சிவன் நம்முள்ளே குடி கொள்வான்!

முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழே
பன்னெழு வேதப் பகலொளி யுண்டென்னும்
நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத்
தன்னெழு கோயில் தலைவனு மாமே – 824

விளக்கம்:
தாமரை மலரைப் போல விரிந்து மேலே எழும் தன்மையுடைய குண்டலினி சக்தி நம்முடைய கொப்பூழுக்கு பன்னிரெண்டு விரற்கடை அளவு கீழே உள்ளது. இந்த குண்டலினி சக்தி பகலொளியைப் போன்றது என வேதங்களால் போற்றப்படுகிறது. நன்மை தரும் அந்த குண்டலினியின் எழுச்சியில் நம் சிந்தையை ஒளி விடும் தீபம் போல நேராக நிறுத்துவோம். சிந்தையில் குண்டலினியின் எழுச்சியைக் கவனித்து, நம் கவனத்தை அதிலேயே நிறுத்தினால், நம் உடல் என்னும் கோயிலில் சிவபெருமான் குடி கொள்வான்.

கேசரியோகத்தினால் சிவன் நம்முள்ளே குடி கொள்வான்.

பன்மம் – தாமரை, வேதப் பகலொளி – வேதத்தில் பகல் ஒளி எனப் போற்றப்படும் குண்டலினி


தீபம் போன்ற அழகான சிந்தை!

தூர தரிசனஞ் சொல்லுவன் காணலாங்
காராருங் கண்ணி கடைஞான முட்பெய்தி
ஏராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற்
பாரா ருலகம் பகன்முன்ன தாமே – 823

விளக்கம்:
தொடர்ந்து கேசரியோகப் பயிற்சி செய்பவர்கள் ஐம்பூதங்களின் இயக்கத்தையும் தம்முள்ளே கண்டு, இந்த உலகம் இயங்கும் முறையைப் பற்றிய தூரதரிசனம் பெறுவார்கள். தூரதரிசனம் பெற்ற அவர்கள் கருமை நிறக் கண்களை உடைய பராசக்தியின் அருள் பெற்று ஞானத்தின் எல்லையை அறிவார்கள். எழுச்சி கொண்டு ஒளி விடும் தீபம் போன்ற அழகான சிந்தையைக் கொண்டவர்களுக்கு, பரந்த இவ்வுலகம் வெளிச்சம் நிறைந்ததாகத் தெரியும்.

கேசரியோகத்தினால் சிந்தை தெளிவு பெறும்.

காராரும் – கருமை நிறம் பொருந்திய, கடைஞானம் – ஞானத்தின் எல்லை, ஏராரும் – எழுச்சி நிறைந்த, பாராரும் – பரந்த, பகன் – சூரியன்


தூர தரிசனம் பெறலாம்!

சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ்
சொல்லலு மாகு மண்ணீர்க் கடினமுஞ்
சொல்லலு மாகும் இவையஞ்சுங் கூடிடிற்
சொல்லலு மாந்தூர தெரிசனந் தானே – 822

விளக்கம்:
கேசரியோகப் பயிற்சி செய்யும் போது நம் உடலில் வாயு இயங்கும் முறையை உணரலாம். கடினம் தான் என்றாலும், இன்னும் சிறிது முயற்சி செய்தால், நம் உடலின் உள்ளே நிலத்தையும் நீரையும் உணரலாம். இன்னும் கடுமையாக யோகப்பயிற்சி செய்தால், ஐம்பூதங்களின் தன்மையையும் நம் உடலின் உள்ளே அறிந்து உணரலாம். அகத்தினுள் ஐம்பூதங்களின் இயக்கத்தை உணர்ந்தால், இந்த உலகம் இயங்கும் முறையையும் அறியலாம்.

கேசரியோகத்தினால் ஐம்பூதங்களின் இயல்பை, செயல்படும் முறையை தூரதரிசனத்தில் அறிந்து கொள்ளலாம்.

ஆகம் – உடல், தூர தரிசனம் – தூரத்தில் உள்ளவற்றை இங்கிருந்தே பார்க்கும் திறன்