இந்த கவிதைக்கு பெயர் இல்லை!

பெயர் வைத்தே பழகினோம்
எல்லாவற்றிற்கும்!
பெயரில்லா உயர்திணை இல்லை உலகினில்!
பெயரில்லா அஃறிணையும் இல்லை!

அணுவின் கருவிற்கும் பெயரிட்டோம்!
எல்லை இல்லா இப் படைப்பை
இயற்கை என்னும் சொல்லில் அடக்கி விட்டோம்!

பிரபஞ்ச இயக்கத்தின் சூட்சமத்திற்கும்
பெயர் வைத்தோம் மேதாவிகளாய்!

பெயர்களை கொண்டாடுகிறோம்.
பெயர்களை கண்டிக்கிறோம்.
பெயரை பிடித்தே தொங்குகிறோம் நாம்!

பெயர் இல்லாமலிருந்தால் ஒரு வேளை
அந்த சூட்சமத்தை உணர்ந்திருக்கலாம் நாம்!