்கை ஆரம்பித்தார். “ஸார் இதப் பாருங்க” என்று டீக்கடை அதிபரை அழைத்து தன்னுடைய ரிப்போர்ட்டை காண்பித்தார்.

“இதுல தேதி வாரியா டீ வாங்கின விவரம் எல்லாத்தையும் டேட்டா எடுத்து வச்சுருக்கோம். அத அனலைஸ் பண்ணி பார்க்கும் போது தான்  முக்கியமான ஒரு விஷயம் தெரிய வந்தது. உங்க கடைல QC உண்டா இல்லையா?”

“ஈஸியா? அது ஏர்டெல்லுக்கும் வோடஃபோனுக்கும் வச்சுருக்கோம்” உளறுகிறோம் என்பதை தெரிந்தே செய்தார் டீக்கடை அதிபர்.

“இந்த பதினெட்டாந் தேதிய பாருங்க. அன்னைக்கு தான் உங்க டீ நல்லாருந்ததா எல்லாரும் ரிப்போர்ட் பண்ணிருக்காங்க. இருபத்திரெண்டாம் தேதி பாருங்க, நாலு பேரு டீய கீழ ஊத்திருக்காங்க. இருபத்தி நாலாம் தேதி லேடீஸுக்கு மட்டும் டீ பிடிச்சிருக்கு. மறுநாள் முப்பது வயசுக்கு மேல உள்ளவங்க எல்லாம் டீ சுமார்ன்னு சொல்லியிருக்காங்க. இப்போ எங்க கம்பெனிக்கு தெரிய வேண்டியது என்னன்னா ஏன் டீயோட டேஸ்ட் இப்படி மாறிக்கிட்டே இருக்கு? குவாலிட்டில ஒரு கன்ஸிஸ்டன்ஸி இல்ல. என்ன செய்யலாம் இத சரி பண்ண? அதுக்கு தான் மீட்டிங். எங்ககிட்ட இருக்கிற டேட்டா எல்லாத்தையும் தாரோம். நீங்க ஒரு வாரத்துக்குள்ள ஒரு ரிப்போர்ட் சப்மிட் பண்ணிடுங்க. இந்த விவரமெல்லாம் பத்தாதுன்னா சொல்லுங்க. பார்த்திபா ஒரு பவர் பாய்ண்ட் ப்ரசெண்டேஷன் ரெடி பண்ணிரலாமா?”

“பண்ணிரலாம் ஸார்!” பார்த்திபன் வேகமாக தன்னுடைய கணினியில் செயல்பட ஆரம்பித்தார்.

டீக்கடை அதிபர் பரிதாபமாக பாலாஜிநாதனையே பார்த்தார். அப்போது தான் தன்னுடைய ஐஃபோனில் இருந்து தலை நிமிர்ந்த பாலாஜிநாதன் “என்ன காளியப்பா? இங்க என்ன செய்ற?” என்றபடி மேனேஜர் காண்பித்த புள்ளி விவரத்தைப் பார்த்தார்.

“காளியப்பா! ஒன் டீ ஒன்னும் வாய்ல வைக்க வெளங்கல. டீ நல்லா இருந்தாத் தான் துட்டு. புரியுதா?”ன்னு ஒரு அதட்டல் போட்டார்.

“சரிங்க மொதலாளி” நன்றி பெருக்கெடுத்து ஓடியது டீக்கடை அதிபரின் குரலில்.

“இனிம யாராவது கூப்டு விட்டாங்கன்னா, நீ வராத. கடப்பசங்கள அனுப்பி வை” முன்னூற்று முப்பதாவது பெருமாள் ஷேரிங் செய்தபடி சொன்னார் பாலாஜிநாதன்.