உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த
சொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே. – (திருமந்திரம் – 1593)
விளக்கம்:
குண்டலினி சிரசினில் பொருந்தியிருக்கும் நிலை சமாதியாகும். அதுவே திருவடிப் பேறுமாகும். நாம் அந்நிலை அனுபவிக்கும் போது பேச்சு அற்று போகும், உணர்வு அழிந்து நான் என்ற நிலை மறந்து போகும். அலையில்லாத தெளிந்த நீரைப் போன்ற சிவத்தன்மை அனுபவமாகும். நான்கு வகை ஓசைகளான செவியோசை, மிடற்றோசை, நினைவோசை, நுண்ணோசை ஆகியவற்றைக் கடந்து விடலாம். அந்த சிவபெருமான் நம்மை நம்முடைய உண்மையான சொரூபத்தில் இருத்தினான், அதனால் பேச்சற்றுப் போனோமே.
சமாதி நிலையில் சிரசினில் இறைவன் திருவடியை மட்டுமே உணர்ந்திருப்போம். மற்ற எல்லா உணர்வுகளும் அற்றுப் போகும்.
சத்தாதி என்பது நான்கு வகை ஓசைகளைக் குறிக்கும். இது பற்றி எளிதாகப் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், இளையராஜா ரசிகர்களை வைத்து உதாரணம் சொல்லலாம். முதலில் செவியோசை, நம் காதில் விழும் சுற்றுப்புற ஒசை. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு ராஜாவின் இசை தவிர மற்ற இசை கேட்டால் காது சிவந்து ஒவ்வாமை ஏற்படுகிறது. அடுத்து மிடற்றோசை, நம் தொண்டையிலிருந்து வந்து நமக்கே கேட்கும் ஓசை. ராஜாவின் பாடல்களைக் கேட்டு ஹம் செய்வோமே, அதேதான். மூன்றாவது நினைவோசை, அந்த தென்றல் வந்து பாட்டு மண்டைக்குள்ளயே சுத்திகிட்டு இருக்குன்னு சொல்வாங்களே, அதேதான். ஒரு முறை கேட்ட பாட்டு திரும்பத் திரும்ப நினைவில் சுற்றி வரும் ஓசை அது. கடைசியாக நுண்ணோசை, இது அவ்வளவு எளிதாகக் கேட்க முடியாதது. நம் உடலினுள் ரத்தம் பாய்வது, மூச்சு உள்ளே சென்று வருவது போன்ற கேட்க முடியாத நிறைய ஓசைகள் உண்டாம். ஒரு பூ மலர்ந்து விரியும் போது அங்கே ஒரு நுண்ணோசை நிகழுமாம். ராஜா ரசிகர்களைக் கேட்டுப் பாருங்கள், மனம் நெகிழும் ஓசையை நிறைய முறை கேட்டிருப்பதாகச் சொல்வார்கள்.
In the state of Samadhi, we'll be speechless, There will be no other feelings. Our egotism will be dissolved. We'll be unite with Lord Siva. We'll not hear any sound surround us. The Lord will keep us in our natural state .