ஒழுக்கமில்லாத அந்தணர் அர்ச்சனை செய்யக்கூடாது

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்க்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.   – (திருமந்திரம் – 519)

விளக்கம்:
அந்தணர்க்கு உரிய நெறியில் நிற்காமல், பிறப்பினால் மட்டுமே பார்ப்பானாக இருப்பவர்கள் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யக்கூடாது. ஒழுக்கமில்லாத அந்தணர்கள் கோயில்களில் அர்ச்சனை செய்தால், அந்நாட்டில் போர்கள் ஏற்படும். மேலும் அந்நாட்டில் கொடிய வியாதிகளும் பஞ்சமும் பரவும். இவையெல்லாம் நம் நந்தியம்பெருமான் அறிந்து நமக்கு உரைத்திருக்கிறான்.


சிவபூசை தவறினால் …

முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளம்குன்றும்
கன்னம் களவு மிகுந்திடும் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே.   – (திருமந்திரம் – 518)

விளக்கம்:
சிவன் கோயில்களில் பூசைகள் நிகழாமல் தடைப்பட்டால், நாடாளும் மன்னர்க்கு தீமை உண்டாகும். நாட்டில் செல்வ வளம் குறையும், களவு மிகும். என்னருமை நந்தியம்பெருமான் இவ்வாறு உரைத்துள்ளான்.


பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்

ஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.  –  (திருமந்திரம் – 517)

விளக்கம்:
நாட்டில் உள்ள சிவன் கோயில்களில் எல்லாம் அன்றாட பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும். அது தவறினால் நாட்டில் குணப்படுத்த முடியாத நோய்கள் பரவும். பருவத்தில் பெய்ய வேண்டிய மழை பொய்த்துப் போகும். அந்நாட்டின் அரசர் போர் செய்யும் வலிமையை இழப்பார்.


கோயிலில் இருந்து ஒரு கல்லைக்கூட எடுக்கக்கூடாது

கட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும்அபி டேகத்து அரசரை
முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.  –  (திருமந்திரம் – 516)

விளக்கம்:
திருக்கோயில் மதில்ச்சுவரின் கல் ஒன்றை எடுப்பது கூட சிவ ஆணைப்படி குற்றமாகும். அக்கல்லை எடுப்பது அக்கோவிலைக் கட்டியவராகவே இருந்தாலும், தவமுனிவரானாலும், வேதம் சொல்லும் அந்தணர் ஆனாலும் சிவபெருமானின் ஆணைப்படி தண்டனை உண்டு. திருக்கோயிலில் திருட்டு நடக்காமல் காக்கும் பொறுப்பு அந்நாட்டு மன்னருக்கு உண்டு. அதனால் அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் நாட்டு மன்னருக்கும் தண்டனை உண்டு.


சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்

தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.  –  (திருமந்திரம் – 515)

விளக்கம்:
திருக்கோயில் ஒன்றில் உள்ள சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்து வேறொரு இடத்தில் நிறுவ முயன்றால், அதைச் செய்து முடிப்பதற்கு முன்னால் அந்நாட்டின் அரசுக்கு கேடு விளையும். அச்செயலைச் செய்தவன் சாவதற்கு முன்னால் கடுமையான நோய்களால் துன்புறுவான். இது நம் தலைவனான நந்திபெருமானின் ஆணையாகும்.

தாவரம் – அசையாத பொருள்


உள்ளூறும் தீர்த்தத்தின் மகிமை!

கலந்தது நீரது உடம்பில் கறுக்கும்
கலந்தது நீரது உடம்பில் சிவக்கும்
கலந்தது நீரது உடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர்அனல் காற்றது வாமே.  –  (திருமந்திரம் – 514)

விளக்கம்:
தியானத்தினால் உள்ளே உறும் தீர்த்தம் உடலினில் கலக்கும் போது உடல் சிவக்கும்,  முடி கறுக்கும், உடல் முழுவதும் தூய்மையாகும். மேலும் நம்மைச் சுற்றி உள்ள நிலத்திலும் காற்றிலும் அந்த தீர்த்தத்தின் புனிதம் கலந்து நிற்கும்.


கடலில் தொலைத்ததைக் குளத்தினில் தேடலாமா?

கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல்
உடலுற்றுத் தேடுவார் தம்மைஒப் பாரிலர்
திடமுற்ற நந்தி திருவரு ளால்சென்று
உடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.  –  (திருமந்திரம் – 513)

விளக்கம்:
புனிதமான தீர்த்தத்தை வெளி உலகில் தேடாமல், தியானத்தினால் தம்முள்ளே தேடுபவர்களுக்கு ஒப்பானவர் யாருமில்லை. நந்தியம்பெருமான் நம் உடலில் புகுந்து திடமாக அமர்ந்திருக்கிறான் என்பதை அவர்கள் அறிவார்கள். மற்றவர்கள் அந்த உண்மையை உணராமல் புனித தீர்த்தத்தை வெளி உலகில் தேடுகிறார்கள். அவர்களது செயல் கடலில் தொலைத்தப் பொருளை குளத்தினில் போய்த் தேடுவதைப் போல் உள்ளது.


உள்ளூறும் கங்கை!

அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவான் உறைபதம் சென்று வலங்கொள்
மறியார் வளைக்கை வருபுனல் கங்கைப்
பொறியார் புனல்மூழ்கப் புண்ணிய ராமே.  –  (திருமந்திரம் – 512)

விளக்கம்:
ஆதிப்பிரானான சிவபெருமானை அறிந்தவர்கள், பிறப்பு இறப்பு இல்லாத அமரர் ஆவார்கள். எங்கும் எதிலும் செறிந்திருக்கும் அப்பெருமானின் திருவடியைத் தேடிச்சென்று வெற்றி பெறுவோம். சிவனடியை தியானித்து இருந்தால் நம்முள்ளே கங்கை வெள்ளம் தோன்றுவதை உணரலாம். அவ்வெள்ளத்தை மறிக்காமல், நமது ஐம்பொறிகளும் அவ்வெள்ளத்தில் மூழ்குமாறு செய்வோம். நம்முள்ளே ஊறும் அத்தீர்த்தத்தில் மூழ்கினால் நாம் புண்ணியம் பெறலாம்.