திருக்கண்டியூர்

எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியுந்
தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
அங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே. – (திருமந்திரம் – 341)

விளக்கம்:
இந்தப் பெரிய உலகத்தைத் தாங்கி நிற்கும் நம்முடைய சிவபெருமான், எங்கும் எல்லாவற்றிலும் பரவி இருக்கிறான். அவனுடைய திருவடியின் பெருமையை உணர்ந்த தேவர்கள், தியானத்தில் தங்கள் கவனத்தை சிரசிலேயே தங்கச் செய்தார்கள். பிரமனின் இடமான மூலாதாரத்தில் இருந்தும், திருமாலின் இடமாகிய மணிப்பூரகத்தில் இருந்தும் நம்முடைய கவனத்தை நீக்கி, நம் கவனத்தை சிரசிலேயே நிலைக்கச் செய்கிறான் சிவபெருமான்.

பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து, அந்த தலை ஓட்டில் திருமாலின் உதிரத்தையும் வாங்கிய செயல் நடந்த இடம் திருக்கண்டியூர். இந்தத் திருச்செயலின் தத்துவம், தியான நிலையில் நம்முடைய கவனம் சிவபெருமானின் இடமாகிய தலையுச்சியில் இருக்க வேண்டும் என்பதாகும்.


தக்கனுக்குக் கிடைத்த பாடம்

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையை யரிந்திட்டுச் சந்திசெய் தானே. – (திருமந்திரம் – 340)

விளக்கம்:
பிரமனின் மகனாகிய தக்கன், சிவபெருமானைப் புறக்கணித்து வேள்வி செய்தான். இதனால் சினம் கொண்ட சிவன், வீரபத்திரனை அனுப்பி, தக்கனின் தலையை வெட்டித் தீயில் எறியச் செய்தான். பிறகு தன் மனம் இரங்கி, இவனது செயல் உலகில் உள்ளோர்க்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்று எண்ணி, ஒரு ஆட்டுத்தலையை தக்கனுக்குப் பொருத்தி அவனை உயிர் பிழைக்கச் செய்தான். இந்தச் செயல் நிகழ்ந்த இடம் திருப்பறியலூர்.

நம்முள்ளே இருக்கும் வேள்வித்தீயாகிய குண்டலினி சக்தியை விரயம் செய்யக்கூடாது என்பது இந்நிகழ்வில் உள்ள தத்துவம்.


அந்தகன் எனப்படும் நம்முடைய ஆணவம்

கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்க்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே. – (திருமந்திரம் – 339)

விளக்கம்:
நம்முள்ளே அந்தகன் என்னும் அசுரன் ஒருவன் வாழ்கிறான். அவனால் மற்றவர்களுக்குத் துன்பம் உண்டாகிறது. இப்படி ஒருவருக்கு ஒருவர் துன்பம் விளைவிப்பதால், உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் வருந்துகிறார்கள். இது பற்றித் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, நம் பெருமான் தன்னுடைய சூலத்தின் நுனியினால் நம்முள்ளே இருக்கும் அந்த அசுரனைக் கொன்றான்.

சிவபெருமானை வேண்டினால், நம்முடைய ஆணவம் அழியும்.


நம் சிரசில் பரவி இருப்பார் அகத்தியர்

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
மங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே. – (திருமந்திரம் – 338)

விளக்கம்:
நம்முள்ளே குண்டலினி என்னும் அக்னியை உண்டாக்கி வளர்ப்பவர் அகத்தியர். வளரும் அந்த அக்னியை நம்முடைய சிரசில் ஏற்ற உதவுபவர் அகத்தியர். சிரசில் ஏறிய அக்னியை சீராகப் பரவச் செய்பவர் அகத்தியர். அகத்திய முனிவர் நம் சிரசில் எங்கும் ஒளியாகப் பரவி இருக்கிறார்.


அகத்தில் இருப்பவர் அகத்தியர்

நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து
கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே. – (திருமந்திரம் – 337)

விளக்கம்:
”உலகத்து மக்களெல்லாம், தம் மனத்தை சுழுமுனையில் பொருந்தி இருக்கச் செய்யாமல், உலக விஷயங்களையே விரும்புகிறார்கள். அதனால் இந்த உலகம் சமநிலை இல்லாமல் சரிகிறது பெருமானே!” என்று தேவர்களெல்லாம் சிவபெருமானிடம் சென்று வேண்டினர். பெருமானும் “அக்னி சொரூபமாக மூலாதாரத்தில் நிற்கும் அகத்தியரே! நீ சீவன்களின் தலைப்பகுதிக்கு விரைந்து சென்று அங்கேயே பொருந்தி இரு” என்றார்.