வாரசூலம்-02

தெக்கண மாகும் வியாழத்துச் சேர்த்திசை
அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே – 798

விளக்கம்:
தன்னுடைய கழுத்திலே எலும்புகளை அணிந்திருக்கும் சிவபெருமானது சூலம், வியாழக்கிழமைகளில் தெற்குத் திசையில் இருக்கும். நம்முடைய பயணம் சூலத்திற்கு இடப்பக்கமாகவோ, பின்னோக்கியோ இருந்தால் துக்கம் ஏதும் ஏற்படாது. சூலத்திற்கு எதிராகவோ, வலப்பக்கமாகவோ நம் பயணம் அமைந்தால் மென்மேலும் தீவினைகள் வந்து சேரும்.

உதாரணத்திற்கு, கிழக்கே சூலம் என்றால், நம்முடைய பயணம் கிழக்குத் திசையிலோ, தெற்குத் திசையிலோ இருக்கக்கூடாது. மேற்கு அல்லது வடக்குத் திசையில் பயணம் செய்யலாம்.

தெக்கணம் – தெற்கு, அக்கணி – அக்கு + அணி, எலும்புகளை அணிந்திருக்கும் சிவபெருமான்


வாரசூலம்-01

வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்
தேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே – 797

விளக்கம்:
வாரநாட்களில், எந்தெந்த கிழமைகளில் எந்தெந்த திசையில் சூலம் வரும் என்பதைத் திருமந்திரம் சொல்கிறது. திங்கட்கிழமையும் சனிக்கிழமையும் கிழக்கே சூலமாகும். செவ்வய்க்கிழமையும் புதன்கிழமையும் வடக்கே சூலமாகும். ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளிகிழமையும் மேற்கே சூலமாகும்.

வியாழக்கிழமை வரும் சூலம் பற்றி அடுத்த பாடலில் பார்க்கலாம்.

தேரொத்த திங்கள் – தேரைப் போல நகரும் திங்கள், பாரொத்த சேய் – நிலத்தைப் போன்ற செவ்வாய், நேரொத்த வெள்ளி – திருத்தமான, நேர்த்தியான வெள்ளி, உத்தரம் – வடக்கு, பானுநாள் – ஞாயிறு, குடக்கு – மேற்கு


எல்லா நாளும் முகூர்த்த நாளே!

ஆயும் பொருளும் அணிமலர் மேலது
வாயு விதமும் பதினா றுளவலி
போயம் மனத்தைப் பொருகின்ற வாதாரம்
ஆயவு நாளு முகூர்த்தமு மாமே – 796

விளக்கம்:
நாம் ஆராயும் பரம்பொருள் எங்கே இருக்கிறது என்றால், நம் உச்சந்தலையில் உள்ள சகசிரதளம் எனப்படும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின் மேல் அந்தப் பரம்பொருள் விளங்குகிறது. சுழுமுனையில் பொருந்தி நமது மூச்சுக்காற்று மேலே உள்ள சகசிரதளத்தைத் தொடும்போது நாம் பரம்பொருளை உணரலாம். அந்நேரத்தில் வலி மிகுந்த நம் மனம் வலி எல்லாம் நீங்கி, நம்முடைய ஆதாரமான பரம்பொருளுடன் பொருந்தி நிற்கும். பரம்பொருளுடன் மனம் பொருந்தி நின்றால், நம்முடைய ஆயுளில் எல்லா நாளும் நல்ல முகூர்த்த நாளே!

மூச்சுக்காற்று சகசிரதளத்தைத் தொடும்போது பதினாறு வகையான வாயு அங்கே வெளிப்படும்.

ஆயும் பொருள் – நாம் ஆராயும் பரம்பொருள், அணிமலர் – நாம் சகசிரதளத்தில் அணிந்திருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர், வலி போய மனத்தை – வலி போய் அம்மனத்தை, பொருகின்ற – பொருந்துகின்ற,


மூச்சை சுழுமுனையில் நிறுத்தினால் சிவனைக் காணலாம்

நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்ற வாறுசென் றின்பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே – 795

விளக்கம்:
நம்முடைய மூச்சுக்காற்று நடுவே உள்ள சுழுமுனையில் ஒன்றி நிற்காமல், வலப்பக்கமும் இடப்பக்கமாகவும் அலைந்து ஓடி வருந்துகிறது. சிவயோகியர் தமது மூச்சுக்காற்றை அப்படி அலைய விடாமல் நடுவாக சுழுமுனையில் நிறுத்தி நிதானிக்கிறார்கள். மூச்சுக்காற்று சுழுமுனையில் நிற்கும் போது அங்கே குண்டலினியும் ஒன்று சேர்ந்து நம் தலையின் உச்சியில் ஒளி விடும் தீபமாக நின்று விளங்குகிறது. அந்தத் தீபமே சிவமாகும் என்பதை நாம் அனுபவத்தில் காணலாம்.

அடுகின்ற – வருந்துகின்ற, அந்தணன் – தூய்மையானவன், யோகி,  பணி – பாம்பு (குண்டலினி)


மூச்சு சீராக இருந்தால் உள்ளே பயமோ நடுக்கமோ ஏற்படாது

உதித்து வலத்திடம் போகின்ற போது
அதிர்த்தஞ்சி ஓடுத லாம்அகன் றாரும்
உதித்தது வேமிக ஓடிடு மாகில்
உதித்த இராசி யுணர்ந்துகொள் உற்றே – 794

விளக்கம்:
முந்தைய வாரசரம் பற்றிய பாடல்களில் சொன்னபடி, வெள்ளி, திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் சுவாசம் இடநாடி இயங்கும். சனி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய கிழமைகளில் மூச்சு வலநாடி வழியாக இயங்கும். வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இடநாடி வழியாகவும், தேய்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் வலநாடி வழியாகவும் மூச்சு இயங்கும்.

வலது நாசி பக்கம் உதிக்க வேண்டிய மூச்சுக்காற்று இடது நாசி பக்கம் உதிக்கும் போது, மூச்சு இயல்பாக இயங்காமல் சிறிது அதிர்வதும், தனது பாதையை விட்டு விலகி பிறகு தனது நேரான பாதையில் வந்து சேருவதுமாகவும் இருக்கும். இதுவே வாரசரத்தில் சொன்னபடி மூச்சு இயல்பாக இயங்கினால், சிறிதும் அதிர்வில்லாமல், ஒரு ஒழுங்கு முறையுடன் இயங்கும். மூச்சை சீராக உற்று கவனித்து வந்தால் இந்த உண்மையை உணரலாம்.

வாரசரத்தின் படி நமது மூச்சு இயங்கினால், நமக்குள்ளே பயமோ அதிர்வோ ஏற்படாது.

உதித்து வலத்திடம் – வலப்பக்கம் உதிக்க வேண்டிய மூச்சுக்காற்று இடப்பக்கம் உதிக்கும் போது, அகன்றாரும் – அகன்று ஆரும் (அகன்று சேர்தல்), இராசி – வரிசை, ஒழுங்கு