செல்லையா காவியத்தலைவன் பார்க்கிறான்

‘செல்லாத துட்டோட பயணம் போகலாம், ஆனா செல்லையாவோட படத்துக்குப் போகக்கூடாது’ன்னு எங்க ஊர்ப்பக்கம் ஒரு சொலவட உண்டு. சினிமா பாத்துட்டு விமர்சனம்னு ஒன்னு பேசுவான், அதுக்கு பயந்து யாரும் அவங்கூட படத்துக்கு போறதில்ல. “இங்க நல்லா படம் எடுக்கத் தெரிஞ்சவனுக்கு ரசன இல்ல. ரசன இருக்கிறவனுக்கு அத நல்லா எடுக்கத் தெரில” ங்கிறது அவனோட பொது விமர்சனம். ரஜினி படத்தப் பத்தி மட்டும் கொற சொல்ல மாட்டான். கமல் ரசிகனைப் பாத்தா கூப்பிட்டு வச்சு வம்பிழுப்பான். “ஒங்க ஆளு அழுதா தியேட்டர்ல கை தட்றானுங்க. அதுவாடா நடிப்பு? எங்க ஆளு அழ மாட்டாரு, ஆனா அழ வைப்பாரு”ன்னு ஆரம்பிச்சான்னா ‘சரி செல்லையா, சரி செல்லையா ரஜினி தான் பெஸ்ட்’ன்னு சொல்லித்தான் தப்பிக்கணும்.

அந்த செல்லையா கூடத்தான் நான் காவியத்தலைவன் பாக்க வேண்டியதாப் போச்சு. நான் பயந்த அளவுக்கு ஒன்னும் ஆகல, படம் ஆரம்பிச்சு பத்தாவது நிமிஷம் சுவாரசியமானவன் பெறகு அப்படியே படத்தோட ஐக்கியமாயிட்டான். ரொம்ப நிம்மதியா இருந்தது எனக்கு. இண்டர்வலுக்குப் பிறகு அப்பப்போ ஏதாவது சொல்ல வந்தான், என்ன நெனச்சானோ திரும்ப படத்துல முங்கிட்டான். செல்லையாவ பாத்த யாரும் எங்க பக்கத்துல வந்து உட்காரல, வேற பக்கம் போயிட்டாங்க. எனக்கு படம் பாக்க ஃப்ரீயா இருந்தது. நான் பொழுது போறதுக்காக சினிமா பாக்குறவன், அந்த வகைல நல்லாவே பொழுது போச்சு.

தியேட்டர்ல அமைதியா இருந்த செல்லையா வெளிய வந்து வறுக்க ஆரம்பிச்சான், நான் வேக ஆரம்பிச்சேன். ஒன்னு புரிஞ்சது எனக்கு,  ‘நடிப்புங்கிறது கைதட்டல் வாங்குறது இல்ல, பாக்குறவங்கள உணர்ச்சி வசப்பட வைக்கிறது’ன்னு சொல்ற விஷயம் அவனுக்கு ரொம்ப பிடிச்சுப் போயிருக்கு. “இதத்தானடா இத்தன வருஷமா சொல்லிட்டுருக்கேன்!”ன்னு ஃபீல் பண்ணான். ஒவ்வொரு சீனா சொல்லி அத தான் ரசிச்ச விதத்த விவரப்படுத்தி, என்னை ரொம்பவே படுத்தினான். நானும் உன்கூட தானடா படம் பாத்தேன்னு சொல்ல நெனச்சு சொல்லாம விட்டுட்டேன்.

செல்லையாவ நிப்பாட்ட வேற வழி தெரியாம “ஆமா செல்லையா! படம் சூப்பர். அத்தன பேரு நடிப்பும் சூப்பர்”ன்னேன். சொல்லி முடிக்கல “என்ன சூப்பர கண்டுட்ட நீ”ன்னு ரிவர்ஸ் அடிச்சான். “புராண நாடக சீன எல்லாம் ஓரளவுக்கு மெனக்கெட்டவங்க, சுதந்திரப் போராட்ட சீன பூராவும் லோரம் இப்சம் போட்டு நிரப்பியிருக்காங்க. வந்தே மாதரம்ங்கிறது டம்மி வார்த்தையா போச்சு. நடிப்புலயும் பாரு சித்தார்த்தும் ப்ருத்வியியும் நல்லா பண்ணியிருக்காங்க, ஆனா நாசர் அவங்களுக்கு ஏத்த மாதிரி தன்ன ட்யூன் பண்ணிக்கல.” “ம்யூசிக்”ன்னு ஆரம்பிச்சேன், “எடே! தமிழ்நாட்டுல ம்யூசிக் பத்தி பேசக்கூடாதுன்னு ஒன்கிட்ட யாரும் சொல்லலியா?”ன்னு கேட்டான்.

நடந்துகிட்டே பேசிட்டிருந்த எங்க பின்னால “ஏண்டா டேய்!”ன்னு ஒரு சத்தம் ஆல்கஹால் வாசனையோட வந்தது. கொரல் குடுத்த ஆசாமி நாங்க பேசிக்கிட்டு இருந்தத கேட்டுகிட்டே வந்திருப்பார் போல. “வெரல் விட்டு எண்ணுனா ஒரு நாலு பேரு தான் பாக்குற மாதிரி படம் எடுக்குறான். இப்பிடி நொட்ட பேச்சு பேசி பேசியே அவங்களையும் மொடக்கிப் போடுங்க. சரியாடே!”ன்னு சொல்லிட்டு வேகமா நடந்து போயிட்டார்.