பூவும் வாசனையும்

புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்த்திடுஞ் சத்தியுஞ்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே. – (திருமந்திரம் – 387)

விளக்கம்:
புண்ணியனான சிவபெருமான் உலகின் எல்லாவற்றிலும் பொருந்தி இருந்து, எளிய உயிர்களை எல்லாம் வளர்க்கிறான். பூவும் வாசனையும் ஒன்றாகக் கலந்திருப்பதைப் போல, சிவனும் சக்தியும் கலந்திருக்கிறார்கள். சிவனின் செயல்களில் எல்லாம் சக்தியின் பங்களிப்பும் உண்டு.


பிரமன் செய்யும் புண்ணியம்

புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்
புவனம் படைப்பானப் புண்ணியன் தானே. – (திருமந்திரம் – 386)

விளக்கம்:
இந்த உலகத்தைப் படைத்தது சிவசக்தி ஆவார்கள். அவர்கள் தமது ஐந்து மக்களைக் கொண்டு இந்த உலகை உருவாக்கினார்கள். பிரமன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகியோர் அந்த ஐந்து மக்கள் ஆவார்கள். இவர்களில் படைப்புத்தொழில் செய்யும் புண்ணியம் பிரமனுக்குக் கிடைத்தது. அந்தப் புண்ணியத்தாலேயே அவனுக்குத் தாமரை மலரில் வசிக்கும் உரிமை கிடைத்தது.


பிரபஞ்சம் தோன்றிய முறை

மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே. – (திருமந்திரம் – 385)

விளக்கம்:
நம் பெருமானிடம் இருந்து முதலில் வானம் தோன்றியது, வானத்தில் இருந்து காற்று தோன்றியது. காற்று வளர்த்தத் தீயில் இருந்து நீர் தோன்றியது. பிறகு கடினத்தன்மை கொண்ட நிலம் தோன்றியது. இந்தப் பிரபஞ்சம் என்னும் பூவில் உள்ள தேன் தான் படைப்புக்கள் அனைத்தும். அந்த அனைத்துப் படைப்புக்களும் ஐந்து பூதங்களால் ஆனவையே!


சகலத்திலும் சக்தி இருக்கிறாள்

தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்து சத்திஓர் சாத்துமா னாமே. – (திருமந்திரம் – 384)

விளக்கம்:
நம் எண்ணத்திற்கு எட்டாத சோதியாக இருக்கும் சிவபெருமானைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் கிடையாது. அந்த சிவபெருமானை நீங்காமல் தொடர்ந்து இருப்பவள் சக்தி. படைப்பு அனைத்திலும் சிவனும், சக்தியும் சேர்ந்து இருந்து அறிவுக்கும் செயலுக்கும் காரணமாகிறார்கள். சதாசிவன் படைத்த இந்த உலகம், ஐம்பூதங்களால் ஆனது. அந்த ஐந்து பூதங்களையும் செயல்படுத்தும் சக்தியாக சக்தி இருக்கிறாள்.


எல்லாவற்றிலும் சக்தி பரவியிருக்கிறாள்

இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே. – (திருமந்திரம் – 383)

விளக்கம்:
அதுவரை இல்லாத ஒன்றை நம் சிவபெருமான் படைத்தான். அந்தப் படைப்பு தான் இந்த உலகம். இந்தப் படைப்பின் சகலத்திலும், நவமணியில் இருந்து அதன் ஒளியைப் பிரிக்க முடியாதது போல, சக்தி கலந்திருக்கிறாள். சகல இயக்கத்திற்கும் காரணமான அந்த சக்தியின் பெருமையைச் சொல்லலாம் என்றால், அது நம் சிற்றறிவிற்கு எட்டாததாக இருக்கிறது.


அறிவுக்கும் செயலுக்கும் காரணமானவர்கள்

நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே
பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே. – (திருமந்திரம் – 382)

விளக்கம்:
நாதனிடம் இருந்து தோன்றியது நாதம். இந்த மொத்தப் படைப்பும் அவனிடம் இருந்து தோன்றிய நாதம் தான். படைப்புக்களை ஆசை வருத்துகிறது, அதனால் விந்து உருவாகிறது. உருவாகும் விந்துக்களில், தீமை ஏதும் இல்லாத சிவனும் சக்தியும் வந்து அமர்கிறார்கள். அவர்கள் அந்த விந்துக்களில் இருந்து தோன்றப் போகும் உயிர்களுக்கு முறையே அறிவு, செயல் ஆகியவற்றின் காரணமாக அமைகிறார்கள்.


சிவனையும் சக்தியையும் பிரித்துப் பார்க்க முடியாது

ஆதியோ டந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்
தீதில் பரையதன் பால்திகழ் நாதமே. – (திருமந்திரம் – 381)

விளக்கம்:
மேலான விஷயங்களுக்கு எல்லாம் மேலானவன் நம் சிவபெருமான். சிவபெருமானிடம் இருந்து பிரிக்க முடியாத ஞான நிலையாக விளங்குபவள் சக்தி. உலகமெங்கும் பரந்து நிற்கும் அந்தப் பேரொளியில் சிவனும் விளங்குகிறான். தீமை ஏதும் இல்லாத சக்தியும் அந்தப் பேரொளியில் விளங்குகிறாள். அருட் பேரொளியில் சிவனும், சக்தியும் சேர்ந்து விளங்குவதால் படைப்புக்கள் யாவும் நிகழ்கின்றன.


சிரசில் சிவனை உணரலாம்

ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது தாவென
ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே. – (திருமந்திரம் – 380)

விளக்கம்:
நெடுங்காலம் தியானம் செய்து, அதிலேயே தனது கவனத்தைக் குவிப்பவர்களுக்கு குண்டலினி சக்தி தனது மூலாதார நிலையில் இருந்து வெளிப்படும். அவர்களுடைய குண்டலினி சக்தி, விதிக்கப்பட்டபடி சிரசினை சென்று அடையும். மொத்த உலகிற்கும் ஒரே ஒளியாக நிற்கும் சிவபெருமானை, அவர்கள் தமது சிரசில் உணர்வார்கள்.


தன்னைக் கொடுத்து அறிவோம் சிவனை!

வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்
ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்
ஆள்கொடுத் தின்பங் கொடுத்துக் கோளாகத்
தாள்கொடுத் தானடி சாரகி லாரே. – (திருமந்திரம் – 379)

விளக்கம்:
“தமக்கெல்லாம் பேரொளியாகக் காட்சி கொடுத்த நம் சிவபெருமானை, பிரமன், திருமால் முதலிய தேவர்கள் வழிபட்டார்கள். ஆனால் அவர்கள் என்னைப் போல, தன்னையே இறைவனிடம் ஒப்படைத்து வழிபடவில்லை. தன்னைக் கொடுத்தால் சிவனை அறியலாம். தன்னைக் கொடுத்தவர்க்கு இறைவனும் தன்னைத் தருவான், இன்பம் தருவான். நாம் வலிமை பெறும் பொருட்டு தம் திருவடியைப் பற்றிக்கொள்ளத் தருகிறான் நம் பெருமான். ஆனால் அந்தத் தேவர்கள் என்னைப் போல அவன் திருவடியைச் சார்ந்திருக்கவில்லை” – திருமூலர்.


அவனைச் சுற்றியே உலகம் இயங்குகிறது

ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்
மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முங்கண்
டாலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங்
கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே. – (திருமந்திரம் – 378)

விளக்கம்:
உலகில் உள்ள யாவற்றிலும் கலந்திருக்கும் பரஞ்சுடராம் நம் சிவபெருமான். இந்த உலகின் படைப்பு யாவையும் தறி போன்று விளங்கும் நம் பரஞ்சுடரைச் சுற்றியே இயங்குகிறது. இந்த இயக்கத்தைப் புரிந்து மெய்ந்நெறி கண்டவர்கள், நம் சிவபெருமானை விடாமல் அவனையே வலம் வருவார்கள்.