சிரமன் தந்த சிரமங்கள்

”தூங்கி எந்திரிச்சாலே அவங்களுக்கு ஏதோ ஆயிடுது!” என்றாள் சிரமி. சிரமனின் மனைவி.

“ஆமாமா! சின்ன வயசுலயே அவன் தூக்கத்துல புலம்புவான்” என்றேன்.

“அய்யோ! இது வேற. நடந்தத சொல்றேன். அன்னைக்கு ஒருநாள் ராத்திரி நல்ல சாப்பாடு..”

“ஹோட்டல்ல தானே?” இடைமறித்தேன்.

முறைக்க நினைத்தவள் தொடர்ந்தாள் “ரொம்ப உற்சாகம் ஆயிட்டாங்க. பெரிய எழுத்தாளர் மாதிரில்லாம் பேச ஆரம்பிச்சிட்டாங்க”

“எழுத்தாளர் மாதிரியா? அவனா? என்ன சொன்னான்?”

“இருங்க யோசிக்கிறேன்… ஆங்… இப்படிச் சொன்னாரு. என்னைப் பலவீனப்படுத்தும் காரணிகள் நல்ல கவிதைகளும், எதிர் பாலினத்தவரின் வட்ட வடிவங்களும்” சொல்லும் போது லேசான வெட்கத்தைப் பார்க்க முடிந்தது. “நான் கூட அசந்துட்டேன், இந்த மனுஷன் இவ்வளவு ரொமான்ஸா பேசுவாரான்னு”.

என்னாலேயே அதை நம்ப முடியவில்லை “இப்படித்தான் வயசான காலத்துல சில பேருக்கு புத்தி கெடும். ஆனா உனக்கு இது நல்ல விஷயம் ஆச்சே”ன்னு கேட்டேன்.

“மறுநாள் தூங்கி எந்திரிச்சதுல இருந்து ஒரே பிரச்சனை தான். அது எப்படி நான் பொம்பளையக் கேவலப்படுத்திப் பேசலாமுன்னு ஒரே புலம்பல். வீட்டுல இருக்குற சாமான்லாம் எடுத்து உடைக்க ஆரம்பிச்சிட்டாங்க. கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் புரிஞ்சது, வீட்டுல எதெல்லாம் வட்டமா இருக்கோ அதப்பூராவும் உடைக்க ஆரம்பிச்சிட்டாங்க.”

எனக்கு சில மனோதத்துவக் கணக்குகள் தோன்றி, உடனே அதையெல்லாம் அழித்து விட்டேன். அவன் தந்திருக்கும் துன்பங்கள் போதாதா? “சரிம்மா நான் வேணா பேசிப்பாக்குறேன். நான் சொன்னாக் கேப்பான்” என்றேன்.

சிரமி பெருமூச்சு விட்டுச் சொன்னாள் “நான் இவ்வளவும் சொன்னதே நீங்க அவங்கள கொஞ்ச நாளைக்கு பாக்காதீங்கன்னு சொல்லத்தான்”.

”எனக்கென்ன ப்ரச்சனை இதுல? புரியலையே!”

“நேத்து ராத்திரியும் நல்ல சந்தோஷமா இருந்தாங்க. நிறைய பேச ஆரம்பிச்சிட்டாங்க. பூராவும் உங்களப் பத்தியும், சின்ன வயசுல இருந்து உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற நட்ப பத்தியும்.”

“அது நல்ல விஷயம் தானே?”

“ஒரு கட்டத்துல ஓவராப் போயிட்டாங்க. உங்கள சாண்டில்யன் விஜயமாதேவிய வர்ணிக்கிற மாதிரி வர்ணிக்க ஆரம்பிச்சிட்டாங்க. என்னால அத விவரமா சொல்ல முடில. வெட்கமா இருக்கு. இன்னைக்கு காலைல இருந்து தான் நேத்து பேசுனத நெனச்சு புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க. உங்கள நேர்ல பாத்தா என்ன ஆகுமுன்னு தெரில!”


மிஸ். மரணம்

“டக். டக்!”

“யாரது?”

“மிஸ். மரணம் வந்திருக்கிறேன்”

“இன்னொரு நாள் வாம்மா! பொறு மிஸ்ஸுன்னா சொன்ன?”

“ஆமாம். என்னை யாரும் அவ்வளவு எளிதில் புணர்ந்து விட முடியாது”

“அது சரிதான். என்ன விஷயமா வந்திருக்க நீ?”

“உனது வாழ்நாள் எண்ணப்பட்டு விட்டது”

“ஏதும் விசாரணையா இப்ப? அல்லது தீர்ப்பா?”

“இல்லை. நீ உருமாற்றம் ஆகப்போகிறாய்”

“அப்படின்னா? கொஞ்சம் விபரமா சொல்லேன்”

“நடக்கும் போது நீயே தெரிந்து கொள்வாய்”

“அது என்ன எழவாவும் இருந்துட்டுப் போட்டும். இன்னைக்கு வேணாம். இன்னொரு நாள் வச்சுக்குவோம்”

“விளையாடுகிறாயா நீ? நீட்டிப்பத்ற்கு வாழ்நாள் ஒன்றும் உன்னுடைய ….”

“சரி. சரி. நிறுத்தும்மா. நான் ஏற்கனவே கோவத்துல இருக்கேன். கோவமா இருக்கும் போது நான் சாகக்கூடாது”

“நீ சாவதற்கு என்னுடைய கோபம் போதும்”

“நான் சொல்ற்து ஒனக்குப் புரியல. கோவமா இருக்கும் போது செத்தா, என்னால சாவ அனுபவிக்க முடியாது”

“நீ சொல்வது எனக்குப் புரியவில்லை”

“இன்னைக்கு நெறையக் கோவம் என் கண்ண மறச்சுக்கிட்டு இருக்குது. இப்ப செத்தா சாவும் போது என்ன நடக்குதுன்னு என்னால கவனிக்க முடியாது.”

“அதைக் கவனித்து என்ன ஆகப் போகிறது உனக்கு?”

“சாவைக் கட்டிப்பிடிச்சு வரவேற்கனும்னு நெனைக்கேன். சாவ அணு அணுவா ரசிக்கணும். அப்போ எனக்கு வேற எந்த சிந்தனையும் இருக்கக் கூடாது”

“இப்போது எனக்கு உன்னை உடனே கட்டிப்பிடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது மானிடா!”


சொரிமுத்து ஐயனாரின் மகிமை (உண்மைச் சம்பவம்)

“பாபநாசத்துக்குப் போகனும்” என்று உத்தமவில்லி சொன்ன போது கோபமாக வந்தது. அந்தப் படத்தைப் பார்த்து விட்டு அப்போது தான் வெளியே வந்திருந்தோம். “இல்ல! படம் பாத்துட்டு பாபநாசம் அருவிக்குப் போகணும் போல இருக்கு” என்றார். நல்லவேளையாக பாகுபலிக்கு கூட்டிப் போகவில்லை. அந்த வார ஞாயிற்றுக்கிழமையே பாபநாசத்துக்கு கிளம்பியாயிற்று.

செல்லும் வழியில் திட்டத்தில் சின்ன மாறுதல். மணிமுத்தாறு அருவி குழந்தைகள் குளிக்க வசதியாக இருக்கும் என்று. மணிமுத்தாறு அருவியில் குளித்து விட்டு பாபநாசம் மலையேறி காரையார் அணைக்குப் போகும் வழியில் உள்ள சொரிமுத்து ஐயனார் கோவிலுக்கு போன போது காரை பார்க் செய்ய இடம் கிடைக்கவில்லை. அவ்வளவு வேன்கள்! இவ்வளவு கூட்டத்தில் ஐயனாரை பெர்சனலாக பார்க்க முடியாதே எனக் கவலையாக இருந்தது. கோவிலுக்கு உள்ளே போய்ப் பார்த்த போது தான் தெரிந்தது, அவ்வளவு கூட்டமும் கோவிலுக்கு வெளியே சமையலில் பிஸி என்பது.

கோவிலில் கூட்டம் இல்லை, செல்ஃபோனில் சிக்னல் இல்லை. இதைவிட வேறென்ன நிம்மதி வேண்டும்? காட்டுக்குப் போனால் நாட்டில் உள்ள பிரச்சனை எல்லாம் மறந்துதான் போகிறது. நல்ல தரிசனம். பூரணை, புஷ்கலை ஆகியோருடன் இருந்ததால் ஐயனார் சாந்தமாகக் காணப்பட்டார்.

போதுமான நேர தரிசனத்துக்குப் பிறகு பிரகாரத்தைச் சுற்றி வந்தபோது அந்தப் பெண் என் கவனத்தை ஈர்த்தார். காரணம் color, texture and glossiness எல்லாமே சரியான அளவில் அமைந்திருந்தது, அவர் படையலுக்கு எடுத்து வைத்துக்கொண்டிருந்த சர்க்கரைப் பொங்கலில். பொங்கலைப் பொறுத்தவரை, ருசி பார்க்காமல், கண்ணால் பார்த்தே சொல்லி விடலாம் அதன் தரத்தை. அந்தப் பெண் எடுத்து வைத்த பொங்கலின் நிறமும் தளதளப்பும் என் ஐம்புலன்களையும் சோதித்தது.

ஐயனாரை நினைத்துப் பொறாமைப்பட்டவாரே பிரகாரத்தைச் சுற்றி வந்தேன். எதிலுமே மனம் செல்லவில்லை. நினைவு பூராவும் அந்தப் பொங்கல் தான். மனத்தைத் தேற்றிக்கொண்டு வந்து சிறிது நேரம் தியானம் செய்தேன். தியானத்தில் பொங்கலெல்லாம் கரைந்தது. கண் விழித்த போது உத்தமவில்லி ஒரு சிறிய வாழை இலையை என் கையில் வைத்தார். இலையில் நான் பார்த்து ரசித்த அதே பொங்கல்!

ஐயனார் அருள் சொரிவதைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று தான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.


சில பல கிறுக்கல்கள் – ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்

என்னுடைய சில பல கிறுக்கல்கள் இப்போது ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனாக கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது (விலையில்லாது தான்). இதை வாசிக்க இணைய இணைப்பு தேவை இல்லை. இன்றே தரவிறக்கம் செய்து வாசித்துப் பிறவிப் பயனை அடையுங்கள்!

https://play.google.com/store/apps/details?id=com.scribblers.kirukkal


தற்பரனின் கனவு

ஒரு கனவு! நீரும் மணலுமாய் அழகான ஆறு ஒன்று. அவ்வளவு சுத்தமான ஆற்றைக் கனவில் மட்டும்தான் பார்க்க முடியும். அதன் கரையோரத்திலே “பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே” என்று பாடியபடி அந்தக்கால விஜயகுமார் தன்னுடைய சமகாலத்து மஞ்சுளாவைத் துரத்துகிறார். பாடியபடியே திரும்பிப் பார்க்கும் விஜயகுமார் என்னைப் பார்த்து சிநேகமாகச் சிரிக்கிறார். அப்போது தண்ணீருக்குள் இருந்து புலி ஒன்று சாவகாசமாக வெளியே வருகிறது. முழுசாக ஆச்சரியப்படக்கூட நேரமில்லை. இன்னும் நான்கைந்து புலிகள் தண்ணீரை விட்டு வெளியே வருகின்றன. அடுத்த வினாடி ஒரு சிறிய குகைக்குள் அந்த புலிகள் என்னைச் சுற்றி வளைத்து நிற்கின்றன.

தலைமைப்புலி என்னைப் பார்த்து “இன்னைக்கு நீ தப்பிக்க முடியாது” என்று உறுமியபடி தன் கூரிய நகங்களால் என்னை நெருக்குகிறது. என் பக்கத்தில் நிற்கும் என் தங்கையின் மகன் விக்கி “மாமா! உங்க செருப்புல சாணியா ஒட்டிருக்கு. ஏன் மாமா சாணிய மிதிச்சீங்க?”ன்னு கேட்கிறான். புலியின் நகங்கள் கழுத்தை நெருக்க நெருக்க நான் ஒரு முடிவுக்கு வந்து ஆனாபானா தியானம் செய்ய ஆரம்பிக்கிறேன். வாழ்க்கையின் கடைசி மூச்சு தியானம் செய்தபடி போகட்டுமே! எல்லாம் அடங்கி ஓய்ந்த மாதிரி இருக்கும் போது என் சட்டைப்பையில் உள்ள அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி ‘you have been upgraded to heaven’ என்று. அடுத்த கணம் கனவில் இருந்து விழித்துக் கொண்டேன்.

என் கனவுக்குள் வேறு யாரும் வந்து குரல் கொடுக்க முடியாது. ஆனால் என் கனவில் விக்கியின் அதே குரலைக் கேட்டேன். ஒரு புலி நிஜமாகப் பேசினால் எப்படியிருக்கும் என்பதைத் தத்ரூபமாகக் கேட்டேன். அதன் நகங்கள் என் கழுத்தை நெறித்தால் எப்படி இருக்கும் என்பதை அப்படியே உணர்ந்தேன். என் கனவில் என்னைத் தவிர வேறு யாரும் பிரவேசிக்க முடியாது. தசாவதாரம் கமல் மாதிரி என் கனவில் வரும் எல்லாப் பாத்திரங்களையும் நானே நடித்திருக்கிறேன். அந்தப் புலிகள், விஜயகுமார், மஞ்சுளா, விக்கி, நான் எல்லாரும் நானே! எல்லாருக்கும் நானே குரல் கொடுத்திருக்கிறேன். என் கனவில் வந்த இடங்கள் எல்லாம் இதுவரை நான் எங்குமே பார்த்திராதவை. அவையனைத்தும் என் கற்பனையே!

இது ஒரு சிறிய கனவு பற்றிய சிந்தனை. இதையே கொஞ்சம் பெரிய அளவில் யோசித்துப் பார்த்தேன்.

“தற்பரனின் கனவு இந்த உலகம்” என்கிறார் திருமூலர்.

இப்போது யோசித்துப் பாருங்கள் இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்று. நாம் காண்பது எல்லாமே அந்தக் கடவுளின் கற்பனையே. நானும் நீங்களும் அவன் காணும் கனவே! நாம் பேசுவதெல்லாம் அவன் குரலே! நம்முடைய செயல்கள் எல்லாம் அவனுடைய கற்பனையே! நமக்கு நிகழ்வது எல்லாமே அவன் கனவுப்படியே!

இந்தக் கட்டுரையும் தற்பரனின் கற்பனையே ஆகும்.


Eyes Wide Shut – ஒரு ரசனைப் பார்வை

Eyes-wide-shut_2

கணவன் மனைவி உறவில் உள்ள சிக்கல்கள்  உலகமயமானவை. உடைகள் மாறினாலும், பழக்க வழக்கங்கள் மாறினாலும், எல்லா நாட்டிலும் திருமண உறவு, அடிப்படையில், ஒரே மாதிரியே இயங்குகிறது. Eyes Wide Shut படம் பார்த்தால் இதை இன்னும் புரிந்து கொள்ளலாம். பிரபல மருத்துவர் பில் ஹார்ஃபோர்ட், அவரது மனைவி அலிஸ். இவர்களது தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்படும் மனச்சிக்கல்களை தெளிவாக அலசும் படம் இது. ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள மிகுதியான அன்பு அவ்வப்போது சலிப்பை ஏற்படுத்துகிறது, அதனால் நிகழும் சில தடுமாற்றங்கள், அவை ஏற்படுத்தும் வலிகள் ஆகியவற்றை சுவாரசியாமான சம்பவங்களாக தொகுத்திருக்கிறார்கள்.

பில்லும் அலிஸும் ஒரு மது விருந்துக்குக் கிளம்புவதில் கதை ஆரம்பிக்கிறது. விருந்தில் கிடைத்த அனுபவங்களை இருவரும் மறுநாள் தங்கள் படுக்கையறையில் போதையின் துணையுடன் பகிர்ந்து கொள்ளும் போது மன உரசல்கள் ஏற்படுகின்றன. தான் ஒருமுறை வழியில் பார்த்த கப்பல்படை அதிகாரியிடம் தன் மனத்தை பறிகொடுத்ததாக அலிஸ் சொல்கிறாள். “ஒரு வேளை அந்த அதிகாரி என்னைக் கூப்பிட்டிருந்தால் என்னுடைய கணவனாகிய நீ, நம் குழந்தை, எதிர்கால வாழ்க்கை ஆகிய எதைப் பற்றியும் யோசிக்காமல் அவனுடன் போயிருப்பேன். நல்ல வேளை! அதற்கப்புறம் அவனைப் பார்க்கவில்லை” பில்லின் பெருந்தன்மை அலிஸை வெளிப்படையாக பேச வைக்கிறது. ஆனால் பில் உள்ளுக்குள் குமைய ஆரம்பிக்கிறான்.

குடும்ப நண்பர் ஒருவரின் மரணச்செய்தி கேட்டு, அந்த இரவு நேரத்தில் பில் துக்க வீட்டுக்கு போக வேண்டியதாகிறது. அந்த ஒரு இரவில் பில்லுக்கு பல விதமான அனுபவங்கள் ஏற்படுகின்றன. இறந்து போன குடும்ப நண்பரின் மகள் பில்லிடம் தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறாள். அவளை சமாதானப்படுத்தி விட்டு ஒரு வழியாக வெளியே வருகிறான். சாலையில் எதிர்ப்படும் ஒரு விபச்சாரம் செய்யும் பெண் பில்லை தன் வீட்டுக்கு அழைக்கிறாள். அவளை நெருங்கும் சமயம் அலிஸிடம் இருந்து வரும் ஃபோன், பில்லை அந்த சூழ்நிலையில் இருந்து விடுவிக்கச் செய்கிறது. பிறகு ஆர்வக் கோளாறினால், உறுப்பினர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லாத ஒரு ரகசிய கூட்டத்துக்கு பொய் சொல்லி உள்ளே போகிறான். அங்கே மாட்டிக்கொண்ட அவனை ஒரு பெண் தன் உயிரை பலி கொடுத்துக் காப்பாற்றுகிறாள்.

ஒரே இரவில் ஏற்பட்ட சம்பவங்கள் தந்த கலவையான உணர்வுகளைத் தாங்க முடியாமல், நடந்த எல்லாவற்றையும் அலிஸிடம் சொல்லி அழுகிறான். மறுநாள் மகளுக்காக கிறிஸ்துமஸ் பரிசு வாங்க  கடைக்குச் செல்கிறார்கள். அங்கே பில் அலிஸிடம், நாம இப்போ என்ன செய்வது என்று குற்றவுணர்வோடு கேட்கிறான். அதற்கு அலிஸ் சொல்லும் பதில் தான் படத்தில் முக்கியமான விஷயம். இந்தப் படத்தைப் பற்றி என்னை எழுதத் தூண்டியது இந்த விஷயம் தான். “எப்படியோ இத்தனைச் சூழ்நிலைகளையும் சமாளித்து, அதிலிருந்து தப்பி வாழப் பழகியிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய விஷயம்?” வாழ்க்கை பற்றிய தெளிவான பார்வையுடன் அலிஸ் சொல்லும்  இந்த நிதானமான பதிலைக் கேட்டு பில் ஆச்சரியப்படுகிறான். “அப்போ இனிமேல் எப்பவுமே இப்படி சமாளித்து விடுவோமா” எனக் கேட்க ஆரம்பித்த பில்லை அலிஸ் தடுத்துச் சொல்கிறாள் “அதைப் பற்றி இப்போது எதுவும் பேச வேண்டாம். நினைத்தாலே பயமாக இருக்கிறது!”.

ஸ்டான்லி குப்ரிக்கின் இயக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் இது. படத்தின் இயக்கத்தை செய்நேர்த்தி என்று  நான் சுருக்கமாகச் சொன்னாலும், அவருடைய மேதா விலாசம் சுருக்கமான விஷயம் இல்லை. பில்லாக டாம் க்ரூஸும் அலிஸாக நிக்கோல் கிட்மனும் தங்கள் நடிப்பை  அநாயாசமான கொடுத்திருக்கிறார்கள். சிறு வயதினர்க்கு இது கொஞ்சம் கூட ஏற்ற படம் இல்லை. படத்தின் கதை ஓட்டத்தில் கலந்து விட்ட எனக்கு சில காட்சிகளில் வரும் நிர்வாணங்கள் உறைக்கவில்லை, மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை.

நேற்று இந்தப் படத்தை எத்தனையாவது முறையாகவோ பார்த்தேன். இன்னும் எத்தனை முறை பார்ப்பேன், இதன் கதையை இன்னும் எத்தனை பேருக்குச் சொல்லி கழுத்தறுப்பேன் என்பது எனக்கே தெரியவில்லை.


அட்டாங்கயோகம் நூலுக்கான முன்னுரை

உங்களால் தலை உச்சியின் மேல் கவனம் வைத்து தியானம் செய்து, அதில் கிடைக்கும் மகிழ்வை உணர முடிகிறதா? அந்த மகிழ்வை உணர்ந்தால் நீங்கள் வானுலகில் உள்ள தேவர்களை விட மேலானவர்கள் என்று திருமூலர் சொல்கிறார்.  வானுலகத் தேவர்கள்  பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதை விட நமது உச்சியில் ஊறும் அமுது மேலானது. அவர்களால் அகத்தில் ஊறும் அமுதைக் கடைந்து எடுக்கும் வழி தெரியவில்லை, அதனால் புற உலகின் அமுதத்தை நாடினார்கள். தேவர்களுக்கும் தெரியாத அந்த வழியை, அகத்தியானம் செய்யும் முறையை, திருமூலர் நமக்குச் சொல்லித் தருகிறார்.

அட்டாங்கம் என்றால் எட்டு உறுப்புக்கள் என்று அர்த்தம். அட்டாங்க யோகத்தின் எட்டு உறுப்புக்கள் – இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவை ஆகும். இயமம் என்பது தீய எண்ணங்கள், தீய செயல்கள் ஆகியவற்றை விலக்குவது. ஒழுக்க நெறியை நாடி அதில் தொடர்ந்து நிற்பது நியமம். அடுத்து பயல வேண்டியது பல வகைப்பட்ட ஆசனங்கள். ஆசனங்கள் கற்ற பிறகு பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி. அடுத்த பாடம் பிரத்தியாகரம் என்னும் மனத்தை உள்நோக்கித் திருப்பும் பயிற்சி. உள் நோக்கித் திரும்பும் மனத்தை அங்கேயே நிலை நிறுத்தும் பயிற்சி தாரணை ஆகும். மனம் அகத்திலே நிலை பெற்றால் தியானப் பயிற்சி சாத்தியமாகும். தியானத்திலே நிலைபெறப் பயின்றால் சமாதி நிலை அடையலாம். சமாதி என்பது பூரண நிலை. நமது மூலாதாரத்தில் (குறிக்கு இரு விரல் அளவு கீழே) இருக்கும் குண்டலினி வடிவிலான சக்தி, நமது தலையின் உச்சியில் இருக்கும் சிவனைச் சென்று சேர்வது சமாதி நிலையாகும்.

இயமமும் நியமமும் இல்லாமல் மற்ற பயிற்சிகள் சாத்தியமில்லை.

சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.  –  (திருமந்திரம் – 618)

இயமம், நியமம் முதலியவற்றைக் கடைப்பிடிப்பவர்களால் சமாதி வரை செல்ல இயலும். இயமம், நியமத்தில் ஆரம்பித்து சமாதி வரை சென்றவர்கள் அட்டமாசித்திகளை அடைவார்கள். இயமம் முதல் சமாதி வரையிலான அட்டாங்க யோகத்தில் நிலைத்து நிற்பவர்களே யோகத்தின் பூரண நிலையை அடைய முடியும்.

பிராணாயாமப் பயிற்சி செய்பவர்களுக்கு திருமூலரின் அட்டாங்கயோகம், இன்னும் சிறந்த அனுபவத்தை நோக்கி நகர உதவும். சிறு வயதில் நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரெண்டு அங்குல நீள அளவில் இயங்கும். வயது ஏற ஏற சுவாசிப்பின் நீளம் குறைகிறது. யோகப்பயிற்சியின் நோக்கம் சுவாசிப்பின் நீளத்தை மறுபடியும் பன்னிரெண்டு அங்குல நீளத்திற்கு கொண்டு வருவதாகும். முறைப்படி தொடர்ந்து பிராணாயாமப் பயிற்சி செய்பவர்களுக்கு கள் உண்ணாமலே மகிழ்வு உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும், சோம்பல் நீக்கி சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் என்று திருமூலர் சொல்கிறார். அரைகுறையாக பயிற்சி செய்யும் நானே இதை அனுபவ உண்மையாக உணர்கிறேன்.

யோகம் பயில்பவர்களுக்கு திருமூலர் சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறார். திருமூலரின் அட்டாங்கயோகத்தை வெறுமனே படிப்பதால் உபயோகம் இல்லை, பயிற்சியும் அவசியம். தொடர்ந்த பயிற்சியும், நமது குருநாதரான திருமூலரின் வழிகாட்டுதலும், நம் மனத்தையும் புத்தியையும் செம்மைப் படுத்தும். ஆன்மிகம் தவிர்த்துப் பார்த்தாலும் அட்டாங்கயோகப் பயிற்சி நம்மை இன்னும் சிறந்த மனிதனாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.


செல்லையா காவியத்தலைவன் பார்க்கிறான்

‘செல்லாத துட்டோட பயணம் போகலாம், ஆனா செல்லையாவோட படத்துக்குப் போகக்கூடாது’ன்னு எங்க ஊர்ப்பக்கம் ஒரு சொலவட உண்டு. சினிமா பாத்துட்டு விமர்சனம்னு ஒன்னு பேசுவான், அதுக்கு பயந்து யாரும் அவங்கூட படத்துக்கு போறதில்ல. “இங்க நல்லா படம் எடுக்கத் தெரிஞ்சவனுக்கு ரசன இல்ல. ரசன இருக்கிறவனுக்கு அத நல்லா எடுக்கத் தெரில” ங்கிறது அவனோட பொது விமர்சனம். ரஜினி படத்தப் பத்தி மட்டும் கொற சொல்ல மாட்டான். கமல் ரசிகனைப் பாத்தா கூப்பிட்டு வச்சு வம்பிழுப்பான். “ஒங்க ஆளு அழுதா தியேட்டர்ல கை தட்றானுங்க. அதுவாடா நடிப்பு? எங்க ஆளு அழ மாட்டாரு, ஆனா அழ வைப்பாரு”ன்னு ஆரம்பிச்சான்னா ‘சரி செல்லையா, சரி செல்லையா ரஜினி தான் பெஸ்ட்’ன்னு சொல்லித்தான் தப்பிக்கணும்.

அந்த செல்லையா கூடத்தான் நான் காவியத்தலைவன் பாக்க வேண்டியதாப் போச்சு. நான் பயந்த அளவுக்கு ஒன்னும் ஆகல, படம் ஆரம்பிச்சு பத்தாவது நிமிஷம் சுவாரசியமானவன் பெறகு அப்படியே படத்தோட ஐக்கியமாயிட்டான். ரொம்ப நிம்மதியா இருந்தது எனக்கு. இண்டர்வலுக்குப் பிறகு அப்பப்போ ஏதாவது சொல்ல வந்தான், என்ன நெனச்சானோ திரும்ப படத்துல முங்கிட்டான். செல்லையாவ பாத்த யாரும் எங்க பக்கத்துல வந்து உட்காரல, வேற பக்கம் போயிட்டாங்க. எனக்கு படம் பாக்க ஃப்ரீயா இருந்தது. நான் பொழுது போறதுக்காக சினிமா பாக்குறவன், அந்த வகைல நல்லாவே பொழுது போச்சு.

தியேட்டர்ல அமைதியா இருந்த செல்லையா வெளிய வந்து வறுக்க ஆரம்பிச்சான், நான் வேக ஆரம்பிச்சேன். ஒன்னு புரிஞ்சது எனக்கு,  ‘நடிப்புங்கிறது கைதட்டல் வாங்குறது இல்ல, பாக்குறவங்கள உணர்ச்சி வசப்பட வைக்கிறது’ன்னு சொல்ற விஷயம் அவனுக்கு ரொம்ப பிடிச்சுப் போயிருக்கு. “இதத்தானடா இத்தன வருஷமா சொல்லிட்டுருக்கேன்!”ன்னு ஃபீல் பண்ணான். ஒவ்வொரு சீனா சொல்லி அத தான் ரசிச்ச விதத்த விவரப்படுத்தி, என்னை ரொம்பவே படுத்தினான். நானும் உன்கூட தானடா படம் பாத்தேன்னு சொல்ல நெனச்சு சொல்லாம விட்டுட்டேன்.

செல்லையாவ நிப்பாட்ட வேற வழி தெரியாம “ஆமா செல்லையா! படம் சூப்பர். அத்தன பேரு நடிப்பும் சூப்பர்”ன்னேன். சொல்லி முடிக்கல “என்ன சூப்பர கண்டுட்ட நீ”ன்னு ரிவர்ஸ் அடிச்சான். “புராண நாடக சீன எல்லாம் ஓரளவுக்கு மெனக்கெட்டவங்க, சுதந்திரப் போராட்ட சீன பூராவும் லோரம் இப்சம் போட்டு நிரப்பியிருக்காங்க. வந்தே மாதரம்ங்கிறது டம்மி வார்த்தையா போச்சு. நடிப்புலயும் பாரு சித்தார்த்தும் ப்ருத்வியியும் நல்லா பண்ணியிருக்காங்க, ஆனா நாசர் அவங்களுக்கு ஏத்த மாதிரி தன்ன ட்யூன் பண்ணிக்கல.” “ம்யூசிக்”ன்னு ஆரம்பிச்சேன், “எடே! தமிழ்நாட்டுல ம்யூசிக் பத்தி பேசக்கூடாதுன்னு ஒன்கிட்ட யாரும் சொல்லலியா?”ன்னு கேட்டான்.

நடந்துகிட்டே பேசிட்டிருந்த எங்க பின்னால “ஏண்டா டேய்!”ன்னு ஒரு சத்தம் ஆல்கஹால் வாசனையோட வந்தது. கொரல் குடுத்த ஆசாமி நாங்க பேசிக்கிட்டு இருந்தத கேட்டுகிட்டே வந்திருப்பார் போல. “வெரல் விட்டு எண்ணுனா ஒரு நாலு பேரு தான் பாக்குற மாதிரி படம் எடுக்குறான். இப்பிடி நொட்ட பேச்சு பேசி பேசியே அவங்களையும் மொடக்கிப் போடுங்க. சரியாடே!”ன்னு சொல்லிட்டு வேகமா நடந்து போயிட்டார்.


மேதகு மேனேஜர்

“ஸார்! டீக்கடை ஓனர கூட்டிட்டு வந்துட்டேன். உள்ள வரச் சொல்லவா?”

“வேணாம். அப்படியே நம்ம கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு கூட்டிட்டு வந்துருங்க!”ன்னு சொல்லிய மேனேஜர், தனது உதவியாளரை ஃபோனில் கூப்பிட்டார். “ஹாஃப் அன் அவர் எந்த காலையும் எனக்கு கனெக்ட் பண்ணாதம்மா. அந்த யூ எஸ் க்ளயண்ட் கூப்பிட்டான்னா, நான் ஒரு முக்கியமான மீட்டிங்க்ல இருக்கேன்னு சொல்லிரு”ன்னார்.

“எக்ஸெல் ஷீட் ரெடி பண்ணிட்டியா பார்த்திபா?”

“எல்லாம் ரெடி ஸார். நீங்க வந்தீங்கன்னா சரியா இருக்கும்”.

மேனேஜர் விறுவிறுப்பாக கான்ஃபரன்ஸ் ஹாலில் நுழைந்த போது, அங்கு கூடி இருந்த முக்கிய பொறுப்பாளர்கள் எல்லாம் தூக்கத்தை உதறி நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். டீக்கடை ஓனர் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். அது ஒரு குளிரூட்டப் பட்ட 14 x 30 ஹால். நடுவே ஒரு நீள மேஜை, அதைச் சுற்றி பத்து நாற்காலிகள். அவற்றின் உயர்ந்த தரம் டீக்கடை ஓனரை உட்காரத் தயக்கியது. பாட்டிலில் அடைக்கப் பட்ட தண்ணீர் நிறைய வைக்கப் பட்டிருந்தன.

“உட்காருங்க ஸார்! இந்த மீட்டிங் எதுக்குன்னு தெரியும்ல?” என்று கேட்ட மேனேஜரை பயத்துடன் பார்த்தார். ‘தெரியலன்னு சொன்னா கோவிச்சுக்குவாரோ?’ன்னு ஓடிய அவருடைய மைண்ட் வாய்ஸ் அவருக்கு எதிரே அமர்ந்திருந்த மணிகண்டனுக்கு மட்டும் கேட்டது. பார்த்திபன் தான் தயார் செய்து வைத்திருந்த எக்ஸெல் ஷீட்டை அங்கிருந்த 52 இன்ச் LED டிஸ்ப்ளேயில் தெரியச் செய்தார். அந்நேரம் உள்ளே வந்த கம்பெனி முதலாளி பாலாஜிநாதன் தன்னுடைய ஐஃபோனை தடவியபடியே வந்து தன் இருக்கையில் உட்கார்ந்தார். தலை நிமிரக்கூட நேரமில்லாத அளவுக்கு  அவருக்கு ஒரு முக்கியமான வேலை. தன்னுடைய ஃபேஸ்புக்கில் திருப்பதி பெருமாள் படத்தை தன்னுடைய தொடர்பில் இருக்கும் 684 பேருக்கும் தனித்தனியாக பகிர்ந்து கொண்டிருந்தார். மொத்தமாக ஷேர் செய்தால் பலன் கிடையதாம்.

மேனேஜர் தன்னுடைய மீட்டிங்கை ஆரம்பித்தார். “ஸார் இதப் பாருங்க” என்று டீக்கடை அதிபரை அழைத்து தன்னுடைய ரிப்போர்ட்டை காண்பித்தார்.

“இதுல தேதி வாரியா டீ வாங்கின விவரம் எல்லாத்தையும் டேட்டா எடுத்து வச்சுருக்கோம். அத அனலைஸ் பண்ணி பார்க்கும் போது தான்  முக்கியமான ஒரு விஷயம் தெரிய வந்தது. உங்க கடைல QC உண்டா இல்லையா?”

“ஈஸியா? அது ஏர்டெல்லுக்கும் வோடஃபோனுக்கும் வச்சுருக்கோம்” உளறுகிறோம் என்பதை தெரிந்தே செய்தார் டீக்கடை அதிபர்.

“இந்த பதினெட்டாந் தேதிய பாருங்க. அன்னைக்கு தான் உங்க டீ நல்லாருந்ததா எல்லாரும் ரிப்போர்ட் பண்ணிருக்காங்க. இருபத்திரெண்டாம் தேதி பாருங்க, நாலு பேரு டீய கீழ ஊத்திருக்காங்க. இருபத்தி நாலாம் தேதி லேடீஸுக்கு மட்டும் டீ பிடிச்சிருக்கு. மறுநாள் முப்பது வயசுக்கு மேல உள்ளவங்க எல்லாம் டீ சுமார்ன்னு சொல்லியிருக்காங்க. இப்போ எங்க கம்பெனிக்கு தெரிய வேண்டியது என்னன்னா ஏன் டீயோட டேஸ்ட் இப்படி மாறிக்கிட்டே இருக்கு? குவாலிட்டில ஒரு கன்ஸிஸ்டன்ஸி இல்ல. என்ன செய்யலாம் இத சரி பண்ண? அதுக்கு தான் மீட்டிங். எங்ககிட்ட இருக்கிற டேட்டா எல்லாத்தையும் தாரோம். நீங்க ஒரு வாரத்துக்குள்ள ஒரு ரிப்போர்ட் சப்மிட் பண்ணிடுங்க. இந்த விவரமெல்லாம் பத்தாதுன்னா சொல்லுங்க. பார்த்திபா ஒரு பவர் பாய்ண்ட் ப்ரசெண்டேஷன் ரெடி பண்ணிரலாமா?”

“பண்ணிரலாம் ஸார்!” பார்த்திபன் வேகமாக தன்னுடைய கணினியில் செயல்பட ஆரம்பித்தார்.

டீக்கடை அதிபர் பரிதாபமாக பாலாஜிநாதனையே பார்த்தார். அப்போது தான் தன்னுடைய ஐஃபோனில் இருந்து தலை நிமிர்ந்த பாலாஜிநாதன் “என்ன காளியப்பா? இங்க என்ன செய்ற?” என்றபடி மேனேஜர் காண்பித்த புள்ளி விவரத்தைப் பார்த்தார்.

“காளியப்பா! ஒன் டீ ஒன்னும் வாய்ல வைக்க வெளங்கல. டீ நல்லா இருந்தாத் தான் துட்டு. புரியுதா?”ன்னு ஒரு அதட்டல் போட்டார்.

“சரிங்க மொதலாளி” நன்றி பெருக்கெடுத்து ஓடியது டீக்கடை அதிபரின் குரலில்.

“இனிம யாராவது கூப்டு விட்டாங்கன்னா, நீ வராத. கடப்பசங்கள அனுப்பி வை” முன்னூற்று முப்பதாவது பெருமாள் ஷேரிங் செய்தபடி சொன்னார் பாலாஜிநாதன்.