“ஏ மதியம் என்ன சாப்பிட்டே?” இப்படி கேட்டாலே உள்ளதை சொல்லவா இல்லை பொய் சொல்லுவோமான்னு சாந்திதேவி யோசிச்சு தான் பதில் சொல்வாள். கள்ளத்தனம் பண்ணினால் உண்மையா சொல்லுவா? ஆனாலும் அவளை நேர்ல பார்த்தா கோவமே வர மாடேங்குது. அவ சிரிக்கும்போது உதடு கொஞ்சம் கோணுமே, அதைப் பார்ப்பதால் இருக்குமோ? அப்போ கண்ணும் சேர்ந்து சிரிக்குமே, அதைப் பார்க்கும்போது என்னென்னமோ தோணும். ஹூம்.
ரெண்டு வருஷமா பழக்கம், நண்பனுடைய அலுவலகத்தில் வேலை பாக்கிறா. சேகரன் இருக்கும்போது அண்ணாம்பா, தனியா இருக்கும்போது டேய் கண்ணா ன்னு கூப்பிடுவா. கொஞ்ச நாளா தனியா சந்திச்சுக்கிட சந்தர்ப்பம் கிடைச்சது. ‘என்ன போன வாரத்துக்கு இப்போ ஒரு இன்ச் குறைஞ்ச மாதிரி இருக்கு’ ன்னேன். பார்வை போன இடத்தை கவனித்தவள் வெட்கப்பட்டாள். ஒரு நொடியில் முகம் மாறியது, முறைத்தாள். கோவப்படுறாளாம்! ‘என்னமோ அளந்து பார்த்த மாதிரிதான்’ முணுமுணுத்தாள். ‘கண் அளக்காததையா கை அளக்கப்போவுது?’. ‘பாக்கிற பொண்ணெல்லாம் இப்படிதான் அளப்பீங்களோ?’ பேச்சை வளர்க்கும் ஆசை தெரிந்தது. ‘அது பார்க்கிற மாதிரி இருந்தா அளக்குறதுதான். ஹூம் கையால அளக்கதான் பாக்கிறேன், எங்க முடியுது?’ பெருமூச்சு விட்டேன். ஓங்கி குட்டினாள். அதில் ஆசை இருந்தது.
சேகரன் கிட்ட பேசும்போதுதான் கொஞ்சம் குற்ற உணர்ச்சியா இருக்கும், அன்னியோன்யமா பழக முடியல. சாந்திதேவி கூட பழகுறது போதையாவே ஆயிருச்சு. ஒண்ணா சினிமா பார்த்தப்போ போதை இன்னும் ஏறுச்சு. புழுக்கமா இருக்குங்கிறத கூட காதுக்குள்ளே தான் பேசினாள். கிறுகிறுத்து போச்சு.
‘ஏன்டா சினிமாக்கு போனால் பின்னால உட்கார்ந்திருக்கிறவனெல்லாம் கண்ணு தெரியாதோ?’ சேகரன் சிரிச்சுக்கிடேதான் கேட்டான். என்ன சொல்லன்னே தெரியலை. டவுசர் போடுறதுக்கு முன்னாலருந்தே பிரெண்ட்ஸ். அழுகையே வந்திருச்சு.
இதெல்லாம் நடந்து 12 வருஷம் ஆச்சு. அதுக்கப்புறம் அவன் முகத்துல முழிக்க வெட்கப்பட்டு சென்னைக்கு வந்து வேலை தேடி பிறகு செட்டில் ஆயாச்சு. ‘டேய் மாப்ள எப்படி இருக்க?’ ன்னு சேகரன் இன்னைக்கு முன்னால வந்து நின்னப்போ இதெல்லாம் ஞாபகம் வந்து திரு திருன்னு முழிச்சேன். அவன்தான் என்ன உற்ச்சாகப்படுத்தி ‘வாடா டேய் ‘ன்னு வீட்டுக்கு கூட்டிட்டுப் போனான்.
நான் கூச்சப்படுறத பார்த்து அவனே ‘நீ ஏன் இப்படி இருக்கேன்னு தெரியும். விடுறா எனக்கு உன் மேல ஒன்னும் வருத்தம் இல்லை. நீ எனக்கு ஒரு சான்ஸ் தான் குடுத்துட்டு போன!’ன்னான். புரியாமல் பார்த்தேன். ‘எனக்கும் ஒரு கண் இருந்தது அவ மேல. நீ பழகிறத பார்த்திட்டுதான் பேசாம இருந்தேன். நீங்க சினிமாக்கு போனது எனக்கு தெரியும்னதும் ரொம்ப குற்றவுணர்வோட இருந்தா. இதுதான் சான்ஸ்ன்னு அப்படியே வசப்படுத்திட்டேன். துரோகம்னு பார்த்தா அதை செஞ்சது நான்தான்’.
பின்குறிப்பு – இது ஒரு சிறுகதை. கட்டுரை இல்லை.