சன்மார்க்கம் போதித்த முதன்மையான மடம்

வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடம்வரை
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.   –  (திருமந்திரம் – 101)

விளக்கம்:
உலகில் சன்மார்க்கம் நிலைபெறும் பொருட்டு வந்த மடங்கள் எண்ணிக்கையில் ஏழு ஆகும். அவற்றில் முதன்மையான மடத்தை தோற்றுவித்தவர் திருமூலர். அவரால் உரைக்கப்பட்டது தான் ஒன்பது தந்திரங்களில் மூவாயிரம் பாடல்கள் கொண்ட இந்த திருமந்திரம் என்னும் அழகிய ஆகமம் ஆகும்.


திருமந்திரம் அனைவருக்கும் பொதுவானது

வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவா யிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது
வைத்த சிறப்புத் தருமிவை தானே.   –  (திருமந்திரம் – 100)

விளக்கம்:
ஒன்பது தந்திரங்கள் கொண்ட இந்த திருமந்திரம் என்னும் நன்னூலின் பரிசு என்னவென்றால், இந்த நூலில் உள்ள மூவாயிரம் பாடல்களைப் படிப்பதன் மூலம் முத்தி நிலை அடையலாம். அறிவுபூர்வமாகச் சொல்லப்பட்ட இந்த மூவாயிரம் பாடல்களும் அனைவருக்கும் பொதுவானதாகும், படிப்பவர்க்கு நன்மை தருவதுமாகும்.


தினமும் காலையில் திருமந்திரம் படிப்போம்

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே.   –  (திருமந்திரம் – 99)

விளக்கம்:
இந்த உலக மக்கள் யாவரும் தெரிந்து கொள்வதற்காக, நந்தி பெருமானின் அருளினால் பாடப்பட்டது, திருமூலரின் மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திரம். இந்த திருமந்திரத்தை தினமும் காலை நேரத்தில், அர்த்தம் புரிந்து படித்து வந்தால், உலகத்தலைவனான சிவபெருமானை அடையலாம்.

(ஞாலம் – உலகம்,  நண்ணுவர் – அடைவர்)


திருமந்திரம் சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டது

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
இத்துடன் வேறா இருந்து துதிசெயும்
பத்திமை யால்இப் பயனறி யாரே.   –  (திருமந்திரம் – 98)

விளக்கம்:
இந்த திருமந்திரத்தில் உள்ள தத்துவ ஞானங்கள் எல்லாம் சிவபெருமானால் கயிலாய மலையடிவாரத்தில் உபதேசிக்கப்பட்டவை. இதை உணர்ந்து கொள்ளாமல், இந்த திருமந்திரத்தை ஓதுபவர்கள்  (அவர்கள் முக்தி வேண்டி தவம் செய்யும் முனிவரானாலும், தேவரானாலும்)  இந்த நூலைப் படிப்பதனால் கிடைக்கக் கூடிய முழு பலனைப் பெறமாட்டார்கள்.

திருமந்திரம் படிப்பவர்கள், இதில் உள்ள தத்துவ ஞானங்கள் சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டவை என்பதை உணர்ந்து, பக்தியோடு படிக்க வேண்டும்.

(தாழ்வரை – மலை அடிவாரம்,   பத்திமை – பக்தி உடைமை)

 


திருமந்திரம் பாடுவதால் ஈசனை உணரலாம்

மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலு மாமே.   – (திருமந்திரம் – 97)

விளக்கம்:
தன்னையே நினைத்து பாடுபவரின் இன்னிசையின் உள்ளே ஈசன் எழுந்தருள்வான். பின்னால் மீண்டும் உலகைப் படைத்த பிரமனும் சிவபெருமானின் திருவடி பெறவே தியானித்து முயல்கிறான். இந்த திருமந்திரம் என்னும் ஆகமத்தைப் பாடுவதால் அந்த ஈசனை உணரலாம்.

(மன்னிய – நிலை பெற்ற, உன்னும் – முயற்சி)


திருமூலரின் அவையடக்கம்

பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்
ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்
நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்
தேடவல் லார்நெறி தேடகில் லேனே.   – (திருமந்திரம் – 96)

விளக்கம்:
சிவபெருமானின் புகழ் பாடுபவர் வழியிலே சென்று அவர்களைப் போல் பாடும் வழியை அறியாமல் உள்ளேன். பக்தியினாலே அவர்கள் ஆடுவதைப் போல நான் ஆடவில்லை. யோகத்தினால் இறைவனை நாடுபவர் வழியில் சென்று நாடும் வழியை அறியாமல் உள்ளேன். ஞானம் தேடுபவர் வழியில் சென்று ஞானம் அடையும் வழியும் அறியாமல் உள்ளேன்.

“எனக்கென்ன தகுதி இருக்கிறது சிவபெருமானின் புகழ் பாடுவதற்கு?” என திருமூலர் அவையடக்கத்தோடு கேட்கிறார்.


அண்ணலின் பெருமை!

ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையை
யாரறி வார்இந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே.   – (திருமந்திரம் – 95)

விளக்கம்:
யாருக்குத் தெரியும் எங்கள் சிவபெருமானின் பெருமை முழுவதும் ? அந்த பெருமானின் பரப்பை அறிந்தவர் யாரும் இல்லை! தனக்கென பெயரும் உருவமும் இல்லாத பெருஞ்சுடர் எங்கள் சிவபெருமான். அந்த பெருஞ்சுடரின் வேர் யாராலும் அறிய முடியாதது.


இயல்பான சோதி வடிவம்

பிதற்றுகின் றேனென்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை
இயற்றிகழ் சோதி இறைவனு மாமே.  – (திருமந்திரம் – 94)

விளக்கம்:
நான் தினமும் நந்தி என்னும் பெயருடைய இறைவனின் புகழை சொல்லிக் கொண்டே இருக்கிறேன். இரவும் பகலும் அப்பெருமானை என் மனத்தில் வைத்து தியானிக்கிறேன். உயர்ந்த ஒளி வடிவமான அந்த இறைவனை அடைய தொடர்ந்து முயல்கிறேன். சிவபெருமானின் அந்த சோதி வடிவம் இயல்பாகவே திகழ்வதாகும்.

(ஓங்கொளி – ஓங்கு + ஒளி,  இயற்றிகழ் – இயல் + திகழ்)


சூரியகலை மற்றும் சந்திரகலை

இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே.  – (திருமந்திரம் – 93)

விளக்கம்:
வேதத்தில் எண்ணில்லாத மந்திரங்கள் உள்ளன.  சூரியகலை மற்றும் சந்திரகலை ஆகியவற்றை சரியான முறையில் கட்டுப்படுத்தி பயிற்சி செய்யும் போது, மூலாதாரத்தில் உள்ள குண்டலினி என்னும் அரிய நெருப்பு மூண்டு வளரும். அப்போது வேதத்தில் உள்ள அந்த எண்ணில்லாத மந்திரங்கள் வெளிப்படும். அந்நிலையில் உச்சியில் பொன்னொளி போன்ற கிரணங்கள் ஒளி வீசுவதை உணரலாம்.

(இருக்கு – வேதம்,  அருக்கின்ற – சுருங்கி இருக்கின்ற,  அருக்கன் – சூரியன்,  சோமன் – சந்திரன்)


எல்லாம் நந்தி அருளாலே!

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்
நந்தி அருளால் மெய்ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நானிருந் தேனே.  – (திருமந்திரம் – 92)

விளக்கம்:
நந்தி அருளாலே மூலனின் உடலைப் பற்றி நின்றேன். நந்தி அருளாலே ஆகமத்தை பாடும் நிலையை அடைந்தேன். நந்தி அருளாலே மெய்ஞ்ஞானம் கிடைக்கப் பெற்றேன். நந்தி அருளாலே மெஞ்ஞானத்தில் நிலையாக இருந்தேனே.