பேதைப் புலன்கள்!

பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலன்ஐந்தும்
பிண்டத்தி னூடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத் தமர்ந்திருந் தானே.  – (திருமந்திரம் – 466)

விளக்கம்:
பிண்டமெனும் இந்த உடலில் தோன்றும் அறியாமை கொண்ட ஐந்து புலன்களும், இறுதியில் இந்த உடலிலேயே அழிகின்றன. இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றும் உயிரும் அவ்வாறே! இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றும் உயிர்கள் இங்கேயே அழிகின்றன. இதெல்லாம் தெரிந்து தான் உயிர்கள் விந்துவில் தோன்றிப் பிறக்கின்றன.


போகத்துள் புகுந்தான்!

போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனுங்
கோசத்துள் ஆகங்கொணர்ந்த கொடைத்தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து
மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே.  – (திருமந்திரம் – 465)

விளக்கம்:
ஆணும் பெண்ணும்  இன்ப நுகர்ச்சி கொள்ளும் போது, அங்கே ஒரு கருவை உருவாக்க, சிவபெருமான் தோன்றுகிறான். பாய்ந்து வரும் விந்துக்களில் ஒரு துளியை மட்டும் தேர்ந்தெடுத்து, அதில் முப்பத்தொரு தத்துவங்களைச் சேர்த்து, கர்ப்பப் பைக்குள் ஒரு உடலை உருவாக்கும் கொடைத்தொழிலை அவன் செய்கிறான். ஆணும் பெண்ணும் மோகத்தினால் மயங்கி இருக்கும் நிலையில், சிவபெருமான் உள்ளே கரு என்னும் முட்டையைச் செய்து விடுகிறான்.


விந்து பாயும் தூரம்!

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே.  – (திருமந்திரம் – 464)

விளக்கம்:
ஆண் பெண் கூட்டுறவின் போது, சுக்கில நாடியில் தோன்றும் விந்துவும், யோனியிலிருந்து தோன்றும் சுரோணிதமும் தாம் புறப்படுகிற இடத்தில் எட்டு விரல் அளவு பாயும். பாய்ந்து தனது துணையின் உடலுக்குள் நான்கு விரல் அளவு பாயும். அதன் விளைவாக புதிதாக ஒரு உயிர் தோன்றி பிறகு எண்சான் உடலாக வளருகிறது.


பாவச் சுழிகளிலிருந்து நம்மைக் காக்கிறான்!

ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே
வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே.  – (திருமந்திரம் – 463)

விளக்கம்:
ஒரு உயிர் தன்னுடைய முன்வினைகளைத் தீர்ப்பதற்காகவே புதிதாகப் பிறவி எடுக்கிறது. நாம் கருவில் தோன்றிய நாளில் இருந்தே, சிவபெருமான் நம்மை பல வழிகளிலும் மேன்மை அடையச் செய்து, நம்முடைய முன்வினைகளைத் தீர்க்கிறான். பாசப் பற்றினில் எளிதாகச் சிக்கி விடக்கூடிய நம்மை, நாம் கருவினில் தோன்றிய நாளில் இருந்தே, பாவங்களில் விழுந்து விடாமல் காத்து அருள்கின்றான்.


கருவில் இருக்கும் குழந்தை சுவாசம் பெறும் முறை!

பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோன்
இதஞ்செய்யு மொத்துடல் எங்கும் புகுந்து
குதஞ்செய்யும் அங்கியின் கோபந் தணிப்பான்
விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே.  – (திருமந்திரம் – 462)

விளக்கம்:
கருவில் உள்ள குழந்தை, தாயின் சுவாசத்தையே தானும் சுவாசமாகப் பெறுகிறது. தாயின் சந்திரகலையாகிய மூச்சுக்காற்று குழந்தைக்குக் குளிர்ச்சியைத் தருகிறது. தாயின் சூரியகலையாகிய மூச்சுக்காற்று வெப்பத்தைத் தந்து குழந்தையைக் காக்கிறது. நமது சிவபெருமான், வயிற்றில் குழந்தையைச் சுமக்கும் தாயின் மூலாதாரத்தில் வெப்பம் மிகாதவாறு தடுத்துக் குழந்தையை காக்கின்றான்.


இந்த உடலே நம் வீடு!

என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்
நன்பால் ஒருவனை நாடுகின் றேனே.  – (திருமந்திரம் – 461)

விளக்கம்:
நம்முடைய உயிர் இன்பமாகத் தங்குவதற்காக இந்த உடலை இறைவன் அமைத்திருக்கிறான். இந்த உடல் எலும்புகளால் பின்னப்பட்டு, நரம்புகளால் கட்டப்பட்டு, குருதியுடன் சேர்ந்த இறைச்சியால் அமைக்கப்பட்டிருக்கிறது. நமக்கெல்லாம் நன்மை மட்டுமே செய்யும் அந்த இறைவனை எப்போதும் நினைத்திருந்து நாடுகிறேன்.


கர்ப்பத்தில் குழந்தை நினைவு பெறும் முறை!

கர்ப்பத்துக் கேவல மாயாள் கிளைகூட்ட
நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே.  – (திருமந்திரம் – 460)

விளக்கம்:
கர்ப்பத்தில் தனியாக இருக்கும் சிசுவுக்கு, மாயாள் தத்துவங்களைச் சேர்ப்பாள். தத்துவங்கள் சேரும் போது, அக்குழந்தை தன்னுடைய பேருறக்கத்தில் இருந்து விழித்து நினைவு பெறும். வலிமை மிக்க முன்வினைப் பயன்களாகிய தர்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், அதர்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அநைசுவரியம் ஆகிய எட்டுக் குணங்களையும் அந்தக் குழந்தை பெறும். வேதம் படிப்பதால் ஏற்படும் தெளிவைப் போன்ற ஒர் தெளிவான உணர்வினை அந்தக் குழந்தை பெறும்.


கூடலுக்கு முன்பே கருவின் விதி தீர்மானமாகிறது!

ஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்துப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காணப் பதிந்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே.  – (திருமந்திரம் – 459)

விளக்கம்:
காமத்தினால் ஆணும் பெண்ணும் கலந்தபோது, பாயும் விந்து, சுரோணிதம் ஆகியவற்றால் கரு உருவாகிறது. கரு உருவாகும் போதே அதில் உயிருக்குத் தேவையான இருபத்தைந்து தத்துவங்களும் சேர்கின்றன. உண்மையில், ஆண் பெண் கூடலின் போது இந்த தத்துவங்கள் சேர்வதில்லை. கூடலுக்கு முன்பே ஆணின் உடலிலும், பெண்ணின் உடலிலும் புதிய உயிருக்கான தத்துவங்கள் உருவாகி விடுகின்றன. புதிய உயிருக்கான எல்லாப் பொருட்களும் தயாராகி விட்ட நிலையில், ஆணும் பெண்ணும் மாயையினால் தூண்டப்பட்டு மனம் ஒருமித்துக் கலக்கிறார்கள்.


குழந்தையின் இயல்பு தீர்மானமாகும் விதம்

ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்ப்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே.  – (திருமந்திரம் – 458)

விளக்கம்:
ஆண் பெண் கூடலின் போது ஆணின் சுக்கிலம் எதிர்த்துச் சென்றால், பிறக்கும் குழந்தை உருத்திரனைப் போல தாமச குணம் மிகுந்ததாக இருக்கும். கூடலின் போது பெண்ணின் சுரோணிதம் எதிர்த்துச் சென்றால், பிறக்கும் குழந்தை திருமாலைப் போல சத்துவ குணம் மிகுந்ததாக இருக்கும். ஆணின் சுக்கிலமும், பெண்ணின் சுரோணிதமும் சம அளவில் கூடினால், பிறக்கும் குழந்தை பிரமனைப் போல இராசத குணம் மிகுந்ததாக இருக்கும். இவற்றுள் சத்துவ குணம் மிகுந்த குழந்தை, பின்னாளில் பேரரசை ஆளும்.


கருவில் அமையும் விஷயங்கள்!

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடானெனிற் பன்றியு மாமே.  – (திருமந்திரம் – 457)

விளக்கம்:
கருவில் அமைய வேண்டியவை இவை எனத் திருமூலர் சொல்கிறார். போகின்ற எட்டு – சுவை, ஒளி, பரிசம், ஓசை, வாசனை, மனம், புத்தி, அகங்காரம் ஆகியன. புகுகின்ற பத்து – பிராணனன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் ஆகியன. புகுகின்ற எட்டு – காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், துன்பம், அகங்காரம் ஆகியன. ஒன்பது துளைகள் – கண்கள், செவிகள், நாசித்துளைகள், வாய், கருவாய், எருவாய்த் துளைகள் ஆகியன. இவற்றுடன் குண்டலினியும், பிராணன் என்னும் புரவியும் அமைய வேண்டும். இவையனைத்தும் கருவினில் சரியாகப் பொருந்தாவிட்டால், பன்றியைப் போன்ற இழிவான பிறவியாகி விடும்.