வேதாளம் சொன்ன கதையல்ல நிசம்!

சேதனனுக்கு நேரத்தைக் கடப்பதே சிரம காரியம். இந்த சாலையை எப்படி கடப்பான்?  தன் முயற்சியில் சற்றும் தளராத சேதனன் மீண்டும் அந்த அகலம் அதிகமுள்ள சாலையைக் கடக்க முயன்றான். அந்த இடத்தைக் கடந்த எந்த சக்கர வாகனமும், எந்த வாகன ஓட்டுனரும், எந்த ஒரு பயணியும், அவனை ஒரு பொருட்டாகவே உணரவில்லை. ஒவ்வொருவனையும் பொருட்படுத்திக் கொண்டிருந்தால் பிறகு அவனை பொருட்படுத்த எவனும் இருக்க மாட்டான் என்பது இங்கே பொருட்கொள்ள வேண்டிய விஷயம். அவனைப் போலவே சக சமுதாயக் கால்நடை ஒன்றும் அங்கே தவித்தான். அவன் ரொம்ப யோசிக்கவில்லை, எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்த சாலையைக் கடக்க ஆரம்பித்தான். சேதனனும் அவன் பின்னாலேயே நடக்க ஆரம்பித்தான். அப்போது வலப்பக்கமிருந்து வேகமாக வந்து கொண்டிருந்த கார் நிறக் கார் ஒன்று இரண்டு அற்பப் பிராணிகள் சாலையைக் கடப்பதைப் பார்த்து சிறிது வேகத்தை குறைத்தது. காரின் வேகத்தைப் பார்த்து முதலில் தயங்கிய அந்த சக மனிதன், கார் வேகம் குறைவதைப் பார்த்து வேகமாக சாலையைக் கடக்கப் பாய்ந்தான். அதே நேரம் அவன் தயங்கியதைப் பார்த்த அந்த கார் நிறக் கார் ஓட்டுனன் தன் காரின் வேகத்தைக் கூட்டினான்.

பிணமாகக் கிடந்த அந்த சக மனிதனை சேதனன் தூக்கிச் சுமந்தவாறு சாலையைக் கடந்தான். எந்த உணர்ச்சியும் காட்டாமல் அந்தக் கார் சாதாரணமாகக் கடந்து சென்ற விதம், தனக்கு இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை என்பதாக இருந்தது. சேதனன் சாலையைக் கடந்து முடிக்கும் போது, தோளில் பிணமாகக் கிடந்தது கனக்கத் தொடங்கியது. ஒரு ஓரமாக இறக்கி வைக்கப் பார்த்தால், அது இறங்க மறுத்தது. இந்த இடத்தில் இருந்து தான் வேதாளம் சொன்ன கதை ஆரம்பம் ஆகிறது.

அந்த சடலத்தில் இருந்து இறங்க மறுத்த வேதாளம் பேசத் தொடங்கியது. “சேதனா! இப்போது நடக்கும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையில் ஓர் ஒற்றை இலக்க சதவிகிதம் மட்டுமே விபத்தாகும், மற்றவையெல்லாம் கொலையும், தற்கொலையுமே ஆகும். தெரியுமா உனக்கு?” எனக் கேட்டது.

“ஊடகங்கள் எல்லாவற்றையும் மிகைப்படுத்தி பேச வைக்கிறது. உன் உணவுப் பழக்கம் பற்றி கொஞ்சம் சொல்லேன்.”  சேதனன் வேதாளத்திடம் கேட்டான்.

“வேதாளத்திற்கு நினைவு தான் உணவு. ஏன் கேட்கிறாய்?”

“யோவ்! இந்த வெயிட் இருக்கியேன்னு கேட்டா!  எறங்குயா கீழ”.

“கோபப்படாதே சேதனா! உன் மூலமாக இந்த உலகிற்கு நீதி சொல்ல வேண்டியிருக்கிறது”.

“நீயுமா? என்ன செய்யணும்னு சொல்லு”.

”நீ இந்த சடலத்தை தோளில் சுமந்தவாறு மருத்துவமனைக்கு நடந்து போ. போகும் வழியில் நான் உனக்கு ஒரு கதை சொல்கிறேன்”.

கதை கேட்பது, கருத்து சொல்வது, இதெல்லாம் சேதனனுக்கு பிடித்த விஷயம். அதனால் “சரி சொல்லு வேதாளமே!” என்று சொன்னவாறே நடக்க ஆரம்பித்தான்.

“சேதனா! இது கற்பனை கதை அல்ல, நடந்த சம்பவம். சிற்றுந்து எனப்படும் மினிபஸ்ஸில் நடந்த சம்பவம் இது. மினிபஸ்களுக்கு சாலை விதிகளில் இருந்து விலக்கு  அளிக்கப்பட்டுள்ளதாகக் கேள்விப்பட்டுள்ளேன். பாதசாரி ஒருவர் கண்ணசைத்தாலே பக்கத்தில் வந்து நின்று அவரை ஏற்றிச் செல்லும். அந்த வகையில் அவை சிறந்த சேவையை அளிக்கின்றன. சம்பவ தினத்தன்று, மதிய நேரம், ஓரளவு கூட்டத்துடன் பயணம் சென்று கொண்டிருந்தது. நண்பகல் நேரமாதலால் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லை. சிற்றுந்தின் ஒட்டுனர் மற்றும் நடத்துனர், இருவருமே இளவயதுக்காரர்கள்.”

“பக்கச்சாலையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மினிபஸ்ஸின் முன்னே வந்து சாலையில் இணைந்து சாலையின் நடுவே மிதமான வேகத்தில் செல்ல ஆரம்பித்தது. மோட்டார் சைக்கிளில் இருந்த இருவருக்கும் முப்பது வயதிற்குள் இருக்கும், லுங்கியும் பனியனும் அணிந்திருந்தார்கள். பின்னால் வந்த மினிபஸ்ஸுக்கு வழிவிடாமல் நடுரோட்டில் அலட்சியமாக ஒட்டினான் அந்த சிவப்பு பனியன்காரன். ஹாரன் சத்தம் கேட்டு அவன் உடல் கொஞ்சம் விரைத்ததே தவிர, ஒதுங்கி வழி விடுவதில்லை என தீர்மானமாக ஓட்டினான். மினிபஸ் ஓட்டுனன் பொறுமை இழக்க ஆரம்பித்தான். அவன் உதிர்த்த கெட்ட வார்த்தைகளை எல்லாம் பின்னால் நின்ற கல்லூரிப் பெண் ஒருத்தி கவனமாகக் குறிப்பெடுத்துக் கொண்டாள் தன் மனத்தில்.”

“மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நீல பனியன்காரன் பின்னால் திரும்பி கோபமாக இருந்த ஓட்டுனனின் முகத்தை பார்த்து விட்டு சிவப்பு பனியன்காரனிடம் ஏதோ சொல்லிச் சிரித்தான். அதை பார்த்த சிற்றுந்து ஓட்டுனனின் கோபம் தலைக்கேறியது. பயணச்சீட்டு கொடுக்க வந்த நடத்துனனிடம் பயணி ஒருவர் “அங்க என்னய்யா ப்ரச்சனை?” என்று கேட்க, முன்னால் வந்து பார்த்த நடத்துனன் ஓட்டுனனிடம் “தூக்குடா அவன” ன்னு சொல்லவும் அடுத்த விநாடி அங்கே எல்லாமே முடிஞ்சு போச்சு. மோட்டார் சைக்கிளில் வந்த இருவருமே பலியாகி விட்டார்கள்”.

“இப்போது என் கேள்வி இதுதான். நடந்தது விபத்தா அல்லது கொலையா? அந்த துர்சம்பவத்திற்கு காரணம் யார்? சிற்றுந்து ஓட்டுனரா? மோட்டார் சைக்கிள் ஓட்டுனரா? அவர் பின்னால் அமர்ந்திருந்தவரா? அல்லது “தூக்குடா அவனை”ன்னு சொன்ன நடத்துனரா? நீ சரியான பதிலை சொன்னால் நான் உன்னை விட்டு விடுவேன்.” என்று வேதாளம் சொன்னது.

கொஞ்சம் யோசித்த சேதனன் “இது போன்ற சூழ்நிலைகள் நிறைய இடங்களில், அநேக சமயங்களில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன, ஒன்றிரண்டைத் தவிர பெரும்பாலானவை அசம்பாவிதம் இல்லாமல் கலைந்து விடுகின்றன. உணர்ச்சி வசப்படாமல் யோசித்தால்  புரியும், இது போன்ற கோபங்கள் சில நிமிடங்களில் மறைந்து விடும். நீ சொன்ன சம்பவத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் இரண்டு பேர், மினி பஸ் ஓட்டியவரும் பைக் ஓட்டியவரும். நடத்துனர் என்ற முறையில் அவருக்கும் அதில் கொஞ்சம் பொறுப்பு இருக்கிறது. ஆனால் “அங்கே என்ன ப்ரச்சனை?”ன்னு கேட்ட அந்த பயணிக்கு இதில் எந்த சம்பந்தமும் கிடையாது. காசு கொடுத்து பயணச்சீட்டு எடுப்பதை விட்டு விட்டு தனக்குத் தேவையில்லாத விஷயத்தில் ஆர்வம் காட்டியது தான் அந்த அசம்பாவிதத்திற்கு காரணம்”.

சேதனனின் பதிலைக் கேட்ட வேதாளம்,  அந்த சடலத்தை விட்டு நீங்கியது. கதையும் பதிலும் கேட்டுக் குழம்பிப் போன அந்த சடலம் எழுந்து ஓடத்தொடங்கியது.