நான் அவள் அல்லள்!

ரயில் இன்ஜின் போன்ற
மூச்சுக் காத்தும்
வெட்கம் மறந்த
கண்ணீரும் அவன்
சுக்கிலத்தின் பழமையைச்
சொன்னது!

இடுப்பசைத்து அவள்
ஏந்திக் கொண்ட விதம்
“நான் உன்னை விலக மாட்டேன்”
என்பதாம்!

“நான் அவளைப் போன்றவளில்லை”
என்பதை
அடுத்த உடலசைவு
உறுதி செய்தது!


முதலை ஒன்று வளர்த்தேன்

முதலை ஒன்று வளர்த்தேன்
ஆமாம் முதலை தான்.
ஆதரவாய்ப் பிடித்துக்கொள்ள
அந்த சொரசொரப்பு தோதாக இருந்தது.

உச்சக்கட்ட அச்சத்தை ரசித்தபடி
கொல்வதே ருசியானது.
உண்பதெல்லாம் வெறும் பசிக்குத்தான்.
அதன் வியாக்கியானத்தைக் கேட்டால்
முதலையாய் பிறந்திருக்கலாமோ?

முதலைக்குத் தினமும் தேவை
கொஞ்சம் இளஞ்சூட்டுக் குருதி.
அதைத் தர எனக்குப் பிடிக்காதவர் பலர்!

என்னைப் பிடிக்காதவர் இருக்கலாம்
எனக்குப் பிடிக்காதவர் தேவையே இல்லை.

காலங்கடந்த வேளையிலே
ஒருநாள் புரிந்தது
நான் தான்
வளர்க்கப்படுகிறேன்
என்னும் உண்மை.


உதடும் உயிரும் கரைந்ததே

இனிப்புச் சாரலென வந்து ஒட்டும்
மகிழ்ச்சித் தீண்டலில்
கரைந்ததென் உதடும் உயிரும்.

ஒவ்வொரு துளியிலும்
ஆயிரமாயிரம் நுண்மைகள்.
ஒன்று விடாமல்
ரசித்தேன்
ருசித்தேன்.

இன்னும் கொஞ்சம்
இன்னும் கொஞ்சம்
என கேட்டு வாங்கியும்
வெட்கம் விட்டு கேட்காமலே
எடுத்து அள்ளியும்
ஆசை அடங்குவதாயில்லை.
நானும் விடுவதாயில்லை.

இதையெல்லாம் ஒரு கவிதை
என்று நீங்கள் நம்பினால்
ஐஸ்கிரீம் என்று
தலைப்பிட்டுக் கொள்ளுங்கள்.


இந்தக் காற்று எனக்கு பரிச்சயம்

கடலைப் போல இந்தக்
காற்றும் அலை மிகுந்தது
என்பது தெரிந்தது தானே!

இந்தக் காலை நேரக் காற்று பரிச்சயமானது.
அதே அலை, அதே குளிர், அதே வேகம்.
நெளிதலும் குழைதலும் கூட அதேதான்.

கடந்து போன அதே காற்று
திரும்ப வந்து தடவிப் பார்த்து
சந்தேகத்துடன் கேட்டது.
“ஒற்றை உடலாய் இருக்கிறாயே?”

ஏதோ பழைய ஞாபகம் போல!


நுனிப்புல்

நுனிப்புல் மேய்வது ஒரு கலை
நுனியோடு நிறுத்திக் கொள்வது தவம்

(வயது வந்தவர்களுக்காக எழுதப்பட்டது)


கண்ணாடி நாக்கு

வாவுறும் மனதுடன் வால்சுழற் றும்நாவும்
தாவுறும் வளைவுறும் தரம்குறைந் தும்பேசும்.
அடங்குமே வயங்கலால் ஆனதொரு செந்நாவும்
மடங்கினால் உடையுமே மதியுடன் பேசுமே!

(வாவுறும் – தாண்டிடும், வயங்கல் – கண்ணாடி)

இதன் original –
if only
our tongues
were made
of glass

how much
more careful
we would be
when we
speak – Shaun Shane


காலாங்கி நாதருக்கு ஃபேஸ்புக் பிடிக்காது

சித்தர் காலாங்கி நாதர் எனக்கு அருளிய பிரத்தியேக உபதேசம் இது.

பேசவே தெரியா உனக்கிந்த
…… ஃபேஸ்புக் பக்கம் ஒருகேடா?
நாசமாய் போச்சே உனதுபணி
….. நேரம் முழுதும் வீணாச்சே!
காசதைப் பாரடா நீயென்ன
….. கருத்துகந் தசாமி பெற்றவனா?
நேசமாய் பாரடா வெளியுலகினை
….. நட்பென ஆகுமே உலகமெல்லாம்.!


உணர்ச்சி கடத்தல்!

எனது விரல் அழகாய்த் தெரிகிறது
அவளது விரல்கள் அதில் பின்னி இருப்பதால்!
வெளிச்சம் பாய்ந்த நரம்புகளின் உள்ளே
கொஞ்சம் குளிர்ச்சியும் பரவியது!

மிருதுவாய் சருமம் – உள்ளே
எலும்புகளின் உறுதி சோதித்தேன்!
நரம்புகள் எத்தனை? பய நரம்பு எது,
சிலிர்ப்பு எதில், கோபம் எதில் – பிரித்து மேய்ந்தேன்!
ஓடும் குருதியின் உஷ்ண மாற்றம் புரியப் பார்த்தேன்!

வார்த்தைகள் மிச்சமாயிற்று இப்போது –
விரல்களே பேசிக் கொள்கின்றன சகலமும்!


இந்துவும் பானுவும்

இந்துவும் பானுவும் இருவரும் உயரமாய்
பந்தென ஆடுவார் பளிச்சிடும் ஒளியுடன்!
இந்துவந் தாடுவாள் இரவிலே குளிர்ச்சியாய்
முந்திடு பானுவை, முன்னெழு தினமே!

(இந்து – நிலா, பானு – சூரியன். அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன் எழ வேண்டும் என்பதே இந்த பாடலின் பொருள்)


இனித்தாய் எங்கும்

புதிதாய்த் திருமணம் ஆன தம்பதி அவர்கள். மிகவும் சந்தோஷமாக இருந்த நேரத்தில் தலைவன் தலைவியிடம் சொன்னான்.

இனித்தாய் அங்கும் இங்கும் எங்கும்
இனித்தாய் கடிந்தால்சொல் வந்து.

இதைக் கேட்டு மனம் புண்பட்ட தலைவி மென்மையாகக் கடிந்தாள்.

இனித்தேன் இனிப்பேன் இனியும் நீங்குவேன்
இனித்தாய் தனைபழித் தால்.