மகிமா – எதற்கும் அசைந்து கொடுக்காத தன்மை

தன்வழி யாகத் தழைத்திடுஞானமுந்
தன்வழி யாகத் தழைத்திடும் வையகந்
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாந்
தன்வழி தன்னரு ளாகிநின் றானே. – (திருமந்திரம் – 678)

விளக்கம்:
அட்டாங்கயோகத்தில் மகிமா என்னும் சித்தி பெறும் போது எல்லாம் நம் வசப்படும். மாயையால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது, எதற்கும் நாம் அசைந்து கொடுக்க மாட்டோம். நாமே நம் வசப்பட்டுத் தன்வழியில் நிற்கும் போது ஞானம் பெருகும். நாம் ஞானம் பெறும் போது நம்மைச் சுற்றி உள்ள  உலகம் துயர் நீங்கித் தழைத்திடும். நம்மால் துயர் நீங்கிய உலகம் தானும் யோக வழியில் நின்று சிவனருள் பெறும்.


காற்று ஒளியாவதைக் காணலாம்!

ஆகின்ற காலொளி யாவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவது மில்லையாம்
மேனின்ற காலம் வெளியுற நின்றன
தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே. – (திருமந்திரம் – 677)

விளக்கம்:
மூச்சுப்பயிற்சியின் போது நாம் விடும் மூச்சு ஒளிமயமாகிறது. அதை நாம் உணர்ந்து கொண்டால், பிறகு நாம் வாழ்நாள் வீணாகக் கழியாது. யோக வழியில் நின்று தூய்மையான வாழ்வு பெறலாம். அவ்வழியில் நிற்கும் போது காலம் கூட நம் வசப்படும்.


மெய்ப்பொருள் சொல்லிய மெல்லியலாள்!

மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்
தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்
கைப்பொரு ளாகக் கலந்திடு மோராண்டின்
மைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே. – (திருமந்திரம் – 676)

விளக்கம்:
மெய்ப்பொருளை உணர்த்தும் குண்டலினிச் சக்தியின் துணை கொண்டு இலகிமா என்னும் சித்தி பெறுவதைப் பற்றிப் பார்த்தோம். இலகிமா என்னும் மென்மை பெற்று, தொடர்ந்து ஒரு வருடம் தியானத்தில் லயித்திருந்தால், சிவதத்துவம் பற்றிய ஞானம் கைகூடும். மறைபொருளாகிய அத்தத்துவத்தை உணர்வதே மகிமா என்னும் சித்தி ஆகும்.


மென்மையிலும் மென்மையான ஒளி!

மாலகு வாகிய மாயனைக் கண்டபின்
தானொளி யாகித் தழைத்தங் கிருந்திடும்
பாலொளி யாகிப் பரந்தெங்கு நின்றது
மேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே. – (திருமந்திரம் – 675)

விளக்கம்:
அட்டாங்க யோகத்தில் நின்று, இலகிமா என்னும் சித்தி பெற்று, மென்மையிலும் மென்மையான சிவபெருமானைக் காணலாம். சிவபெருமானைக் கண்டபின் நாமும் மென்மையான ஒளியாகலாம், சிவ ஒளியோடு கலந்திருக்கலாம். சிவ ஒளி பரந்து எங்கும் விரிந்திருப்பதை அப்போது உணரலாம். அனைத்துக்கும் மேலான ஒளியாகிய மெய்ப்பொருளை அறிந்து கொள்லாளாம்.


இலகிமா என்னும் சித்தி பெறும் வழி!

ஆகின்ற வத்தனி நாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகல தாய்ச்
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்ற தையாண்டின் மாலகு வாகுமே. – (திருமந்திரம் – 674)

விளக்கம்:
நம்முடைய வாழ்நாளெல்லாம் வீணாகச் சாகின்றன. இப்படி வீணாகும் காலத்தில் நாம் தியான வழியில் நின்று, தனி நாயகியான குண்டலினிச் சக்தியைச் சேர்ந்திருப்போம். ஐந்தாண்டுகள் இப்படி நாம் தொடர்ந்து அட்டாங்க யோகத்தில் நின்றிருந்தால், இலகிமா என்னும் சித்தி பெறலாம். இலகிமா என்னும் மென்மையான தன்மையை அடைந்தால் நாம் அனைத்து தத்துவங்களிலும் புகுந்து வரலாம். அதாவது அனைத்துத் தத்துவங்களையும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.


அணிமா – பஞ்சு போன்ற மனம் பெறலாம்!

முடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டில்
அணிந்த அணிமாகை தானாம் இவனுந்
தணிந்தவப் பஞ்சினுந் தானொய்ய தாகி
மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே. – (திருமந்திரம் – 673)

விளக்கம்:
யோகப்பயிற்சியில் நின்று, மேலே ஏற்றிய குண்டலினியை கீழே இறங்காமல் ஒரே இடத்தில் முடிந்து வைத்து, அதிலேயே ஒரு வருடம் லயித்திருந்தால் அணிமா என்னும் சித்தி கைகூடும். நாமும் குழப்பம் தணிந்து, பஞ்சை விட மெல்லிய மனம் பெறுவோம். காற்றாய் மெலிந்த நம் மனத்தை யாராலும் வெல்ல முடியாது.


அமிர்தம் நம்முள்ளேயே இருக்கிறது!

மந்தர மேறு மதிபானு வைமாற்றிக்
கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்
தந்தின்றி நற்கா மியலோகஞ் சார்வாகும்
அந்த வுலகம் அணிமாதி யாமே. – (திருமந்திரம் – 672)

விளக்கம்:
தேவர்கள் மந்தர மலையை மத்தாகக் கொண்டு கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தது போல, நாமும் குழியில் நட்ட தூண் போல நிமிர்ந்த நிலையில் அமர்ந்து சூரிய கலையிலும் சந்திர கலையிலும் கவனம் செலுத்தி, பிராணாயாமத்தைச் சரியாகச் செய்து வந்தால் நம்முள்ளே அமிர்தம் ஊறும். அது மட்டுமில்லாமல் நாம் விரும்பியவாறு சிவலோகத்தில் வசிக்கலாம். அவ்வுலகத்தில் அணிமா முதலான அட்டமாசித்திகளைப் பெறலாம்.


இருந்த இடத்திலேயே அட்டமாசித்திகளைப் பெறலாம்!

எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப்
பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்
இட்டம துள்ளே இறுக்கல் பரகாட்சி
எட்டு வரப்பு மிடந்தானின் றெட்டுமே. – (திருமந்திரம் – 671)

விளக்கம்:
அட்டாங்க யோகத்தில் நின்று அட்டமாசித்திகளைப் பெற்று, எழில் நிறைந்த பரவெளியைப் பார்த்தவர்கள் சித்தர் ஆவார்கள். அச்சித்தர்கள் பரவெளியில், தாம் விரும்பிய சிவ தரிசனம் பெறுவார்கள். இவையெல்லாம் பெற நாம் எங்கும் எதையும் தேடிச் செல்ல வேண்டியதில்லை. நாம் இருந்த இடத்திலேயே தியானம் செய்து பெறலாம்.


சித்திகள் மட்டுமல்ல, புத்தியும் கிடைக்கும்!

சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்
புத்திக ளானவை எல்லாம் புலப்படுஞ்
சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை
சத்தி அருள்தரத் தானுள வாகுமே. – (திருமந்திரம் – 670)

விளக்கம்:
அட்டாங்க யோகம் அட்டமாசித்திகளைத் தருவதோடு நின்று விடுவதில்லை. அட்டாங்கயோகத்தால் நம் புத்தி தெளிந்து, ஞானம் கிடைக்கும். திரிபுரை எனப்படும் சக்தியே அட்டமாசித்திகளின் மொத்த உருவமாகும். அந்தப் பராசக்தியின் அருளும் அட்டாங்கயோகத்தில் நிற்பவர்களுக்குக் கிடைக்கும்.


அட்டாங்க யோகத்தால் அமுதம் பெறலாம்

எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்
கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்
ஒட்டா நடுநாடி மூலத்த னல்பானு
விட்டான் மதியுண்ண வும்வரு மேலதே. – (திருமந்திரம் – 669)

விளக்கம்:
அட்டாங்க யோகத்தில் நின்று, வசப்படுத்தக் கடினமான மூச்சுக்காற்றை வசப்படுத்தி மூச்சுப்பயிற்சி செய்தால் அட்டமாசித்திகளைப் பெறலாம். மூச்சுப்பயிற்சியின் போது, சுழுமுனையை நமக்கு இணக்கமாகச் செய்வோம். சுழுமுனை நமக்கு இணக்கமானால், குண்டலினியை தலை உச்சிக்கு ஏற்றி அங்கே ஊறும் அமுதத்தை ருசிக்கலாம்.