இந்திய வரலாற்றிலிருந்து சில குறிப்புகள் – பகுதி இரண்டு

– முதலில் பெர்சியர்கள் சிந்து நதியோரம் வசிப்பவர்களை ஹிந்து என்று குறிப்பிட்டாலும், ஹிந்து என்ற சொல் அராபியர்கள் மற்றும் துருக்கியர்கள் வருகைக்கு பிறகு பரவலான உபயோகத்திற்கு வந்தது. முதலில் அவர்கள் இந்தியர்கள் அனைவரையும் ஹிந்துக்கள் என்றே நினைத்தனர். பின்னர் இந்திய மக்களின் வாழ்வு முறையை புரிந்து கொண்ட பிறகு தான் அவர்களால் ஹிந்துக்களை மற்ற மதத்தினவர்களிடம் (புத்தம் மற்றும் ஜைனம்) இருந்து வேறுபடுத்தி அறிய முடிந்தது.

– வரலாற்றின் பிற்காலங்களில் தான் ஹிந்துக்கள் தங்களை ஹிந்து என்று சொல்லிக் கொள்ள ஆரம்பித்தார்கள். முன்னர் அவர்கள் தங்கள் ஜாதி அல்லது வகுப்பு பெயர்களை வைத்து அடையாளப்படுத்தி கொண்டார்கள். ஹிந்துக்களிடையே ஜாதியினால் பெரிய அளவில் பிரிவினைகள் எப்போதுமே இருந்துள்ளது. சமய வழிபாட்டு முறை மற்றும் மத உரைகள் அவர்களிடையே ஒரு உள்ளார்ந்த ஒற்றுமை இருந்து வர காரணமாய் இருந்து வந்துள்ளது.

– ஐரோப்பியர்களுக்கு வெகு காலம் முன்பே இந்தியர்கள் தாங்கள் கற்றவைகளை எழுத்து வடிவில் பதிவு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பழங்கால இந்தியர்கள் படைத்த காவியங்கள் இலக்கணத்திற்கு உட்பட்டவை, நுட்பமான பொருள்கள் நிறைந்த அமரத்துவம் பெற்றவை. அவை இன்றும் உலக அளவில் நமக்கு பெருமை தேடித் தருபவை. மேலும் தலை சிறந்த கணித மேதைகளும் வானியலாளர்களும் செய்த பங்களிப்புகள் பின்னர் முக்கிய ஆய்வுகளுக்கு பயன்பட்டன. இந்தியர்கள் இல்லாமல் இப்போது நடைமுறையில் உள்ள நவீன விஞ்ஞானத்தின் அடிப்படையாய் உள்ள எண் முறை சாத்தியமாகியிருக்காது.

-தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா நாகரிக காலத்திய நகைகளையும் குழந்தைகளுக்கான பொம்மைகளையும் கண்டெடுத்துள்ளார்கள். அவற்றின் அழகிய வேலைப்பாடுகள் அந்நாளைய பண்பட்ட வாழ்க்கை முறையை பறைசாற்றுபவையாக உள்ளன. இந்தியர்களின் வெண்கலம் மற்றும் செம்பினால் ஆன கைவினைப் பொருட்களுக்கு அகில உலகில் எப்போதுமே கிராக்கி இருந்து வருகிறது.

-மேலும் நமக்கு பெருமை சேர்ப்பவை பழங்கால துணி வேலைப்பாடுகள், கோவில்கள், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியர்களின் 8200 வருட கால அமைதியான ஒழுக்கமான சமூக வாழ்க்கை முறை.

– இவ்வளவு பெருமைகள் இருந்தாலும் சில விஷயங்களில் பழங்கால இந்தியா மற்ற நாகரிகங்களான மெசபட்டோமியா, எகிப்து, சீனா போன்ற நாடுகளிடமிருந்து பின்தங்கியே இருந்திருக்கிறது. இந்தியர்கள் தங்கள் நாட்டின் முக்கிய நிகழ்வுகளை சரியான முறையில் பதிவு செய்யவில்லை. சீனர்களும் ரோமானியர்களும் தங்கள் நாட்டு வரலாற்றை தெளிவாக பதிவு செய்துள்ளனர்.

– பழங்கால இந்தியர்கள் தங்கள் சமூகத்தில் உள்ள சமத்துவமின்மை மற்றும் அதனால் உருவாகும் வறுமையை போக்குவதற்க்கு பெரிய அக்கறை எதுவும் கொள்ளவில்லை. மேலும் இந்தியாவின் மீது படிந்துள்ள பெரும் கறை அதன் ஜாதி அமைப்பு.

(தொடரும்…)

Excerpts taken from ‘India The Ancient Past A History of the Indian Sub-Continent from C. 7000 BC to Ad 1200’BY BURJOR AVARI