பிரமனுக்குக் கிடைத்தப் பாடம்

பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாத கமலத் திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாத விருத்திகொண் டானே. – (திருமந்திரம் – 366)

விளக்கம்:
நல்ல பண்புகளெல்லாம் அழியப் பெற்றவர்கள் தாம் சிவபெருமானைப் பழிப்பார்கள். தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் ஒருமுறை சிவபெருமானை இகழ்ந்து பேசினான். அதனால் கோபம் கொண்ட சிவன், தன்னைப் பழித்த பிரமனின் விண்ணை நோக்கிய தலையைக் கொய்து, அவனுக்கு ஒழுக்கத்தைப் புரிய வைத்தான்.


சிவபெருமானை மனத்தில் இருத்துவோம்

சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி
அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே
திகைத்தெண் ணீரிற் கடலொலி ஓசை
மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே. – (திருமந்திரம் – 365)

விளக்கம்:
பிரளயத்தின் போது எழுந்த கடலோசையைக் கேட்ட உலகத்தவரும் தேவர்களும் திகைத்துப் போனார்கள். அவர்களது அச்சம் நீக்கிய நம் சிவபெருமான், அந்த பிரளயத்தின் நடுவே அக்னிப் பிழம்பாக நின்று அனைவரையும் காத்து அருளினான். வானுலகையும், மண்ணுலகையும் படைத்தவன் சுயம்புவான நம் சிவபெருமான். இதை உணர்ந்தவர்கள் நம் பெருமானை, தம்முடைய மனத்தில் இருத்தி வழிபடுகிறார்கள். நாமும் அதை உணர்ந்து சிவபெருமானை நம் மனத்தில் இருத்தி வணங்குவோம்.


எண்கடல் சூழ் எம்பிரானே!

தண்கடல் விட்ட தமரருந் தேவரும்
எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர்
விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்
கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே. – (திருமந்திரம் – 364)

விளக்கம்:
பிரளயத்தின் போது சூழ்ந்த வெள்ளத்தை வற்றச் செய்தான் சிவபெருமான். இதைக் கண்ட தேவர்கள் எல்லாம் “கடல் போன்ற எங்கள் எண்ணங்களில் உன்னைப் பற்றிய நினைவே வெள்ளம் போல சூழ்ந்து கொள்ளட்டும்” என்று இறைஞ்சினார்கள். வெள்ளமெல்லாம் வற்றிய பிறகு, கடல் போன்ற விண்ணுலகை அமைத்துக் கொடுத்த அந்தக் கடவுளை, கண் கசிந்து நினைக்க மறந்து விட்டார்களே அந்தத் தேவர்கள்!


அஞ்ச வேண்டாம்! சிவபெருமான் அருள் உண்டு!

அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்டு
உலகார் அழற்கண் டுள்விழா தோடி
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே. – (திருமந்திரம் – 363)

விளக்கம்:
பிரளய வெள்ளத்தின் போது, அந்த அலை கடலை ஊடறுத்து நெருப்பு மலையாக நின்றான், இந்த உலகத்துக்கும் வானவர்க்கும் தலைவனான சிவபெருமான். உலக மக்கள் அந்த நெருப்புப் பிழம்பைப் பார்த்துப் பயந்து வெள்ள நீரில் விழுந்து விடாதபடிக்கு “யாரும் அஞ்சாதீர்கள்!” என்று கூறி அருள் செய்தான்.


நெருப்பு மலையாக நின்ற சிவபெருமான்

கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள் புரிந் தானே. – (திருமந்திரம் – 362)

விளக்கம்:
பிரளயத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தின் போது கரிய நிறம் கொண்ட பெரிய மலைகளும் நீரில் மூழ்கின. அந்நேரத்திலும் பிரமனும் திருமாலும் ஒற்றுமையில்லாமல் ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டனர். நம் இறைவனான சிவபெருமான் ஒளி மிகுந்த நெருப்பு மலையாக நின்று வெள்ள நீரெல்லாம் வற்றச் செய்தான். சிவபெருமானின் ஆற்றலைக் கண்ட பிரமனும் திருமாலும் சிவனே தலைவன் என்பதை உணர்ந்தார்கள். தம் தவற்றை உணர்ந்த அவர்களுக்கு சிவபெருமான் அருள் செய்தான்.


தெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே!

தெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே
அளித்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை
விளிந்தா னது தக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யானே. – (திருமந்திரம் – 361)

விளக்கம்:
மனம் தெளிந்தவர்களே கலங்கினாலும் நாம் கலங்க வேண்டாம். அன்பினால் நாம் அடைவது முதற் கடவுளாகிய நம் சிவபெருமானை. அவன் தன்னை நினையாமல் தக்கன் செய்த வேள்வியை கோபத்தினால் அழித்தான். தங்கள் தவற்றை உணர்ந்த தேவர்களை மன்னித்து அருள் செய்தான்.  புனிதமான வார்த்தைகளைக் கூறுபவன் அவன்.

அளிந்து –  அன்பு செய்து,   விளிந்தான் – அழிந்தான்,   வீய – அழிய,  சுளிந்து – சினந்து


ஆணவம் அழிந்தால் நோயில்லாமல் வாழலாம்

நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லாற் புரத்தை விளங்கெரி கோத்தவன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.  – (திருமந்திரம் – 360)

விளக்கம்:
நல்லோர்களின் உடலில் உள்ள ஒன்பது துவாரங்களும் நோயில்லாமல் இன்புற்றிருக்க வேண்டி, பல தேவர்களும் சிவபெருமானிடம் ‘பரிந்து அருள் செய்!’ என வேண்டினார்கள். வில்லால் முப்புரம் அழித்த சிவபெருமானும், ஒளி மிகுந்த தீயாகிய அம்பை செலுத்தி பொல்லாத அசுரர்களை அழித்தான்.

சிவபெருமானை வேண்டினால், அவன் நம்முடைய ஆணவம் முதலிய மும்மலங்களை அழிப்பான். மும்மலங்கள் அழிந்தால் நமது உடலில் உள்ள ஒன்பது துவாரங்களும் நோயில்லாமல் இன்பம் பெறும்.


குவிமந்திரம்

செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
செவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
குவிமந் திரங்கொல் கொடியது வாமே.  – (திருமந்திரம் – 359)

விளக்கம்:
தேவர்கள் வேள்வித்தீயை மூட்டி, மந்திரங்களை உச்சரித்து தவம் செய்கிறார்கள். மந்திரங்களை உச்சரிப்பதோடு, நாம் நமது அகத்தை உற்று நோக்கி மனத்தை குவித்து தியானம் செய்வதே சிறந்த தவமாகும். இந்த தவமுறையை நாம் படர்கொடி போல் பற்றிக் கொள்ள வேண்டும்.


சிவனருளை இழந்த தேவர்கள்

அரிபிர மன்தக்கன் அருக்க னுடனே
வருமதி வாலை வன்னிநல் இந்திரன்
சிரமுக நாசி சிறந்தகை தோள்தான்
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.  – (திருமந்திரம் – 358)

விளக்கம்:
தக்கன் வேள்விக்குத் துணை போனதால் திருமால், பிரமன், தக்கன், சூரியன் ஆகியோருடன் சந்திரன், நாமகள், அக்னி, இந்திரன் ஆகியோரும் தலை, முகம், மூக்கு, கை, தோள் ஆகியவற்றை இழந்தனர்.


அகவேள்வி – சிவபெருமானுக்குப் பிடித்த வழி

அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக்
குலந்தரும் கீழங்கி கோளுற நோக்கிச்
சிவந்த பரமிது சென்று கதுவ
உவந்த பெருவழி யோடி வந்தானே.  – (திருமந்திரம் – 357)

விளக்கம்:
சிவபெருமானே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பதை உணர்ந்து தேவர்கள் அவனை வேண்டினார்கள். ஆறு ஆதாரங்களில் கீழாக உள்ள மூலாதாரத்தின் அக்னிக் கலையை சுழுமுனை வழியாக மேலே எழுப்பினார்கள். அப்போது சிவந்த ஒளியான குண்டலினி சக்தி மேலே சகஸ்ரதளத்தில் போய் பற்றிக்கொண்டது. ‘இந்த அகவேள்வி தனக்குப் பிடித்த வழியாயிற்றே!’ என்று மகிழ்ந்த சிவபெருமான் ஓடி வந்து அவர்களுக்கு அருள் செய்தான்.