உபதேசம் பெற தெளிந்த மனம் அவசியம்

புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே.   – (திருமந்திரம் – 134)

விளக்கம்:
குற்றம் இல்லாத பாலில் நெய் கலந்திருப்பதைப் போல, அலையற்ற மனத்தில், குருவாகிய ஆசிரியர் சொல்லும் உபதேசம் பேதமில்லாமல் நிறைந்து நிற்கும். பேச்சற்ற மவுன நிலையில் நாம் அதை உணரலாம். உபதேசப் பொருளை உணர்ந்தோர்க்கு உடம்பு இங்கு அழிந்தாலும், கரையற்ற சோதியாம் மெய்ப்பொருளில் கலந்து விடலாம்.

குழப்பம் இல்லாத தெளிந்த மனத்தில் குருவின் உபதேசம் நன்றாக பதியும். உபதேசப் பொருளை நன்கு உணர்ந்தவர்கள் தன் வாழ்நாள் இறுதியில் மெய்ப்பொருளாம் சிவசோதியோடு கலந்து விடுவார்கள்.

(புரை – குற்றம்,   திரை – அலை,   ஆரியன் – குரு, ஆசிரியர்,    உரையற்று – பேச்சற்று,   சத்து – மெய்ப்பொருள்)


ஒருமையுள் ஆமை போல!

பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி
இருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே. – (திருமந்திரம் – 133)

விளக்கம்:
சிவபெருமான் பக்தர்களாகிய நம் பெருமைகளையும், சிறுமைகளையும் அறிந்து கொள்வதில் வல்லவர். பெருமை உடையர்க்கு எளிதாகக் காட்சி தருகிறார், சிறுமை உடையவர்க்கு அரிதாகக் காட்சி தருகிறார். உடல் உறுப்புக்களை  தனது ஓட்டிற்குள் அடக்கிக் கொள்ளும் ஆமை போல, ஐந்து புலன்களையும் உள்ளடக்கி இருப்பவர்கள், இந்த உலகிலும், மறு உலகிலும் இன்பம் அடைந்து, குற்றமற்றவர்களாக இருப்பார்கள்.


சிவயோகியர் அடையும் பேறு

பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார் அம்மன்றில் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே. – (திருமந்திரம் – 132)

விளக்கம்:
சிவயோகியர் சிவ உலகை விட்டு நீங்காத மன நிலையை அடைவார்கள். அதனால் அவர்களுக்கு பிறவாமை என்கிற பெரும் பயன் வந்து சேரும். அந்த யோகியர் சிவபெருமான் திருக்கூத்தாடும் அம்பலத்தை விட்டு பிரியாத பெரும்பேறு அடைவார்கள். சிவ உலகில் திளைத்திருக்கும் அவர்கள் உலக விஷயங்களைப் பற்றி பேச மாட்டார்கள்.


மாணிக்கத்துள்ளே மரகத சோதி

மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே. – (திருமந்திரம் – 131)

விளக்கம்:
சுத்தமான தங்கத்தினால் ஆன அம்பலத்தில் உமையம்மையுடன் சிவபெருமான் ஆடுகிற கூத்து, மாணிக்கம் போன்ற சிவந்த ஒளியினுள் மரகதம் போன்ற பச்சை ஒளி கலந்தது போலவும், மாணிக்க மாளிகைக்குள்ளே மரகத மாடம் காணப்படுவது போலவும் இருக்கிறது. அப்படிப்பட்ட திருக்கூத்தைக் கண்டு வணங்கும் வரத்தை  பெற்றவர்கள் சிவ யோகியர்.

சிவனின் நிறம் செம்மையானதாகவும், சக்தியின் நிறம் பசுமையாகவும் இருப்பதால், மாணிக்கத்துள்ளே மரகத சோதியாய் என திருமூலர் பாடியுள்ளார்.


சிவனைக் காண விஷேச ஆன்ம அறிவு தேவையில்லை!

எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வாறு அருட்செய்வன் ஆதிஅரன் தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே. – (திருமந்திரம் – 130)

விளக்கம்:
பக்தர்கள் ஒவ்வொருவரும், தமது அறிவின் எல்லைக்கேற்ப தனக்குத் தெரிந்த முறையில் சிவபெருமானை அணுகுகிறார்கள். அந்தச் சிவபெருமானும் பக்தர்கள் தன்னை எப்படி அணுகுகிறார்களோ, அந்த வழியிலேயே அவர்களுக்கு அருள் செய்கிறான். அந்தப் பழமையான சிவன் ஒப்பில்லாத சபையிலே உமையம்மை காண நடனம் செய்பவன். அந்த நடனத்தின் போது, சிவபெருமான் செவ்வானத்தை விடச் சிவந்த ஒளி வீசும் மாணிக்கமாகத் திகழ்கிறான்.

சிவனை அணுகுவதற்கென்று விஷேசமான அறிவெல்லாம் தேவையில்லை. அவரவர் அறிவின் எல்லை அறிந்து, சிவன் அதற்கேற்றபடி தன்னைக் காட்டிக் கொள்வான்.


அந்த பேரின்ப நிலையை விளக்க முடியாது

தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே. – (திருமந்திரம் – 129)

விளக்கம்:
யோக நிலையில் உள்ள சித்தர்கள் சிவலோகத்தை தம்முள்ளே காண்கிறார்கள். அங்கே அவர்கள் தாம் சிவனோடு பொருந்தி இருப்பதை உணர்கிறார்கள். சிவத்தோடு பொருந்தி இருந்து, பேரின்பன்மான சிவபோகத்தை அனுபவிக்கிறார்கள். அந்த இன்ப நிலை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அதைச் சொல்லினாலோ எழுத்தினாலே விளக்க முடியாது.


வேதத்தினாலும் எட்ட முடியாத நிலை

சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம்
சோம்பர் கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே. – (திருமந்திரம் – 128)

விளக்கம்:
தனக்கென்று எந்த செயலும் இல்லாமல் இருக்கும் சித்தர்களைச் சோம்பர் என்கிறார் திருமூலர்.  அவர்கள் சுத்தமான வெளியிலே பேரின்பத்தை அனுபவித்து, தன்னிலை மறந்து அங்கேயே கிடப்பார்கள். அந்த பேரின்ப நிலை, வேதத்தினாலும் எட்ட முடியாதது. அந்த பேரின்ப நிலையில் வேதங்களை எல்லாம் அவர்கள் மறந்து விடுவார்கள். அவர்களுக்குத் தெரிவதெல்லாம் சிவமாகிய பேரின்பம் மட்டுமே.

சுருதி என்றால் எழுத்து மூலம் இல்லாமல் வாய் மொழியினால் கற்ற வேதம். வேதங்களுக்கு ஆரம்பத்தில் எழுத்து உரு கிடையாது, வாய்மொழியாகத் தான் கற்பிக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தான், வேதங்கள் எழுத்து உருவில் பதிவு செய்யப்பட்டன.