மேதகு மேனேஜர்

“ஸார்! டீக்கடை ஓனர கூட்டிட்டு வந்துட்டேன். உள்ள வரச் சொல்லவா?”

“வேணாம். அப்படியே நம்ம கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு கூட்டிட்டு வந்துருங்க!”ன்னு சொல்லிய மேனேஜர், தனது உதவியாளரை ஃபோனில் கூப்பிட்டார். “ஹாஃப் அன் அவர் எந்த காலையும் எனக்கு கனெக்ட் பண்ணாதம்மா. அந்த யூ எஸ் க்ளயண்ட் கூப்பிட்டான்னா, நான் ஒரு முக்கியமான மீட்டிங்க்ல இருக்கேன்னு சொல்லிரு”ன்னார்.

“எக்ஸெல் ஷீட் ரெடி பண்ணிட்டியா பார்த்திபா?”

“எல்லாம் ரெடி ஸார். நீங்க வந்தீங்கன்னா சரியா இருக்கும்”.

மேனேஜர் விறுவிறுப்பாக கான்ஃபரன்ஸ் ஹாலில் நுழைந்த போது, அங்கு கூடி இருந்த முக்கிய பொறுப்பாளர்கள் எல்லாம் தூக்கத்தை உதறி நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். டீக்கடை ஓனர் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். அது ஒரு குளிரூட்டப் பட்ட 14 x 30 ஹால். நடுவே ஒரு நீள மேஜை, அதைச் சுற்றி பத்து நாற்காலிகள். அவற்றின் உயர்ந்த தரம் டீக்கடை ஓனரை உட்காரத் தயக்கியது. பாட்டிலில் அடைக்கப் பட்ட தண்ணீர் நிறைய வைக்கப் பட்டிருந்தன.

“உட்காருங்க ஸார்! இந்த மீட்டிங் எதுக்குன்னு தெரியும்ல?” என்று கேட்ட மேனேஜரை பயத்துடன் பார்த்தார். ‘தெரியலன்னு சொன்னா கோவிச்சுக்குவாரோ?’ன்னு ஓடிய அவருடைய மைண்ட் வாய்ஸ் அவருக்கு எதிரே அமர்ந்திருந்த மணிகண்டனுக்கு மட்டும் கேட்டது. பார்த்திபன் தான் தயார் செய்து வைத்திருந்த எக்ஸெல் ஷீட்டை அங்கிருந்த 52 இன்ச் LED டிஸ்ப்ளேயில் தெரியச் செய்தார். அந்நேரம் உள்ளே வந்த கம்பெனி முதலாளி பாலாஜிநாதன் தன்னுடைய ஐஃபோனை தடவியபடியே வந்து தன் இருக்கையில் உட்கார்ந்தார். தலை நிமிரக்கூட நேரமில்லாத அளவுக்கு  அவருக்கு ஒரு முக்கியமான வேலை. தன்னுடைய ஃபேஸ்புக்கில் திருப்பதி பெருமாள் படத்தை தன்னுடைய தொடர்பில் இருக்கும் 684 பேருக்கும் தனித்தனியாக பகிர்ந்து கொண்டிருந்தார். மொத்தமாக ஷேர் செய்தால் பலன் கிடையதாம்.

மேனேஜர் தன்னுடைய மீட்டிங்கை ஆரம்பித்தார். “ஸார் இதப் பாருங்க” என்று டீக்கடை அதிபரை அழைத்து தன்னுடைய ரிப்போர்ட்டை காண்பித்தார்.

“இதுல தேதி வாரியா டீ வாங்கின விவரம் எல்லாத்தையும் டேட்டா எடுத்து வச்சுருக்கோம். அத அனலைஸ் பண்ணி பார்க்கும் போது தான்  முக்கியமான ஒரு விஷயம் தெரிய வந்தது. உங்க கடைல QC உண்டா இல்லையா?”

“ஈஸியா? அது ஏர்டெல்லுக்கும் வோடஃபோனுக்கும் வச்சுருக்கோம்” உளறுகிறோம் என்பதை தெரிந்தே செய்தார் டீக்கடை அதிபர்.

“இந்த பதினெட்டாந் தேதிய பாருங்க. அன்னைக்கு தான் உங்க டீ நல்லாருந்ததா எல்லாரும் ரிப்போர்ட் பண்ணிருக்காங்க. இருபத்திரெண்டாம் தேதி பாருங்க, நாலு பேரு டீய கீழ ஊத்திருக்காங்க. இருபத்தி நாலாம் தேதி லேடீஸுக்கு மட்டும் டீ பிடிச்சிருக்கு. மறுநாள் முப்பது வயசுக்கு மேல உள்ளவங்க எல்லாம் டீ சுமார்ன்னு சொல்லியிருக்காங்க. இப்போ எங்க கம்பெனிக்கு தெரிய வேண்டியது என்னன்னா ஏன் டீயோட டேஸ்ட் இப்படி மாறிக்கிட்டே இருக்கு? குவாலிட்டில ஒரு கன்ஸிஸ்டன்ஸி இல்ல. என்ன செய்யலாம் இத சரி பண்ண? அதுக்கு தான் மீட்டிங். எங்ககிட்ட இருக்கிற டேட்டா எல்லாத்தையும் தாரோம். நீங்க ஒரு வாரத்துக்குள்ள ஒரு ரிப்போர்ட் சப்மிட் பண்ணிடுங்க. இந்த விவரமெல்லாம் பத்தாதுன்னா சொல்லுங்க. பார்த்திபா ஒரு பவர் பாய்ண்ட் ப்ரசெண்டேஷன் ரெடி பண்ணிரலாமா?”

“பண்ணிரலாம் ஸார்!” பார்த்திபன் வேகமாக தன்னுடைய கணினியில் செயல்பட ஆரம்பித்தார்.

டீக்கடை அதிபர் பரிதாபமாக பாலாஜிநாதனையே பார்த்தார். அப்போது தான் தன்னுடைய ஐஃபோனில் இருந்து தலை நிமிர்ந்த பாலாஜிநாதன் “என்ன காளியப்பா? இங்க என்ன செய்ற?” என்றபடி மேனேஜர் காண்பித்த புள்ளி விவரத்தைப் பார்த்தார்.

“காளியப்பா! ஒன் டீ ஒன்னும் வாய்ல வைக்க வெளங்கல. டீ நல்லா இருந்தாத் தான் துட்டு. புரியுதா?”ன்னு ஒரு அதட்டல் போட்டார்.

“சரிங்க மொதலாளி” நன்றி பெருக்கெடுத்து ஓடியது டீக்கடை அதிபரின் குரலில்.

“இனிம யாராவது கூப்டு விட்டாங்கன்னா, நீ வராத. கடப்பசங்கள அனுப்பி வை” முன்னூற்று முப்பதாவது பெருமாள் ஷேரிங் செய்தபடி சொன்னார் பாலாஜிநாதன்.


நெகிழ்ந்து போன வைகை எக்ஸ்பிரஸ்

வழி அனுப்ப வந்தவர்களின் கூச்சல் அடங்கி அப்போது தான் வைகை எக்ஸ்பிரஸ் கொஞ்சம் அமைதியாகி வேகம் பிடித்தது. பயணிகள் தங்களைச் சுற்றி உள்ள முகங்களை ஒரு முறை பார்த்துக் கொண்டார்கள். அவ்வளவு நேரம் இருந்த புழுக்கம் போய் முகத்தில் பட்ட காற்றை உணர்ந்து கொஞ்சம் புன்சிரிப்பை செலவு செய்தார்கள். நாலாவது பெட்டியில் நாப்பத்து ஐந்தாம் இருக்கையில் இருந்த இளவயசுக்காரன் காலை நன்றாக அகட்டியவாறு சரிந்து உட்கார்ந்து இருந்தான். கழுத்தில் ஒரு இரும்புச் சங்கிலி, கொஞ்சம் அழுக்கான டி-சர்ட், கையில் நிறைய மோதிரங்கள் என்று அவனது தோற்றம் பார்ப்பவர்களை கொஞ்சம் பயமுறுத்துவதாக இருந்தது. அவன் சுற்றி இருப்பவர்கள் யாரையும் சட்டை செய்யாமல் மேலேயே வெறித்துப் பார்த்தபடி இருந்தான். கையில் வைத்திருந்த ஃபோனில் ‘நான் யாரு எனக்கேதும் தெரியலையே’ பாட்டு அலறியது. சத்தம் தாங்காமல் பக்கத்தில் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள், அவன் தோற்றத்தை பார்த்தால் எதுவும் சொல்ல பயமாக இருந்தது.

அந்தப் பாட்டு முடிந்தவுடன் ஃபோனை நோண்டி திரும்ப அதே பாடலை ஒலிக்க விட்டு திரும்ப வெறித்தபடி ஆனான். அவன் பக்கத்தில் இருந்த ஜன்னலோரப் பாட்டி அவனைச் சுரண்டினாள்.

“என்னா” என்றான் அவன் எரிச்சலாக.

“நான் ஹார்ட் பேஷண்ட்டுப்பா! பேஸ்மேக்கர் வச்சிருக்காங்க, இவ்வளவு சத்தமெல்லாம் என்னால தாங்க முடியாதுப்பா. கொஞ்சம் சவுண்ட கொறச்சுக்கோ” என்றாள்.

அவளை அலட்சியமாகப் பார்த்து விட்டு மறுபடியும் மேல் நோக்கி வெறிக்க ஆரம்பித்தான். அந்தப் பாட்டு நான்காவது முறையாக ஒலிக்க ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்தவங்க எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்க, ஒரு நடுத்தர வயசு மீசைக்காரர் ‘நான் சொல்றேன்’ என்பது போல கை காட்டினார்.

“தம்பி! அத கொஞ்சம் நிப்பாட்டுப்பா, கொஞ்சம் உன்கிட்ட பேசணும்” என்று ஆரம்பித்தார்.

“என்ன பேசணும் என்கிட்ட?” வேண்டுமென்றே கொஞ்சம் எரிச்சல் காட்டி பேசினான்.

“எந்த ஊருப்பா நீ?”

“மதுர”

“இப்ப மெட்ராஸ் போறியா? என்ன படிச்சிருக்க?”

“பி.எஸ்சி”

“பாத்தா ரொம்ப சோர்ந்து போய் இருக்கியே! நேத்து சரியா சாப்பிடலயோ?”

அவன் பதில் எதுவும் சொல்லவில்லை, ஆனால் முகத்தில் இறுக்கம் தளர்ந்திருந்தது.

“இதப் பாருப்பா, என்ன கவல இருந்தாலும் சாப்பிடாம இருக்கக் கூடாது. பசி வயித்த மட்டுமில்ல, மனசையும் அரிச்சிரும்” மீசைக்காரர் அமைதியாகச் சொன்னார்.

அந்தப் பையனால பொங்கி வந்தக் கண்ணீரை அடக்க முடியவில்லை.

“சாப்பிட்டியான்னு கேக்க எனக்கு யாருமில்லங்க, இப்படி யாரும் கேட்டதில்ல” குரல் உடைந்து அழ ஆரம்பித்தான். அந்தச் சூழ்நிலையே ரொம்ப நெகிழ்ந்து போய் இருந்தது.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அடுத்த வரிசைப் பெண் வேகமாக வந்து அவன் ஃபோனை பிடுங்கினாள். வேகமாக சில நம்பரை அழுத்தி விட்டு திரும்ப தன் இருக்கைக்குப் போனாள். போன வேகத்தில் அந்தப் பையனின் ஃபோன் ஒலித்தது.

“ஒனக்கு யாரும் இல்லன்னு கவலப்படாத, நான் இருக்கேண்டா” என்றாள். ஃபோனே தேவையில்லாமல் அவள் குரல் அங்கே எல்லோருக்கும் கேட்டது.

அங்கே எல்லோருமே அழுது விடுவார்கள் போல இருந்தது. மீசைக்காரர் சண்டை போட்டிருந்த தன் மனைவிக்கு ஃபோன் செய்து பேச ஆரம்பித்தார், ‘உறவு ரீதியாக சவால் விடப்பட்ட ஒருவன்’ என்று ட்விட்டரில் ஒருவர் எழுத ஆரம்பித்தார்.

அந்த ஜன்னலோரத்தில் செத்துப் போயிருந்த கிழவியை யாரும் கவனிக்கவில்லை.


ரேகை இல்லாத உதடுகள்

ஆதி கால மனிதனுக்கும் மனிதிக்கும் உதடுகளில் ரேகை இல்லாமல் இருந்தது. இந்த மனிதிங்கிற வார்த்தை தான் மருவி இப்போ மதினின்னு ஆயிடுச்சு. ரேகை இல்லாத உதடுங்க எல்லாம் ஒரு வித மினுமினுப்போட ஈரத்தோட இருந்தது. இதனால ஆண் பெண் இடையே உள்ள அந்த தூண்டுதல் அப்போ கொஞ்சம் அதிகம். இதுல ப்ரச்சனை எங்கே ஆரம்பிச்சதுன்னா, தூண்டுதலின் வேகம் அதிகமா இருந்ததாலயும், உதடுங்க க்ரிப் இல்லாம வழுக்கலா இருந்ததாலயும் அடிபட்டு நிறைய பேருக்கு மூக்கு ஒடைஞ்சு போச்சு. இப்போ கூட பழைய கோவில்கள்ல பாருங்க, நிறைய சிலைகளுக்கு மூக்கு உடைஞ்சிருக்கும். பிறகு பரிணாம வளர்ச்சியில மனுஷனுக்கு உதட்டுல ரேகை வர ஆரம்பிச்சது, ஒரு க்ரிப்பும் கிடச்சது. அதனால தான் இப்போ நம்ம மூக்கு எல்லாம் முழுசா இருக்கு.

அப்ப எல்லாம் பசங்க யாருக்காவது மூக்கு ஒடஞ்சதுன்னா ஃப்ரண்ட்ஸ்ஸுக்கு பார்ட்டி வைக்கணும். மூக்கு சரியாகிற வரைக்கும் வீட்டு பக்கம் தலை காட்ட முடியாது. பொண்ணுங்க பாடு தான் கொஞ்சம் கஷ்டமா இருந்ததாம். ஆனாலும் இதெல்லாம் வயசுக் கோளாருன்னு கண்டுக்காம இருக்கிற மனப்பான்மையும் பெருசுங்ககிட்ட கொஞ்சம் இருந்திருக்கு. இந்த மாதிரி விஷயத்துக்குன்னே ஸ்பெசலிஸ்ட் வைத்தியர்களெல்லாம் இருந்திருக்காங்க. அந்த வைத்தியம் பத்தி அகத்தியர் எழுதின சில சுவடிங்க என்கிட்ட இருக்கு.

நம்ம நாட்டுல சத்தமில்லாம ரகசியமா ஒரு ஆராய்ச்சி நடந்துகிட்டு இருக்கு. செவ்வாய் கிரகத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி ஆளுங்கள கூட்டிட்டு போய் பாதி வழில கழட்டி விட்டா என்னங்கிறது தான் அந்த ஆராய்ச்சி. அங்கே வேலை பார்க்கிற ஒரு பெண் என் கூட படிச்சவ. அவள் சொன்ன தகவல் இது. முன்னெல்லாம் அங்கே உள்ள செக்யூரிட்டி சிஸ்டம் ரெட்டினா ஸ்கேன் பண்ணி தான் ஆளுங்கள உள்ளே விடுமாம். இப்போ ஆதார் அட்டைக்கே ரெட்டினா ஸ்கேன் உபயோகிக்கிறதுனால சிஸ்டத்த மாத்திட்டாங்களாம். டான் ப்ரௌன் கூட இந்த ரெட்டினா ஸ்கேன் பத்தி என்னமோ பெரிய டெக்னாலஜி மாதிரி எழுதி சாகடிச்சிருப்பார். இப்பெல்லாம் செக்யூரிட்டி சிஸ்டம் வேற மாதிரி. வேலைக்கு வர்றவங்க மூடியிருக்கிற கதவை கிஸ் பண்ணனும், சரியான ஆளா இருந்தா கதவு திறக்கும். இல்லேன்னா ஷாக் அடிச்சு அங்கயே சாக வேண்டியது தான். அங்கே உள்ள எல்லாருடைய உதட்டு ரேகைகளும் டேட்டா பேஸ்ல வச்சிருக்காங்க.

இது பத்தி டெக்னிக்கலா இன்னொரு சமயம் எழுதுறேன்.


சில பல கிறுக்கல்கள்

[liveblog]காலம் நம்மைக் கடப்பதில்லை. நாமும் காலத்தைக் கடப்பதில்லை. காலத்துடன் ஒருங்கிணைந்த பயணம் நம்முடையது.

மனிதன் வடிவமைத்த கான்செப்ட்களில் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று கடவுள், மற்றொன்று பணம்.

மனிதன் கண்டுபிடித்த கடவுளை மறுப்பவர்கள் பணத்தையும் மறுப்பது தான் நியாயம்.

கடவுள், பணம் இரண்டுமே உருவமாகவும், அருவமாகவும் அருள் பாலிப்பவை.

முட்டைகள் தங்கள் இனத்தை பெருக்கிக் கொள்வதற்காக கோழிகளை இடுகின்றன.


கடவுள் எனப்படும் அனானி!

பிரியமான மனிதர்களுக்கு,

அனானி எழுதுவது. நான் பெயர் இல்லாதவன், உருவமற்றவன், காலத்திற்கு அப்பாற்பட்டவன் என்பதால் அனானி என்று சொல்லி கொள்கிறேன். அதையே எனது பெயராக்கி விடாதீர்கள். வரலாற்றில் இப்படித்தான் நிறைய நடந்திருக்கிறது. ஆன்மீக சிந்தனை என்ற பெயரில் உங்கள் மனதில் எழும் சந்தேகங்களும் குழப்பங்களும் எனது இன்பாக்ஸ்ஸில் வந்து சேர்ந்து அது பல டெட்ரா பைட்ஸ்ஸை தாண்டி விட்டது. உங்கள் கேள்விகள் என்னை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றாலும், உங்கள் சந்தேகங்களுக்கு நான் பொறுப்பில்லை என்றாலும் FAQ எனப்படும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் சிலவற்றிற்கு இங்கு பதில் தருகிறேன்.

1. இந்த உலகத்தை படைத்தது யார்?
டெக்னிக்கலாக தெரிய வேண்டும் என்றால் டார்வின் படிக்கலாம். வேதாந்தமாக வேண்டுமென்றால் அவரவர் உலகை அவர்களே படைக்கிறார்கள்.

2. விதி என்பது உண்மயா?
உண்மை. இதற்கு நியூட்டனின் மூன்றாம் விதி பொருந்தும்.

3. மதத்தின் பெயரால் நடக்கும் சண்டை, சச்சரவுகள் பற்றி?
அவை மதத்திற்காகவோ, அவர்களின் கடவுளுக்காகவோ இல்லை. தன்னுடய புரிதலும் நம்பிக்கையும் தான் சரியானது என்று வாதிடுகிறார்கள்.

4. இவற்றை எப்படி நிறுத்துவது?
அது என் வேலை இல்லை.

5. மரணத்திற்கு பிறகு?
செத்து பார். தெரியும்.

6. சமூக வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் ஏன்?
வலிமை உள்ளவன் வேண்டியதை அடைவான். அது இல்லாதவன் இப்படி கேள்விகள் கேட்பான்.

7. நாத்திகம் பற்றி?
அதுவும் ஒரு நம்பிக்கைதான்.

8. யோகா, தியானம் மூலம் கடவுள் தன்மை அடைய முடியுமா?
கடவுள் தன்மை என்று ஒன்று கிடையாது. முயன்றால் தன்னுடைய தன்மை உணரலாம்.

9. பேய், பிசாசுகள் உண்டா?
உண்டு. அவை எல்லோருடய எண்ணங்களிலும் உள்ளன.

10. பிரார்த்தனைகளால் பலன் உண்டா?
சந்தேகத்துடன் செய்தால் பலன் கிடையாது.

11. அரசியல் பற்றி?
சமூக வாழ்விற்கு அது மிகவும் அவசியம்.

12. அரசியலில் முறைகேடுகள் நிறைய உள்ளதே?
அவை service charges.

13. விபத்துக்கள் இப்போது நிறைய நடக்கிறதே?
விஞ்ஞான வள்ர்ச்சியின் ஒரு சிறிய பக்கவிளைவு.

14. பூஜைகள், யாகங்கள் செய்தால் பலன் உண்டா?
அவற்றை உருவாக்கியவர்களைத்தான் கேட்க வேண்டும்.

15. அவை கடவுளால் சொல்லப்பட்டதில்லையா?
நான் உருவாக்கியிருந்தால் இன்று உலகில் ஒரே வழிபாட்டு முறை தான் இருந்திருக்கும்.

16. அப்படியானால் நீங்களே ஒரு வழிபாட்டு முறை உருவாக்கி இருக்கலாமே?
என்னை வழி படச்சொல்லி நான் யாரையும் சொல்லவில்லை.