கதை இல்லாத மனிதன்

“நான் நல்லவளா? இல்லையா? அதச் சொல்லு மொதல்ல”.

இருவருக்கும் சகலமும் பிசிபிசுத்துப் போயிருந்த நேரம் அது. இந்தக் கேள்வியால் என் காதும் பிசுபிசுத்தது.

“ஒனக்கு என்ன பதில் வேணும்னு சொல்லு!”

“என்ன நீ நல்லவன்னு சொல்லு. ஒனக்காக நான் என்ன வேணாலும் செய்றேன்”.

“நீ செஞ்சது போதும்! தெம்பில்லடி எனக்கு”.

அடுத்து என்ன பேசினோம் என்பதில் எனக்கு நாட்டமில்லை. அவள் சொன்ன “என்ன வேணாலும் செய்றேன்” திரும்பத் திரும்ப தலைக்குள் சுத்திக் கொண்டிருந்தது.

“எனக்காக ஒன்னு செய்யேன்! நீதான் ரொம்ப நல்லவளாச்சே?” கேட்டு விட்டு சசியின் முகத்தை உற்றுப் பார்த்தேன்.

“என்னடா செய்யணும் உனக்கு? கொலை எதுவும் பண்ணனுமா?” அவ்வளவு நெருக்கமாக முகத்தைக் கொண்டு வந்து கேட்ட போது மூச்சடைத்தது. எப்படிக் கண்டுபிடித்தாள் இவள்? “திருட்டு முழி முழிக்காத. இதெல்லாம் ஊர் ஒலகத்துல நடக்குறது தான்”. கேலி செய்கிறாளோ?

அவள் கேலி செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ள நிறைய நேரம் எடுத்துக் கொண்டேன். நன்றாகக் குளித்தோம், சுத்தமான உடை அணிந்தோம். நல்ல ஃபில்டர் காபி தயாரித்தோம், ஆளுக்கொரு கோப்பையை நிரப்பி எதிரெதிரே அமர்ந்தோம். முக்கிய முடிவெடுக்கும் போது எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும் இல்லையா?

இவள் மிகத் தெளிவானவள். இவள் காபி குடிக்கும் விதமே அதைச் சொல்லியது. “சொல்லு இப்ப” அதில் ஆர்வம் எதுவும் இருக்கிறதா எனத் தேடிப் பார்த்தேன். விடை தெரியவில்லை.

“என்ன சொல்ல?”

மிகப் புனித உறுப்பின் பெயர் ஒன்றை வசையாக உச்சரித்தாள். “யார? எங்க? எப்பிடி?”

“யாருங்கிறத கடைசியா சொல்றேன். எப்படிங்கிறத சொல்றேன், அது தான் முக்கியம்”.

சொல்லு என்பது போலப் பார்த்தாள்.

”கூர்மையான இரும்புத் துண்டு ஒன்னு தருவேன். அதை வச்சுத் தொடைல ஆரம்பிக்கணும். அப்படியே ஒனக்குப் பிடிச்ச லைன் ட்ராயிங் ஒன்னு வரையணும். யோசிக்க வேணாம்! அவன் உன் கைக்கு சுலபமா சிக்கக் கூடியவன் தான்”.

“கட்டி வைக்கணுமோ?”

“தேவையில்லை. உன் அழகே அவனைக் கட்டிப் போடும்”. இதைச் சொன்னதற்கு ஒரு புதுவிதமான வசை கிடைத்தது. “இந்தக் காபிய எவ்வளவு ரசிச்சுக் குடிக்கிற! அப்படி ரசிச்சுச் செய்யணும் அத”.

“இதெல்லாம் செஞ்சா நீ என்ன நல்லவன்னு சொல்லுவியா?”

“நான் சொல்ல வேண்டியதில்ல. நீ நல்லவளாவே ஆயிடுவே!”

“அப்படி யாருப்பா அது? ஒனக்கு வேண்டாதவன்?”

“அவன் யாருக்குமே வேண்டாதவன்”.

“கொழப்பாத ரொம்ப. யாருன்னு சொல்லு”.

“நான் தான் அது. என்னத் தான் நீ அப்படி அனுபவிக்கணும்”.

நான் சீரியஸாகத் தான் சொல்றேன் என்பதைப் புரிய வைக்க இன்னும் நான்கைந்து வசைகளை அவளிடம் இருந்து கேட்க வேண்டியிருந்தது. “ஒனக்கு என்ன ப்ரச்சனை? அதச் சொல்லு மொதல்ல”

“என்னத்தச் சொல்ல? யாரப் பத்திப் பேசினாலும், அவங்களப் பத்தி ஒன்னு ரெண்டு விஷயமாச்சும் இருக்கும். என்னப் பத்திச் சொல்ல என்ன இருக்கு? சொல்லு. எனக்குன்னு ஒரு கத இல்ல இந்த ஒலகத்துல. நான் ஏன் இருக்கணும் இங்க? நீ முடிச்சிரு”.


இரு வரிக் கதை – 14

“ஏம்மா! நீயே அவன கொன்னுட்டு இங்க வந்து எப்படியாவது அவன காப்பாத்துங்கன்னு சொன்னா என்னம்மா செய்றது?”

“இன்னும் என் ஆத்திரம் தீரல டாக்டர்”.


பனங்கிழங்கு வாசம்

யார் வீட்டுல யாரு பனங்கிழங்கு அவிச்சாலும், அந்த வாசம் அரசிய ஞாபகப்படுத்துது. அவள யாரும் மங்கையர்க்கரசின்னு முழுப்பேரு சொல்லி நான் கேட்டதில்ல. மஞ்சப்பொடியும் வியர்வையும் கலந்த அவளோட வாசத்துல நான் மூச்சு முட்டி தவிக்கிற நேரம் மங்கை யாருக்கு அரசின்னு கேப்பேன் அல்லது கூப்பிடுவேன். அது ஏன்னு தெரியல, அவளோட வாசம் பனங்கிழங்க ஞாபகப்படுத்துது. எங்க பனங்கிழங்கு வாசம் வந்தாலும் அவ மூச்சுக் காத்து மேல வந்து தடவுற மாதிரி இருக்கு. வாசம் மட்டுமில்ல, குட்டையா, குண்டா உருண்டு இருக்குற  பனங்கிழங்க பாக்கும்போதும் அவள பாக்குற மாதிரியே இருக்கு.

அரசியோட அம்மா வீடுகளுக்கும் விஷேசங்களுக்கும் போய் கைமுறுக்கு சுத்திக் கொடுப்பாங்க. “செந்திலு! நா ஒரு விஷேசத்துக்கு போவ வேண்டியிருக்கு. அரசி தனியா இருக்கா, நீ இங்க வந்து கொஞ்ச நேரம் டிவி பாத்துக்கிட்டு இரு”ன்னு அரசியம்மா சொல்லும் போது ‘வேற வேல இல்லயா எனக்கு?’ன்னு தோணும். “ஆளுதான் வளந்திருக்கா எரும மாதிரி! ஒரு சொரணையும் இல்ல, வாசக்கதவ தொறந்து போட்டு தூங்குறாடா. சும்மா ஒரு தொணைக்கு இரேன்” எனக்கு பாதி மாசம் நைட் ஷிஃப்ட் வேலைங்கிறதால பகல்ல தூக்கம் தான். அவங்க வீட்டுல டிவி பாத்துகிட்டே தூங்கிருவேன். அரசி ஆதித்யா சேனல் பாத்து காரணமே இல்லாம சிரிக்கிறது எரிச்சலா இருக்கும். எக்கேடும் போன்னு ஒரு மொற மொறச்சிட்டு கொறட்ட விட்டு தூங்க ஆரம்பிச்சிருவேன்.

மணி என்ன பாக்கும் போதெல்லாம் அரசியப் பத்தியே பேசுவான். அவனும் எங்க தெரு தான். “லூசுப்பய மாதிரி பேசாத“ன்னு எரிச்சலா சொன்னாலும் ஒரு மாதிரியா பல்லக் காட்டுவான். “ஏல! கல்யாணம் முடிஞ்சு ஃபஸ்ட் நைட்ட ஏன் பொண்ணு வீட்ல வைக்கிறாங்கன்னு தெரியுமா? தன்னோட வீட்டுல தான் பொண்ணுங்க சகஜமா கூச்சமில்லாம இருப்பாங்க. புதுசா ஒரு வீட்டுக்கு போகும் போது கொஞ்ச நாளைக்கு பயமும் கூச்சமுமா இருக்கும்”. “இப்போ அதுக்கென்னல? ஏன் சம்மந்தம் இல்லாம பேசுற?”ன்னு கேட்டப்போ “போடா போ! ஒனக்கு எப்படி ஒரு சான்ஸ் கெடச்சிருக்குன்னு தெரியாம இருக்க”ன்னு மணி சிரிச்சான்.  எனக்கு வாயில கெட்ட வார்த்தையா வந்தது.

பாவிப்பய மணி எந்த நேரத்துல அத சொல்லித் தொலச்சானோ? அன்னைக்கு அரசி வீட்டுல காவல் இருந்தப்போ சரியான மழை. குளிர்ந்த காத்து வேற. குளிருக்கு எதமா அப்ப தான் அவிச்ச பனக்கிழங்கு இருந்தது. சூடான கெழங்க எடுத்து உரிக்கும் போது அதோட வாசம் மழை வாசத்தோட சேர்ந்து ஒரு புது தினுசா இருந்தது. நாலாவது கெழங்க கடிச்சு உரிக்கும் போது “சூடா இருக்கா?”ன்னு அரசி கேட்டா. பாவம் டிவில எதுவும் ஓடலேன்னு என்கிட்ட பேசுறான்னு நெனச்சுகிட்டேன். “நானும் அப்படித்தான் இருக்கேன்” பிசிறு தட்டின குரல்ல அரசி சொன்னப்போ எனக்கு என்னன்னு நெனைக்கன்னே தெரில. அமைதியா கெழங்க உரிச்சு பயத்தையும் சேர்த்து மென்னு தின்னேன். “இங்க ஒருத்தி கெழங்கு மாதிரி இருக்கேன். நீ என்னடான்னா பனங்கெழங்க உரிக்கிற. லூசு!”. பனங்கிழங்கு வாசத்தோட அரசி வாசமும் சேர்ந்துச்சு. மழை வாசம், பனங்கிழங்கு வாசம், அரசியோட வாசம், என்னோட வாசம் எல்லாமும் சேர்ந்து மூச்சு முட்டித் தவிச்சேன். எல்லாத்துக்கும் மேல இன்னொரு வாசத்தையும் மொத மொதலா அனுபவிச்சேன். அரசி தன்னோட நெலைல இல்ல. அவளும் மூச்ச வேகமா இழுத்து எல்லா வாசத்தையும் தீர்த்துடுற வேகத்துல இருந்தா.

ரொம்ப நாள் கழிச்சு அரசிய நேத்து வழில பாத்தேன். மொதல்ல அடையாளமே தெரில, ரொம்பவே பூரிச்சிருந்தா. ஊர்ல இருந்து அம்மா வீட்டுக்கு வர்றா போல, அவ கூட மணி ஒரு கைல பச்சப்புள்ளையவும் இன்னொரு கைல சூட்கேசையும் தூக்கிட்டு நடந்து வந்தான். அதே சிரிப்பு இப்பவும்.  அப்பத்தான் வாங்கின பனங்கிழங்கு கட்டு என் கூடைல இருந்தது. அரசிதான் மொதல்ல பேசுனா “நல்லாயிருக்கியாடே? இன்னும் பனங்கெழங்கு வாசத்த மறக்கல போல!”.


இரு வரிக் கதை – 13

மர்மம் நிறைந்த உரையாடல்கள் ஒளிந்திருந்தன அவள் சிரிப்பில். நான் சுமக்கப் போகும் பாவ மூட்டைகளை அவள் கண்களில் பார்த்தேன்.


இரு வரிக் கதை – 12

அவன் அவளை பார்வையாலேயே புலன்விசாரணை செய்தபடி “இன்றிரவு இருட்டிலே ஒரு கவிதை எழுத இருக்கிறேன்” என்றான்.

அவள் “எதற்கும் முதலில் ஒரு முன்னுறை எழுதிவிடு” என்றாள்.


சரித்திரச் சிறுகதை எழுதிப் பார்த்தல்

“ராணியின் மகனுக்கு உருட்டி விளையாட ஏதாவது  வேணுமாம். உன் தலையைத்தான் தருவதாக ராணி சொல்லியிருக்கிறாள்.”

“இந்த மாமனின் தலை ராஜகுமாரனுக்கு விளையாடக் கிடைப்பது எனக்கு சந்தோஷம் தான்.”

“அப்படி என்ன பகை உங்களுக்குள் தலை வாங்கும் அளவுக்கு?”

“எங்கள் குடும்பமே அப்படித்தான்.”

“என்னிடம் நீ உண்மையைச் சொல்லலாம். மன்னனுக்கு விஷம் வைத்து கொன்றது நீ தானா? நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்.”

“உங்களிடம் எனக்கு நம்பிக்கை உண்டு. ஒரு உண்மை சொல்கிறேன். இந்த விஷம் வைக்கும் யோசனை ஏன் எனக்கு இவ்வளவு நாள் தோன்றவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”

“ஓஹோ! சிறையில் இதுதான் சதா சிந்தனை போலும்! என்னுடைய கவலை எல்லாம் உன் மேல் குற்றம் சுமத்தி விட்டு, உண்மையான கொலைகாரர்களை தேடாமல் விட்டு விடுகிறார்களே என்பது தான்.”

“கவலைப்படுவதில் உங்கள் பொழுதைப் போக்க வேண்டாம்! என் தங்கையைப் பற்றி எனக்குத் தெரியும். இந்நேரம் அந்த வேலையை அவளுடைய நம்பிக்கைக்குரிய படை ஒன்று செய்து கொண்டிருக்கும். கொலைகாரர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் வம்சம் இந்த பூமியில் வசித்த தடம் இல்லாமல் போகும். ஆனால் அதெல்லாம் அவைக்கு வராது. சட்டப்படி நான் கொலைகாரன், தண்டனை எனக்குத் தான்.”

“உன்னை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.”

“யாருடைய பரிதாபத்துக்கும் தகுதி இல்லாதவன் நான். ஒரு நாள் என் தங்கை எந்த கவலையும் இல்லாமல் மிகவும் சந்தோஷமாக  இருப்பாள். அவள் தன்னிலை மறந்திருக்கும் அந்நேரம் கொடுந்துன்பம் ஒன்று  வந்து தாக்கும் அவளை. ஏன் தான் இவனை சிறையில் வைத்தோமோ என்று கதறுவாள் அப்போது.”

“சரி. இவ்வளவு பகை ஏன்?”

“இது பகை இல்லை. அடுத்து நாட்டை ஆளப்போவது ராணி. ராணியை ஆளப்போவது மன்னனின் கை எனச் சொல்லப்படும் படைத்தலைவன். அதற்கு நான் இடைஞ்சலாக இருப்பேன், அதனால் தான் இவ்வளவும்.”

“என்னால் உனக்கு எதுவும் உதவ முடியுமா? இந்த மந்திரியை ராணிக்கு பிடிக்காவிட்டாலும், சில சமயம் என் ஆலோசனையை ஏற்பார்.”

“இந்த விஷயத்தில் அப்படி இல்லை. நடக்க வேண்டியவை தானாக நடக்கும். கவலை வேண்டாம், போய் வாருங்கள்.”

மறுநாள் மன்னனின் கை என்று அழைக்கப்பட்ட படைத்தலைவன் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தான். மந்திரி ராணியிடம் “இன்னும் சேதங்களைத் தவிர்க்க சிறையைத் திறப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று சொல்லி உத்தரவுக்காகக் காத்திருந்தார்.


கைராசிக்காரி!

ஒரு கேமெராவை எப்படி பிடிக்கணும்னு பண்ணைதான் எனக்குச் சொல்லிக் குடுத்தான். பேருதான் பண்ணை, ஆனா  கேமெராவைத் தவிர அவன்கிட்ட ஒண்ணும் கிடையாது. ஆள் பாக்க செளிப்பா தெரிவான், அவன பக்கத்துல வச்சுகிட்டா ரொம்ப ஈசியா கடன் வாங்கலாம். கேமெராவை எடது கை மட்டும் தான் அழுத்தி பிடிக்கணும், வலது கை ஃப்ரீயா மூவ் ஆகணும்பான். பழக்கதோஷத்துல நான் வலது கையவும் காமெராவில வச்சு அழுத்துவேன், கைலயே அடிப்பான் “ரெண்டு கையவும் வச்சு அழுத்துனா படம் ஷேக் ஆகும்ல” என்பான். கல்யாண வீட்டுக்கெல்லாம் வேண்டா வெறுப்பா படம் எடுப்பான், எல்லாம் துட்டுக்காகத்தான். அவன் தனிப்பட்ட மொறைல எடுத்த படத்த பாத்தாதான் அவனோட பொலம தெரியும்.

பண்ணையோட கேமெரா பொலம தெரிஞ்சவங்கள்ல செல்வியும் ஒருத்தி. கைராசிக்காரி, எந்தக் கடேல வேலைக்குச் சேந்தாலும் மூணு மாசம் தான் கணக்கு. இது வரைக்கும் திருநவேலில எட்டு ஜெராக்ஸ் கடைய மூடிருக்கிறா. பண்ணையும் செல்வியும் பேச ஆரம்பிச்சா, பக்கத்துல இருக்கிற என்ன எல்லாம் ஒரு மனுஷ ஜென்மமாவே நெனைக்க மாட்டாங்க, கூசாம எல்லாம் பேசுவாங்க. என்னையவும் படம் எடுறான்னு கெஞ்சுவா. நான் சும்மா இல்லாம “பண்ண இயற்க காச்சியத்தான் எடுப்பான்”னு சீண்டுவேன். “என்ன என்ன செஞ்சா கொண்டு வந்தாங்க? என்ன விட ஒரு இயற்கய நீ எங்க போய் பாக்கப் போற?”ன்னு பண்ணையப் பாத்து கேப்பா. ஒரு நா பேச்சுவாக்குல ‘நான் வேணா ரொம்ப இயற்கயாவே நிக்குறேன், படம் எடுக்குறியா’ன்னு ஆரம்பிச்சா, நான் எந்திச்சு ஓடியே வந்துட்டேன்.

பண்ணை அவ்வளவு லேசுல மடங்குற ஆளு இல்ல, ஆனா சில மேட்டர்லாம் அவனால செல்வி கிட்டதான் பேச முடிஞ்சது. சில சமயம் தனியா என்கிட்ட சொல்லுவான் “பெரிய ரசனக்காரில இவ, பொருந்தாத எடத்துல இருக்குறா. இருக்க வேண்டிய எடத்துல இருந்தான்னா பெரிய ஆளு இவ”ன்னான். “நீ கூட அப்படித்தான் பொருந்தாத எடத்துல இருக்குற பண்ண!”ன்னேன்.

ஒரு நாள் செல்வி உள்ள இருக்கும் போது, பண்ணை ஸ்டூடியோ கதவ உள்பக்கம் லாக் பண்ணினான்னு அந்த தெரு பூராவும் ஒரே பேச்சு! பெறகு செல்வியோட கைராசி நல்லாவே வேல செஞ்சது. பண்ணைக்கு வேல இல்லாம நொடிச்சுப் போனான். இப்ப எந்த ஊர்ல இருக்கான்னே தெரியல.

கைராசிக்காரிய மூணு வருஷம் கழிச்சு ஒரு சினிமாவுல க்ரூப் டேன்சராப் பாத்தேன். வெறுத்துப் போய் எந்திச்சு வந்துட்டேன். அவளோட ஆட்டம், நெஜத்தோட கோரத் தாண்டவமா இருந்தது.


ஆர்ட்டிஸ்டு!

அவரை ஆர்ட்டிஸ்ட்ன்னு தான் கூப்பிடுவோம். பொதுவா லெட்சுமி படம்னா,  சாமி ஒல்லியா இருக்கும், ஒரு ரெடிமேட் சிரிப்ப ஒட்ட வச்சிருப்பாங்க. கையில இருந்து விழுற தங்கக்காசுக்கும் லெட்சுமியோட தோரணைக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனா ஆர்ட்டிஸ்ட்  திருமகள் படத்த வரைஞ்சார்னா, வடிவமே செழிப்பா இருக்கும், கைலேருந்து தங்கமெல்லாம் விழாது, ஆனா ஒலகத்துல உள்ள மொத்தப் பணமும் என்கிட்டதாண்டா அப்படிங்கிற தோரணை இருக்கும். ஓவியனிக்கே உள்ள சாபக்கேடு அவன் கேக்குற துட்டு கெடைக்காது. ஆர்ட்டிஸ்டும் சிரிப்பு மாறாம குடுக்கிற துட்ட வாங்கிக்கிடுவார். “ஓவியனுக்கு உண்டான துட்ட குடுக்காம படம் வாங்கிட்டுப் போறவனுக்கு விருத்தியே இருக்காது”ன்னு சொல்வேன். “சேச்சே! அப்பிடில்லாம் சொல்லத” என்பார். அவருக்கென்ன? பெண்டாட்டி, புள்ளைங்க இருந்தா துட்டோட அருமை தெரியும். கல்யாணமாகி பத்து வருஷத்துல கட்டினவள ஏதோ ஒரு நோய்க்கு பறி குடுத்திட்டார்.

எப்பவுமே ரொம்ப நெதானமா பேசுற ஆளு, அன்னைக்கு அவரோட பதட்டத்த சிகரெட் பிடிச்சிருந்த விரலே காட்டிக்குடுத்துச்சு.

”என்ன ஆர்ட்டிஸ்ட் விஷயம்”ன்னு கேட்டேன்.

“நாகர்கோவில்ல ஒரு குடும்பம் ராதாக்ருஷ்ணன் படம் கேட்டாங்க. ரொம்ப வசதியானவங்க, ஒரே பொண்ணு. அந்தப் பொண்ணு ஆஸ்த்ரேலியால படிச்சு அங்கயே ஒருத்தன கல்யாணம் பண்ணிருக்கு. ரெண்டே வருஷத்தில  பத்திட்டான் போல! இப்போ இங்கதான் அந்த பொண்ணு இருக்கு கைக்கொழந்தையோட. என்னா ரசனைங்கிற அவளுக்கு!”

“அப்ப நாங்கல்லாம் ரசன கெட்டவனுங்க. என்ன?”ன்னு கேட்டதுல கொஞ்சம் பதட்டம் கொறஞ்சி சிரிச்சார்.

“பெயிண்டிங்கப் பாத்து கொஞ்ச நேரம் பித்து பிடிச்ச மாதிரி நின்னா. என்ன நெனச்சாளோ தெரில, அப்படியே என்மேல வந்து விழுந்திட்டா. நான் கோவத்தோட எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு சொல்லி தள்ளி விட்டுட்டேன்”ன்னு சொன்னவரப் பாத்து பாவமா இருந்தது.

“ஆர்ட்டிஸ்டு! அது வெளிநாட்டுல வளந்த புள்ள, அங்க இப்படித்தான் பாராட்டுவாங்க போல” என் வயித்தெரிச்சலை மறைக்க என்ன பாடுபட வேண்டியிருக்கு?

“ஏன்யா, பாராட்டுறதுக்கும், ஆசையோட பிடிக்குறதுக்கும் வித்தியாசம் தெரியாமலா இருக்கேன்”ன்னு கேட்டவர் “அம்பத்தாறு எங்க இருக்கு, இருவத்தாறு எங்க இருக்கு”ன்னு தனக்குத் தானே புலம்பினார். அதுக்கப்புறம் ரொம்ப நேரம் பேசவேயில்ல அவர். நானும் என்ன பேசன்னு தெரியாம ஃபோன எடுத்து நோண்டிகிட்டுருந்தேன்.

கிளம்பும் போது மெதுவாகச் சொன்னார் “சீக்கிரம் நாகர்கோவில்ல போய் செட்டில் ஆகிடுவேன்னு நெனைக்கேன். அவங்க அம்மாவும் அப்பாவும் இங்க வந்திருங்களேன்னு கூப்பிடுறாங்க”.

இதெல்லாம் நடந்து ஒரு வருஷம் இருக்கும், நேத்து தற்செயலா எதிர ஆர்ட்டிஸ்டப் பாத்தேன். வீட்டுக்கு கூப்பிட்டு டீ போட்டு குடுத்தார். என்னாச்சுன்னு கேட்டேன்.

“ஆஸ்திரேலியாக்காரன் நாகர்கோவில் வந்திட்டான்!” சிரிச்சுகிட்டே சொன்னார்.

அவருடைய லேட்டஸ்ட் பெயிண்டிங்கில் எல்லாம் பெண்களிடம் வேறு சாயல் வந்திருந்தது.


செல்லமா அடிச்சா வலிக்குமா?

கிருத்தியைத் தேடி ராசு மாமா வந்தால் ஞாயிற்றுக்கிழமை விடிஞ்சாச்சுன்னு அர்த்தம். கிருத்தி இப்போது இரண்டாம் வகுப்பில் இருக்கிறாள். இருக்கிறாள்னு தான் சொல்லணும், படிக்கிறாள்னு சொன்னால் பிறகு நமக்கு படிப்பு வராமல் போய் விடும். இந்த ஞாயிறு எட்டு மணிக்கெல்லாம் வந்து கிருத்தியை எழுப்பி விட்டார்.

“Boring fuddy-duddy uncle” என்று திரும்பி படுத்துக்கொண்டாள்.

“நல்லா கண்ணத் தொறந்து பாரு கிருத்தி. ஜீன்ஸ், டி-ஷர்ட்ல வந்திருக்கேன். என்னைப் போய் ஓல்ட் ஃபேஷன்கிறியே”.

“மாமா. ஃபேஷன்லாம் ட்ரஸ்ல இல்லை. மனசுல இருக்கணும்”.

“சரி. இன்னைக்கு ஐஸ் க்ரீம் வாங்கலாமா?”

“You are moronic மாமா”.

“ஏடி! மாமாவை முட்டாள்னு சொல்லக் கூடாது” கிச்சனிலிருந்து அம்மாவின் குரல் கேட்டது.

“இதுலாம் மட்டும் இந்த அம்மாவுக்கு நல்லா காதுல கேட்கும்” கிருத்தி மெதுவாக மாமாவிடம் சொன்னாள். “மாமா! யாருகிட்டயும் ஐஸ்கிரீமும் சாக்லேட்டும் வேணுமான்னு கேட்கக் கூடாது. குடுக்கணும்னு நெனச்சா வாங்கி குடுத்துறணும். ஐஸ்கிரீம் பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா?”

“கரெக்ட். சரி என்ன ஐஸ் கிரீம்? வெணிலா?”

“லைஃப்பே வெணிலாவா இருக்கு. ஐஸ்கிரீம்லயும் வெணிலாவா?” கிருத்தி கேட்டாள்.

“நீ என்ன சொல்ற?” மாமாவுக்கு ஒண்ணும் புரியலை.

”பின்ன? என்ன லைஃப் இது? ஒரே போர். இந்த அப்பாவாச்சும் இன்னொரு கல்யாணம் பண்ணலாம்” வேணும்னே அம்மாவுக்கு கேட்கிற மாதிரி சத்தம் போட்டு சொல்லி மாமாவிடம் ஒரு குட்டு வாங்கினாள்.

“சரி சொல்லு. என்ன ஃப்ளேவர் வேணும்?”

“அமெரிக்கன் டிலைட்”.

“அமெரிக்கன் டிலைட்டுக்கும் இட்டாலியன் டிலைட்டுக்கும் என்ன வித்தியாசம்?” மாமா வெணிலா தவிர வேறு ஐஸ் கிரீம் ருசித்ததில்லை.

“அமெரிக்கன் டிலைட்ல பாதாமும் பிஸ்தாவும் இருக்கும். இட்டாலியன்ல முந்திரிப் பருப்பும் செர்ரி பழமும் இருக்கும்” கிருத்தி விளக்கினாள்.

“அப்ப ப்ரபாவுக்கும் சேத்து வாங்கிடுறேன்” ப்ரபா கிருத்தியோட ஃப்ரெண்ட். ஞாயிற்றுக்கிழமை தோறும் விளையாட வந்திருவாள்.

“ரெண்டு வாரமா ப்ரபா வரல மாமா. அவங்க வீட்ல ஒரு நாய்க்குட்டி வந்ததுல இருந்து அவள கைல பிடிக்க முடில. எப்பப் பாத்தாலும் அது கூடவே வெளையாண்டுகிட்டு இருக்கா”.

“ண்ணா! ரெண்டும் வெளையாடுறதப் பாத்தா, நாய் எது பிள்ளை எதுன்னே தெரிய மாட்டேங்குது” அம்மாவின் குரல்.

மாமா ஐஸ்கிரீம் வாங்கப் போன கொஞ்ச நேரத்தில் ப்ரபா வந்தாள். எப்போதுமே இல்லாத ஒரு சோகம் அவள் முகத்தில் இருந்தது.

“ஏம் புள்ள ஒரு மாதிரியா இருக்க?” கிருத்தி கேட்டாள்.

“பஸ்டர வேற வீட்டுக்கு குடுத்துட்டாங்க” ப்ரபா அழுது விடுவாள் போலிருந்தாள்.

“ஏம்பா?”

ப்ரபா கையைக் காட்டினாள். உள்ளங்கையின் ஓரத்தில் கடிபட்ட காயம் இருந்தது.

“கடிச்சிருச்சா? கடிக்கிற நாய யாராவது வீட்ல வச்சிருப்பாங்களா? அதான் குடுத்திருப்பாங்க” ஆறுதல் சொன்ன கிருத்தியை தலையில் குட்டினாள் ப்ரபா.

“நான் குட்னது வலிக்குதா?” ப்ரபா கேட்டாள்.

“சேச்சே! நீ செல்லமாத் தானே குட்டினே?” வலித்தாலும் காட்டிக் கொள்ளாமல் சொன்னாள் கிருத்தி.

“பஸ்டரும் செல்லமாத் தான் கடிச்சான்”.

“புரியுதுடா! ஆனா நீ சொல்றது நம்ம பேரண்ட்ஸுக்குப் புரியாதே” கிருத்தி சமாதானம் சொன்னாள்.

ராசு மாமா ஐஸ்கிரீமோடு வந்தார். “இன்னொரு ஐஸ்கிரீமா? இத ப்ரபாவுக்கு குடுத்துருவோம்” கிருத்தி சொன்னதை மாமா புரிந்து கொண்டு அமெரிக்கன் டிலைட்டை ப்ரபாவிடம் கொடுத்தார்.

“I feel a good rapport here” என்றார் அப்போது தான் வீட்டுக்குள்ளே வந்த கிருத்தியின் அப்பா.


நெகிழ்ந்து போன வைகை எக்ஸ்பிரஸ்

வழி அனுப்ப வந்தவர்களின் கூச்சல் அடங்கி அப்போது தான் வைகை எக்ஸ்பிரஸ் கொஞ்சம் அமைதியாகி வேகம் பிடித்தது. பயணிகள் தங்களைச் சுற்றி உள்ள முகங்களை ஒரு முறை பார்த்துக் கொண்டார்கள். அவ்வளவு நேரம் இருந்த புழுக்கம் போய் முகத்தில் பட்ட காற்றை உணர்ந்து கொஞ்சம் புன்சிரிப்பை செலவு செய்தார்கள். நாலாவது பெட்டியில் நாப்பத்து ஐந்தாம் இருக்கையில் இருந்த இளவயசுக்காரன் காலை நன்றாக அகட்டியவாறு சரிந்து உட்கார்ந்து இருந்தான். கழுத்தில் ஒரு இரும்புச் சங்கிலி, கொஞ்சம் அழுக்கான டி-சர்ட், கையில் நிறைய மோதிரங்கள் என்று அவனது தோற்றம் பார்ப்பவர்களை கொஞ்சம் பயமுறுத்துவதாக இருந்தது. அவன் சுற்றி இருப்பவர்கள் யாரையும் சட்டை செய்யாமல் மேலேயே வெறித்துப் பார்த்தபடி இருந்தான். கையில் வைத்திருந்த ஃபோனில் ‘நான் யாரு எனக்கேதும் தெரியலையே’ பாட்டு அலறியது. சத்தம் தாங்காமல் பக்கத்தில் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள், அவன் தோற்றத்தை பார்த்தால் எதுவும் சொல்ல பயமாக இருந்தது.

அந்தப் பாட்டு முடிந்தவுடன் ஃபோனை நோண்டி திரும்ப அதே பாடலை ஒலிக்க விட்டு திரும்ப வெறித்தபடி ஆனான். அவன் பக்கத்தில் இருந்த ஜன்னலோரப் பாட்டி அவனைச் சுரண்டினாள்.

“என்னா” என்றான் அவன் எரிச்சலாக.

“நான் ஹார்ட் பேஷண்ட்டுப்பா! பேஸ்மேக்கர் வச்சிருக்காங்க, இவ்வளவு சத்தமெல்லாம் என்னால தாங்க முடியாதுப்பா. கொஞ்சம் சவுண்ட கொறச்சுக்கோ” என்றாள்.

அவளை அலட்சியமாகப் பார்த்து விட்டு மறுபடியும் மேல் நோக்கி வெறிக்க ஆரம்பித்தான். அந்தப் பாட்டு நான்காவது முறையாக ஒலிக்க ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்தவங்க எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்க, ஒரு நடுத்தர வயசு மீசைக்காரர் ‘நான் சொல்றேன்’ என்பது போல கை காட்டினார்.

“தம்பி! அத கொஞ்சம் நிப்பாட்டுப்பா, கொஞ்சம் உன்கிட்ட பேசணும்” என்று ஆரம்பித்தார்.

“என்ன பேசணும் என்கிட்ட?” வேண்டுமென்றே கொஞ்சம் எரிச்சல் காட்டி பேசினான்.

“எந்த ஊருப்பா நீ?”

“மதுர”

“இப்ப மெட்ராஸ் போறியா? என்ன படிச்சிருக்க?”

“பி.எஸ்சி”

“பாத்தா ரொம்ப சோர்ந்து போய் இருக்கியே! நேத்து சரியா சாப்பிடலயோ?”

அவன் பதில் எதுவும் சொல்லவில்லை, ஆனால் முகத்தில் இறுக்கம் தளர்ந்திருந்தது.

“இதப் பாருப்பா, என்ன கவல இருந்தாலும் சாப்பிடாம இருக்கக் கூடாது. பசி வயித்த மட்டுமில்ல, மனசையும் அரிச்சிரும்” மீசைக்காரர் அமைதியாகச் சொன்னார்.

அந்தப் பையனால பொங்கி வந்தக் கண்ணீரை அடக்க முடியவில்லை.

“சாப்பிட்டியான்னு கேக்க எனக்கு யாருமில்லங்க, இப்படி யாரும் கேட்டதில்ல” குரல் உடைந்து அழ ஆரம்பித்தான். அந்தச் சூழ்நிலையே ரொம்ப நெகிழ்ந்து போய் இருந்தது.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அடுத்த வரிசைப் பெண் வேகமாக வந்து அவன் ஃபோனை பிடுங்கினாள். வேகமாக சில நம்பரை அழுத்தி விட்டு திரும்ப தன் இருக்கைக்குப் போனாள். போன வேகத்தில் அந்தப் பையனின் ஃபோன் ஒலித்தது.

“ஒனக்கு யாரும் இல்லன்னு கவலப்படாத, நான் இருக்கேண்டா” என்றாள். ஃபோனே தேவையில்லாமல் அவள் குரல் அங்கே எல்லோருக்கும் கேட்டது.

அங்கே எல்லோருமே அழுது விடுவார்கள் போல இருந்தது. மீசைக்காரர் சண்டை போட்டிருந்த தன் மனைவிக்கு ஃபோன் செய்து பேச ஆரம்பித்தார், ‘உறவு ரீதியாக சவால் விடப்பட்ட ஒருவன்’ என்று ட்விட்டரில் ஒருவர் எழுத ஆரம்பித்தார்.

அந்த ஜன்னலோரத்தில் செத்துப் போயிருந்த கிழவியை யாரும் கவனிக்கவில்லை.