பார்த்தால் கரும்புச்சாறு ஆனால் உண்மையில் வேப்பஞ்சாறு

வையகத் தேமட வாரொடும் கூடியென்
மெய்யகத் தோடும் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யகத் தேபெரு வேம்பது வாமே.  – (திருமந்திரம் – 207)

விளக்கம்:
இந்த உலகத்தில் பொது மகளிரோடு கூடுவதில் அப்படி என்ன பெரிய இன்பம் இருக்கிறது? மெய்ப்பொருளை உணர்ந்த பெரியவர்களைக் கேளுங்கள், அவர்கள் இன்னும் விளக்கமாகச் சொல்வார்கள் இவ்வாறு – “பொதுமகளிரிடம் இன்பம் என்பது அனுபவிக்கும் போது கரும்புச்சாறு போல இனிக்கும், ஆனால்  மனத்தில் வேம்பு போன்ற ஒரு கசப்பினை உண்டாக்கும்”.


பொதுமகளிரிடம் ஏமாறாதீர்கள்

இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயலுறும் புல்லின் புணர்ந்தவ ரேயினும்
மயலுறும் வானவர் சாரஇரும் என்பார்
அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே.  – (திருமந்திரம் – 206)

விளக்கம்:
ஒருவனது வாழ்க்கை நிலை நன்றாக இருக்கும் போது, பெண் யானையைப் போன்ற அழகிய இளம் பெண்கள் மழையில் புல் நனைந்திருப்பதைப் போல் வந்து கலந்திருப்பார்கள். அந்தப் பெண்கள் அவனை விட வசதியான இன்னொருவனைப் பார்த்து மயங்கி விட்டால், முதலாமவனை காத்திருக்கச் சொல்லித் தவிர்ப்பார்கள். மேலும் அவனை தனியாக அழைத்து ஏதாவது பேசி வழி அனுப்பி வைக்கப் பார்ப்பார்கள்.

பொதுமகளிரின் தன்மை அறியாமல், அவர்களைத் தேடி வாழ்நாளை வீணாக்க வேண்டாம். அவர்கள் இன்னும் தகுதியான ஒருவன் கிடைத்து விட்டால், அவனோடு ஒட்டிக் கொள்வார்கள்.

பிடி என்னும் சொல்லுக்கு பேய் என்றும் அகராதி அர்த்தம் சொல்கிறது. அந்த அர்த்தமும் இங்கே பொருத்தமாகவே உள்ளது.

இயல் – தகுதி, பெருமை,   பிடி – பெண் யானை,   மயல் – மயக்கம்,   அயல் – அருகிடம்


உண்மையான இன்பம் வீட்டில் இருக்கிறது

மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழும் இன்பம்
நனவது போலவும் நாடவொண் ணாதே.  – (திருமந்திரம் – 205)

விளக்கம்:
இல்லற வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் மனைவியிடம் இன்பத்தை நாடும்போது, அங்கே அவர்கள் இருவரும் சுனைநீரின் நீர்ச்சுழியில் மூழ்குவது போல இன்பத்தில் மூழ்குவார்கள். இதுவே உண்மையான இன்பமாகும். பொதுமகளிரிடம் காணும் இன்பம் என்பது கனவில் தோன்றும் சிறுஇன்பம் போன்றதாகும். அதை உண்மை என்று நம்பி நாட வேண்டாம்.


பொதுமகளிர் சகவாசம் வேண்டாம்

இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே. – (திருமந்திரம் – 204)

விளக்கம்:
மரத்தின் இலைகளின் ஊடே காய்த்து தொங்கும் எட்டிப்பழம் பார்க்க அழகாகவே இருக்கும். பார்க்க அழகாக இருக்கிறதே என்பதற்காக அதை உண்ண முடியாது. அது விஷத்தன்மை உடையதாகும். பொதுமகளிர் சகவாசமும் எட்டிப்பழம் உண்பது போன்ற விஷயம் தான். அந்தப் பெண்கள் தங்கள் முலை அழகைக் காட்டி சிரித்து மயக்கப் பார்ப்பார்கள். அவர்களிடமிருந்து விலகி நிற்கின்றவாறு நம் மனத்தை அறிவுறுத்தி வைக்க வேண்டும்.


நம்முடைய அறிவின் அளவு என்ன?

பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொணட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே. – (திருமந்திரம் – 203)

விளக்கம்:
நம்முடைய அறிவின் அளவு என்பது, இருட்டுக்குள்ளே ஒரு மின்னலின் போது தெரியும் காட்சி போன்றது தான். சிலர் இது புரியாமல் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அவர்களிடம் பணவசதியும் இருந்து விட்டால் சொல்லவே வேண்டியதில்லை. அப்படிப்பட்ட அவர்கள் மருட்சியான பார்வை கொண்ட பெண்களின் மீது மயக்கம் கொள்கிறார்களே தவிர, தங்கள் அறியாமையை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று நினைப்பதேயில்லை.


பிறர் மனைவியை விரும்பினால் வம்சம் இல்லாமல் போகும்

திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக்
கருத்தறி யாதவர் காலற்ற வாறே. – (திருமந்திரம் – 202)

விளக்கம்:
ஒருவன் தன்னிடம் உள்ள கனிந்த மாம்பழத்தை, இதை வைத்திருந்து பிறகு சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தான். பக்கத்தில் இருந்த ஒரு புளியமரத்துக் கிளையில் ஏறி புளியம்பழத்தை பறித்து சாப்பிட்டான். புளிப்புச் சுவை அவனுக்கு ஒத்துக்கொள்ளவில்லை, வைத்திருந்த மாம்பழமும் கெட்டு விட்டது. அது போலவே சிலர், தன் மனைவி எங்கே போய் விடப் போகிறாள் என்று நினைத்து பிறர் வீட்டுப் பெண்ணைத் தேடிப் போகிறார்கள். எங்கே போனாலும் அவர்கள் சுகப்பட மாட்டார்கள், வம்சம் இல்லாதவர்களாகவும் ஆவார்கள்.


அடுத்தவர் மனைவியை பாக்காதீங்க!

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே. – (திருமந்திரம் – 201)

விளக்கம்:
அன்புடைய மனைவி ஒருத்தி வீட்டில் இருக்கும் போது, பிறரின் மனைவி மேல் தகாத ஆசை கொள்ளும் ஆண்களின் செயல் எப்படி இருக்கிறது என்றால், நன்கு காய்த்து பழுத்த பலாப்பழம் ஒன்று வீட்டில் இருக்கும் போது, அதைச் சாப்பிடாமல் காட்டில் உள்ள ஈச்சம் பழத்திற்காக துன்பப்படுவது போன்றதாகும்.


இவை ஐந்தும் பெரும் பாவங்கள்

கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதகமாம் அவை நீக்கித்
தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே. – (திருமந்திரம் – 200)

விளக்கம்:
கொலை, களவு, கள், காமம், பொய் பேசுதல் ஆகியவை பெரும் பாவங்களாகும். அவற்றை விலக்கி விட்டு நம்முடைய மேலான தெய்வமாம் சிவபெருமானின் திருவடியைப் பற்றி இன்பத்தை உணர்வோம். அந்த இன்பத்தை உணர்ந்து விட்டால் பிறகு பாவங்கள் செய்ய மாட்டோம்.  எப்போதும் பேரின்பத்தில் திளைத்திருப்போம்.


நீங்கள் அசைவமா? இதைப் படியுங்கள்

பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி முறித்துவைப் பாரே. – (திருமந்திரம் –199)

விளக்கம்:
தீய உணவான மாமிசம் உண்ணுபர்கள் கீழ் மக்கள் ஆவார்கள். அவர்களை எமதூதர்கள் எல்லாரும் காணும்படியாக கறையானை அகற்றுவது போல பறித்து எடுத்துப் போய் தீ நிறைந்த நரகத்தில் மல்லாக்கத் தள்ளி கிடத்தி வைப்பார்கள்.

புலையர் – கீழ் மக்கள்,    இயமன் – எமன்,    செல் – கறையான்


கொலை செய்பவர்க்கு துர்மரணம் தான்!

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே. – (திருமந்திரம் – 198)

விளக்கம்:
எப்போது பார்த்தாலும் கொல்லு, குத்து என்று சொல்லிக் கொண்டிருக்கும் கொலைத் தொழில் புரிபவர்களுக்கு ஒருநாள் துர்மரணம் தான் ஏற்படும். அவர்களை யமதூதர்கள் வலிய கயிற்றால் கட்டி தீயினால் ஆன நரகத்திற்கு இழுத்துச் சென்று “இங்கேயே இரு” என்பார்கள். அங்கே அவர்களை நெடுங்காலம் வைத்திருந்து நட என்றும் நில் என்றும் ஆணையிட்டு வதைப்பார்கள்.

வல்லடி – துர்மரணம்