மது போன்ற ஒரு போதையைத் தரும் குண்டலினி

அதுவரு ளும்மரு ளான துலகம்
பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளும்
மதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி
இதுவருள் செய்யும் இறைஅவ னாமே – 788

விளக்கம்:
இந்த உலகம் அறியாமை என்னும் மயக்கத்தில் இருக்கிறது. மயக்கம் நிறைந்த இந்த உலகிற்கு பொதுவாக அருள் செய்யும் சிவபெருமான், தொடர்ந்து யோகம் செய்யும் யோகிகளுக்குத் தனியாக சில விஷேச அருட்களைத் தருகிறான். அவற்றுள் முக்கியமான ஒன்று எதுவென்றால், நாள்தோறும் யோகநிலையில் இருக்கும் யோகிகளுக்கு, குண்டலினியாகிய பராசக்தி மது போன்ற ஒரு போதையை அளிக்கிறாள்.

சிவயோகிகள் வெளியே மதுவைத் தேட வேண்டியதில்லை. அவர்களுக்கு யோகப்பயிற்சியினால் உள்ளூர மது ஊறுகிறது.


சிவம் நம்முள்ளே நின்று திகழும்

அறிவது வாயுவொடு ஐந்தறி வாய
அறிவா வதுதான் உலகுயிர் அத்தின்
பிறிவுசெய் யாவகை பேணிஉள் நாடிற்
செறிவது நின்று திகழும் அதுவே – 787

விளக்கம்:
தொடர்ந்த யோகப்பயிற்சியில் இருப்பவர்கள் பிராணவாயுவின் இயக்கத்தைப் புரிந்து கொள்வதுடன், ஐம்புலன்களின் இயக்கத்தையும் அறிந்து கொள்கிறார்கள். உலக உயிர்கள் அனைத்தும் ஐம்புலன்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. யோகத்தினாலே ஐம்புலன்களைத் தன் வசப்படுத்தி, மனத்தை உள்முகமாகத் திருப்பித் தியானித்து வந்தால் சிவபெருமானை நெருக்கமாக நம்முள்ளே உணரலாம். சிவம் நம்முள்ளே நின்று திகழும்.


மூச்சுக்காற்று சிறந்த கொள்முதல் ஆகும்

ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை
ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை
ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள்
ஆரு மறியா அறிவறிந் தேனே – 786

விளக்கம்:
தொடர்ந்த யோகப்பயிற்சியில் இருப்பவர்களால் மட்டுமே குண்டலினியின் இயக்கத்தை உணர முடியும். அவர்களுக்கு மட்டுமே மூச்சுகாற்றை முறைப்படுத்தும் கலை தெரியும். யோகப்பயிற்சி செய்யாத மற்றவர்களுக்கும் மூச்சுக்காற்று வீணாகக் கழியும். யோகம் செய்யும் சாதகர்களுக்கு மூச்சுக்காற்று சிறந்த கொள்முதல் ஆகும். மற்றவர்களுக்குக் கைவராத சூட்சுமம் எல்லாம் யோகப்பயிற்சில் இருப்பவர்களுக்கு மட்டுமே கைகூடும்.


கர்மவினைகளுக்குக் கட்டுப்பட மறுப்போம்!

மனையினில் ஒன்றாகும் மாதம்மும் மூன்றும்
சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி
வினையற ஓங்கி வெளிசெய்து நின்றால்
தனையுற நின்ற தலைவனு மாமே – 785

விளக்கம்:
யோகப்பயிற்சியை முப்பத்து நாளாவதாகத் தொடரும் போது, நம்முள்ளே சிவசக்தியர் ஒன்று கூடி நிற்பார்கள். தெளிந்த நீரில் தோன்றும் காட்சி போல, நந்தியம்பெருமான் நம்முள்ளே காட்சி தந்து வழி நடத்துவான். கர்மவினைகளுக்குக் கட்டுப்படாமல், மனம் துவாதசாந்தப் பெருவெளியில் ஒன்றி நின்றால், தலைவனான நம் சிவபெருமான் நம்முடன் ஒன்றி நிற்பான்.


அடர்ந்த பகையும் ஒன்றுமில்லாமல் போகும்

ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற்
கன்றிய நாளுங் கருத்துற மூன்றாகும்
சென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின்
மன்றியல் பாகு மனையில் இரண்டே – 784

விளக்கம்:
யோகப்பயிற்சியை முப்பதாவது நாளாகத் தொடர்ந்தால், அடுத்த எழாவது நாளிலே பகை எல்லாம் ஓடி விடும் என்பதை முந்தைய பாடலில் பார்த்தோம். மனம் ஒன்றி முப்பத்தோராவது நாள் பயிற்சியைத் தொடரும்போது, எவ்வளவு அடர்ந்த பகையும் அடுத்த மூன்றாவது நாளில் விலகும். முப்பத்து இரண்டாவது நாளாக சகசிரதளத்தில் மனம் நின்று யோகம் செய்தால், அடுத்த  இரண்டாவது நாளில் பகை எல்லாம் விலகி இயல்பு நிலைக்கு மாறலாம்.


பகை எல்லாம் விலகி ஓடும்

ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும்
பாரஞ்சி நின்ற பகைபத்து நாளாகும்
வாரஞ்செய் கின்ற வகைஆறஞ் சாமாகில்
ஓரஞ்சொ டொன்றொன் றெனவொன்றும் நாளே – 783

விளக்கம்:
10+5+6+8 =29. யோகப்பயிற்சி இருபத்து ஒன்பது நாட்கள் தொடர்ந்தால், அடுத்த பத்து நாட்களில் எப்படிப்பட்ட பகையும் விலகி ஓடும். முப்பதாவது நாளும் பயிற்சியைத் தொடர்ந்தால், அடுத்த எழாவது நாளிலே பகை எல்லாம் ஓடி விடும்.


தொடர்ந்த பயிற்சியில் இருபத்து எட்டாவது நாள்

காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில்
காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றெனக்
காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற்
காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே – 782

விளக்கம்:
தொடர்ந்த யோகப்பயிற்சியின் இருபத்து ஆறாவது நாளில் விசுத்தி, ஆக்கினை ஆகிய இரண்டு ஆதாரங்களில் மட்டும் மனம் நிலைபெறும் என்பதை முந்தைய பாடலில் பார்த்தோம். தொடர்ந்து இருபத்து ஏழாவது நாளில், ஆறு ஆதாரங்களில் இருந்து மேலே எழும் சக்தியை ஒன்றாகக் காணலாம். இருபத்து எட்டாவது நாளில் ஆறு ஆதாரங்களின் சக்தியும், ஏழாவது ஆதாரமான துரியம் எனப்படும் சகசிரதளத்தில் கலந்து நிற்பதைக் காணலாம்.


மனம் கீழ் நோக்கிச் செல்லாது!

கருதும் இருபதிற் காணஆ றாகும்
கருதிய ஐயைந்திற் காண்பது மூன்றாம்
கருதும் இருப துடன்ஆறு காணில்
கருதும் இரண்டெனக் காட்டலு மாமே – 781

விளக்கம்:
சுழுமுனையில் கருத்து ஊன்றி, இருபது நாட்கள் தொடர்ந்து யோகப்பயிற்சி செய்து வந்தால், ஆறு ஆதாரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை ஆகியவற்றை உணரலாம். தொடர்ந்த பயிற்சியின் இருபத்து ஐந்தாவது நாளில் மனம் கீழ் நோக்கிச் செல்லாமல் அனாகதம், விசுத்தி, ஆக்கினை ஆகிய மூன்று ஆதாரங்களில் மட்டும் மனம் ஈடுபடும். இருபத்து ஆறாவது நாளில் விசுத்தி, ஆக்கினை ஆகிய இரண்டு ஆதாரங்களில் மட்டும் மனம் நிலைபெறும்.

தொடர்ந்த யோகப்பயிற்சியில் மனம் கீழ் நோக்கிச் செல்வதை தவிர்த்து மேல் நோக்கிச் செல்லும்.