யோக வழியில் நின்றால் அவனைக் காணலாம்

தாங்கருந் தன்மையுந் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழி
தாங்கிநின் றானும்அத் தாரணி தானே.   – (திருமந்திரம் – 419)

விளக்கம்:
நமது உடலுக்கு உயிரைத் தாங்கும் தன்மையைத் தருபவன் சிவபெருமான். வாழும் காலம் முடிந்து உயிர் உடலை விட்டுப் பிரியும் போதும், நம் உயிருக்கு அவன் ஒருவனே துணையாவான். ஏழு பிறவிகளிலும் அச்சிவபெருமானை நாம்  யோக வழியில் நின்று காணலாம். நம்மை யோக வழியில் நிலையாக நிற்கச் செய்பவனும், கொன்றை மாலையை அணிந்துள்ள நம் சிவபெருமான் தான்.


உடலாய் உயிராய் உணர்வாய்

உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியான் இலங்கொளி
உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரந்
தள்ளுயி ராவண்ணந் தாங்கிநின் றானே.   – (திருமந்திரம் – 418)

விளக்கம்:
தூய உயிராகிய நந்தியம் பெருமான் பரந்த பெருவெளி எங்கும் இலங்கும் ஒளியாக விளங்குகிறான். அவன் நமது உடலாகவும், உள்ளே விளங்கும் உயிராகவும் இருக்கிறான். உயிராக இருப்பது மட்டுமல்லாமல், நமது உணர்வாகவும் இருந்து, நமது உயிர் உடலை விட்டு நீங்காமல் காக்கவும் செய்கிறான் நந்தியம் பெருமான்.


வனைய வல்லான்!

உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலுங் குடமுஞ் சிறுதூதை
மற்றும் அவனே வனையவல் லானே.   – (திருமந்திரம் – 417)

விளக்கம்:
நமக்கெல்லாம் உருவம் கொடுத்தவன் சிவபெருமான். உலகில் நாம் காணும் அனைத்துப் பொருட்களையும் உருவமைத்தவன் அவனே! அனைத்து உயிர்களிலும் அவனே இருந்து நமக்கெல்லாம் வடிவம் தருகிறான். தான் படைத்த உலகையும் அதில் வாழும் உயிர்களையும் காப்பவன் நம் சிவபெருமானே. உலகில் வாழும் உயிர்களுக்கு பிறவியை நிர்ணயிப்பவனும் அவனே. மனிதர்களை மட்டுமல்ல, சின்னஞ்சிறு உயிரினம் முதல் பெரிய விலங்குகள் வரை எல்லாவற்றையும் படைப்பவன் அவனே. அவனே வனைய வல்லான்.


அன்பும் அவனே! அறிவும் அவனே!

அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே.   – (திருமந்திரம் – 416)

விளக்கம்:
ஐம்பூதங்களின் ஐந்து தொழில்களிலும் அன்புடன் இணைந்திருக்கும் நம் சிவபெருமான் அன்பாகவும், அறிவாகவும், அடக்கமாகவும் இருக்கிறான். நமது இன்பங்களில் எல்லாம் அவனே இருக்கிறான். இன்பக்கலவியிலும்  அவன் இருக்கிறான். காலத்தை வகுத்தவன் அவனே. காலத்தை இறுதி செய்பனும் அவனே!


அவனே நம்மைக் காக்கிறான்!

தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்குந்
தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்குந்
தானொரு காலந் தண்மழை யாய்நிற்குந்
தானொரு காலந்தண் மாயனு மாமே.   – (திருமந்திரம் – 415)

விளக்கம்:
தனிச்சுடராய் நிற்கும் சூரியன் நம் சிவபெருமானே. சுழன்று வீசும் சூறாவளிக் காற்றும் அவனே. குளிர்ந்த மழையாகப் பொழிபவனும் நம் சிவபெருமான் தான். இவற்றில் இருந்து நம்மைக் காப்பவனும் அதே சிவபெருமான் தான்!


நான் அவள் அல்லள்!

ரயில் இன்ஜின் போன்ற
மூச்சுக் காத்தும்
வெட்கம் மறந்த
கண்ணீரும் அவன்
சுக்கிலத்தின் பழமையைச்
சொன்னது!

இடுப்பசைத்து அவள்
ஏந்திக் கொண்ட விதம்
“நான் உன்னை விலக மாட்டேன்”
என்பதாம்!

“நான் அவளைப் போன்றவளில்லை”
என்பதை
அடுத்த உடலசைவு
உறுதி செய்தது!


எங்கள் அண்ணல்!

உடலாய் உயிராய் உலகம தாகிக்
கடலாய் கார்முகில் நீர்ப்பொழி வானாய்
இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி
அடையார் பெருவெளி அண்ணல் நின்றானே.   – (திருமந்திரம் – 413)

விளக்கம்:
உடலாகவும், உயிராகவும், உலகமாகவும் தானே உள்ளான் சிவபெருமான். அவனே கடலாகவும், மேகமாகவும், மழையாகவும் விளங்குபவன். எங்கும் குறைவில்லாமல் உட்பொருளாய் இருப்பவன் அவனே. அவன் நம்மால் அடைய முடியாத பெருவெளியில் இருக்கிறான்.


அவன்தான் எல்லாம்!

தானே திசையொடு தேவரு மாய்நிற்குந்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந்
தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந்
தானே உலகில் தலைவனு மாமே. – (திருமந்திரம் – 412)

விளக்கம்:
நம் தலைவனான சிவபெருமானே இந்த உலகுக்கும் தலைவனாவான். அவனே எல்லாத் திசைகளாகவும் இருக்கிறான். எல்லாத் திசைகளிலும் அவனே இருக்கிறான். திசைகளைக் காக்கும் தேவர்களாக இருக்கிறான். ஆதிக்கடவுளான அவன் நமது உடலாகவும், உயிராகவும், உடலும் உயிரும் பொருந்தியிருக்கும் தத்துவமாகவும் விளங்குகிறான். அவனே கடலாகவும் மலையாகவும் மற்ற அனைத்துமாகவும் இருக்கிறான்.


அறிவுக்கு அறிவாய் விளங்குபவன்!

புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே. – (திருமந்திரம் – 411)

விளக்கம்:
இன்பம், துன்பம் ஆகிய இரு வேறுபட்ட நிலைகளால் ஆனது தான் நம் வாழ்க்கை. இது போன்ற எல்லாவிதமான இரு வேறுபட்ட நிலைகளிலிலும் சிவபெருமான் இருக்கிறான். விடியலாகவும் இருக்கிறான், அவனே இருளாகவும் இருக்கிறான். அவன் புகழிலும் இருக்கிறான், இகழிலும் இருக்கிறான். அவன் நம் உடலில் புகுந்திருக்கிறான். நம் உயிராக இருக்கிறான். நம் அறிவினில் நிரந்தரமாகக் கலந்திருக்கிறான்.


சுத்த மாயையில் தோன்றியவை!

ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்
போதித்த வானொலி பொங்கிய நீர்ப்புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே. – (திருமந்திரம் – 410)

விளக்கம்:
இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோர் எட்டுத்திசைகளுக்கான காவலர் ஆவார்கள். இந்த எட்டுத்திசைக் காவலர்கள், சூரியன், சந்திரன், போதனை தரும் நாதம் நிரம்பிய வானம், நீர், நிலம் ஆகிய அனைத்தும் சுத்த மாயையின் விந்துவில் இருந்து தோன்றியவை.  சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் ஐந்து தன்மாத்திரைகளும் சித்தம், மனம், அகங்காரம், புத்தி ஆகியவையும் அதே சுத்த மாயையில் இருந்து தோன்றியவையே!