பிராகாமியம்!

ஆன விளக்கொளி யாவ தறிகிலர்
மூல விளக்கொளி முன்னே யுடையவர்
கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு
மேலை விளக்கொளி வீடெளி தாநின்றே. – (திருமந்திரம் – 683)

விளக்கம்:
நம்மிடம் மூலாதாரத்தில் ஒரு விளக்கொளி உள்ளது. அதைத் தூண்டி விட்டு, சுடர் மிகச் செய்யும் வழி தெரியாமல் இருக்கிறோம். நறுமணம் மிகுந்த அந்த குண்டலினி என்னும் விளக்கொளியைத் தூண்டி விட்டு அதன் சுடரை உணர்ந்தவர்கள், பெருஞ்சுடரான அந்த சிவபெருமானை எளிதாக உணரலாம்.


கரிமா என்னும் சித்தி அடையும் வழி!

அறிந்த பராசத்தி யுள்ளே அமரில்
பறிந்தது பூதப் படையவை யெல்லாங்
குவிந்தவை யோராண்டு கூட இருக்கில்
விரிந்தது பரகாய மேவலு மாமே. – (திருமந்திரம் – 682)

விளக்கம்:
யோகப்பயிற்சியில் நாம் உணரும் பராசக்தி, நம்முள்ளே நீங்காது அமர்ந்தால் ஐம்பூதங்களால் ஏற்படும் துன்பம் நம்மை நெருங்காது. அந்நிலையில் மனம் இன்னும் தியானத்தில் குவியும். ஓராண்டு காலம் இவ்வாறு மனம் குவிந்து பயிற்சி செய்தால் கரிமா என்னும் சித்தி வாய்க்கும். விண்ணிலிருந்து கவனிப்பது போல் நம்மைச் சுற்றி நடப்பதைக் கவனிக்கலாம்.


கரிமாவில் உண்மையை உணரலாம்!

போவதொன் றில்லை வருவது தானில்லை
சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை
தாமத மில்லை தமரகத் தின்னொளி
யாவது மில்லை யறிந்துகொள் வார்க்கே. – (திருமந்திரம் – 681)

விளக்கம்:
கரிமா என்னும் சித்தியினால் விண்ணின் தன்மை பெறலாம். அதாவது எதையும் பற்றில்லாமல் மேலிருந்து பார்க்கும் அனுபவம் கிடைக்கும். பற்றில்லாமல் வாழ்க்கையை பார்க்கும் போது பல உண்மைகள் விளங்கும்.

1. நாம் எதையும் இழப்பதில்லை, ஏதாவது கொண்டு வந்தால் தானே இழப்பதற்கு?
2. நாம் சாவதில்லை, காரணம் இந்த உலக வயதை ஒப்பிடும் போது நமது வாழ்நாள் என்பது மிக சொற்ப காலமே ஆகும். ஏதாவது வாழ்ந்திருந்தால் தானே சாவு?
3. நாம் எதிலும் தாமதம் செய்யவில்லை, கண நேரம் தோன்றி மறையும் நம் வாழ்நாளில் பெரிதாக எதுவும் ஆகப் போவதில்லை. அதனால் குற்றவுணர்வு தேவையில்லை.

அட்டாங்கயோகத்தில் நின்று அகத்தின் ஒளியை காண்பவர்க்கே இந்த உண்மைகள் புரியும்.