உபசாந்தம் – மன அமைதி

முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.  – (திருமந்திரம் – 2506)

விளக்கம்:
முக்திக்கு வித்து சிவஞானம். பக்திக்கு வித்து பணிந்து அவன் திருவடி பற்றி இருத்தல். சித்திக்கு வித்து சிவனுடன் பொருந்தி இருந்து தானும் சிவம் ஆதல். சக்திக்கு வித்து உயிர்களிடையே விருப்பு வெறுப்பு இல்லாமல் மன அமைதியுடன் இருத்தலே.

ஆன்மீக வாழ்வில் மன அமைதியே மிகவும் முக்கியமானதாகும், மன அமைதி மிகுந்த சக்தி தரும். மனம் அமைதி பெற, விருப்பு வெறுப்பு இல்லாதிருப்போம்.

(உபசாந்தம் – விருப்பு வெறுப்பு இல்லாமை, மன அமைதி)

Seed for mukthi (self realization) is knowledge about our primal God Siva.
Seed for bakthi (devotion) is seeking his Holy Feet.
Seed for siddhi (spiritual power) is one becoming Siva
Seed for sakthi (strength) is the state of upasanta – being peaceful.


தூங்கும் போதும் நின் திருவடியே சரண்

நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரான்என்று
துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று
மஞ்சு தவழும் வடவரை மீதுறை
அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே.  – (திருமந்திரம் – 2707)

விளக்கம்:
நம் சிவபெருமானை நெஞ்சில் நினைந்து, வாயால் சிவாயநம என்று சொல்லி, தூங்கும் பொழுதும் நின் திருவடியே சரண் என்று இருக்க வேண்டும். அப்படி இருந்தால் பனி தவழும் கைலாய மலையில் வசிக்கும், ‘சிவாயநம’ என்னும் திருவைந்தெழுத்தின் அம்சமான சிவபெருமானின் அருளைப் பெறலாம்.

(துஞ்சு – தூங்கு,   தாள் – திருவடி,    மஞ்சு – பனி)

Thinking of the Lord in our heart, we chant SIVAYANAMA,
Even while sleeping, we seek His Holy Feet.
If so we behave, sure we’ll get the Grace of the Lord,
Who resides in the snow clad mountain Kailas, in the form of the Letters ‘SIVAYANAMA’


ஈசனைத் தின்பேன், கடிப்பேன்

அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே.  – (திருமந்திரம் – 2980)

விளக்கம்:
என் சிவபெருமானை நினைந்து உள்ளம் உருகி அழுவேன், புலம்புவேன். எலும்புகள் உருகும் அளவுக்கு இரவும் பகலும் அவனை வணங்கி இருப்பேன். என் பொன்மணியாம் அந்த இறைவனை, ஈசனைத் தின்பேன், கடிப்பேன். அவனை உறவாக்கி நட்பு கொள்வேன்.

கடிப்பேன், தின்பேன் என்பவை பக்தி மேலீட்டால் சொல்லப்பட்டவை.

(அரற்றுவன் – புலம்புவேன்,    என்பு – எலும்பு,   திருத்து – உறவாக்கு)

With melting heart, I moan and cry,
I adore you day and night, as if my bones are melting.
He is my gold, my Lord, my Siva,
I eat Him, bite Him in passion and make him friendly.


ஒன்றே செய் அதை நன்றே செய்

இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்
பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி
எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென்
ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே. – (திருமந்திரம் – 1568)

விளக்கம்:
இந்தத் தவம் செய்தால் இந்த பலன் பெறலாம், அந்தத் தவம் செய்தால் அந்த பலன் பெறலாம் என்று நிறைய யோக முறைகளைக் கற்று சிலர் குழப்பிக் கொள்வார்கள். எந்த ஒரு யோகத்தையும் முழுமையாக செய்யாத அவர்களைப் பார்த்து எங்கள் நந்தித் தேவன் எள்ளிச் சிரிப்பான்.

செய்வது எந்த தவமாக இருந்தால் என்ன? அந்த தவம் பிறந்த இடம் எதுவாக இருந்தால் என்ன? செய்யும் தவத்தை மன ஒருமைப்பாடுடன் செய்பவர்கள் விரைவாக முத்தியான ஊரை அடைவார்கள்.

(நகும் – எள்ளிச் சிரிப்பான்,    ஒத்து – ஒருமைப்பட்டு,   ஒல்லை – விரைவாக)

Mad men classify meditation methods into many,
Our Lord Nandi laughs at them in pity.
What though the method? what though its birth place?
Those who practice in harmony will attain God quickly.

அறிவே உருவானவள் பராசக்தி

அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவா ரருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே. – (திருமந்திரம் – 1054)

விளக்கம்:
நிறைந்த அறிவுடையவர்க்கு பராசக்தி ஆனந்த வடிவானவள். அவள் அறிவு வடிவமாக இருக்கிறாள். நடக்கும் எல்லா செயலும் அவள் விருப்பத்தின்படியே. அவர்கள் பராசக்தியிடம் ஈசனை காண்பார்கள்.

Those who know say, Parasakthi is in bliss form.
Those who know say, Parasakthi is in knowledge form.
Those who know say, all our deeds are as per Her desire.
They can see the Lord Siva with in Her.

அறியாப் பாவிகள்

வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்
அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள்
உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்
முற்றொளி தீயின் முனிகின்ற வாறே. – (திருமந்திரம் – 2084)

விளக்கம்:
ஒவ்வொரு கணமும் தன் வாழ்நாள் கழிந்து கொண்டிருப்பதை அறியாத பாவிகள் வினையாகிய விதைகளை மூட்டை கட்டிக் கொள்வர். அந்த வினைகளை விதைத்து முளைக்கச் செய்து இன்னும் தீவினைகளை பெருக்கிக் கொள்வர். தீய வினைகளை பெருக்கிக் கொள்வதால் உண்டாகும் துன்பங்களை இப்போது அவர் அறிய மாட்டார். இவர்களின் செயல் கொழுந்து விட்டு எரிகின்ற தீயினில் அழிவதைப் போன்றதாகும்.

Those who bundle up bad karmas, plant them to multiply,
they don't aware of their life time being diminished.
They don't know the sorrows behind their bad karmas.
They perish in the blazing fire.

நாள்தோறும் !

நாடோ றும் ஈசன் நடத்தும் தொழில்உன்னார்
நாடோ றும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்
நாடோ றும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால்
நாடோ றும் நாடார்கள் நாள்வினை யாளரே. – (திருமந்திரம் – 2022)

விளக்கம்:
நாள்தோறும் ஈசன் நடத்தும் தொழிலை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. நாள்தோறும் நயமாய் நல்ல பலன் ஊட்டும் ஈசனை நாடுவதில்லை. நாள்தோறும் ஈசன் நல்லோர்க்கு அருள் செய்து வந்தாலும், நாள்தோறும் அவனை நாடாமல் நம்முடைய அன்றாட வேலைகளில் சிக்கிக் கொள்கிறோம்.

We don't think of Lord Siva's daily deeds.
We don't think of His   good  feeding to us.
He is bestowing His Grace daily to good people.
We don't seek Him daily, we are entangled in our daily works.

சீவனும் சிவனும் வேறில்லை

சீவன் எனச்சிவன் என்னவே றில்லை
சீவ னார்சிவ னாரை அறிகிலர்
சீவ னார்சிவ னாரை அறிந்தபின்
சீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே. – (திருமந்திரம் – 2017)

விளக்கம்:
சீவனும் சிவனும் வேறு வேறு பொருள்களில்லை. இரண்டும் ஒன்றாய் கலந்திருப்பவை. ஆனால் சீவன்கள் தன்னிடம் உள்ள சிவனை அறிந்திருக்கவில்லை. ஞானம் பெற்று சிவனை அறிந்த பின் சீவனார் சிவனாகவே ஆகி விடுவார்.

Jiva and Siva are not seperated
But the jivas do not know this truth.
When the jiva realize this truth,
that jiva will become Siva.

நிரந்தர முதல்வர்

பரந்துலகு ஏழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும்
நிரந்தக மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே. – (திருமந்திரம் – 1888)

விளக்கம்:
ஏழு உலகையும் படைத்து அவற்றில் நிறைந்திருக்கும் சிவபெருமானை சிலர் யாசித்து உண்பவன் என்று சொல்கிறார்கள். படைத்தவனான அவனுக்கு யாசிக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி இகழ்வாக பேசாமல் அந்த சிவபெருமானை நிரந்தரமாக நினைந்திருப்போம். அப்படி நினைந்திருக்கும் அடியாரின் பக்தியினை யாசித்து ஏற்று அவர்களுக்கு தன் திருவடி எட்டுமாறு செய்வான் அவன்.

(இரந்துணி – யாசித்து உண்பவன்,   எற்றுக்கு – எதற்கு,  கழல் – திருவடி)

He created the seven worlds and spread over them
Some people call him a beggar, why he have to beg?
The devotees who constantly think of the lord,
He accept the devotion from them and make them reach His Holy Feet.

அடியார்க்கு அடியார்

அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
அவன்பால் அணுகியே நாடும் அடியார்
இவன்பால் பெருமை இலயமது ஆமே. – (திருமந்திரம் – 1880)

விளக்கம்:
சிவனடியார்களை அணுகி அன்பு செய்பவர்கள் சிவபெருமானை அணுகவும் வல்லவர் ஆவார்கள். சிவனடியாரை நாடி இருக்கும் அடியவர்களுக்கும் சிவனடியாரின் பெருமை வந்து சேரும்.

அடியாரை வணங்குவதும் சிவனை வணங்குவது போன்றதே!

Those who seek love of Lord Siva's followers
can attain Siva's feet too.
The devotees who seek Siva's follower
will get the same reputation of whom they seek.