சோதித்த பேரொளி மூன்றுஐந்து எனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே. – (திருமந்திரம் – 110)
விளக்கம்:
பிரமன், திருமால், உருத்திரன் என்னும் மூவராகவும், பிரமன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் ஐவராகவும் விளங்குவது ஆதிக்கடவுளான சிவபெருமானே ஆகும். அவன் ஒளி வீசும் பேரொளிச் சுடராக உள்ளான். மூடர்கள் பிரமன், திருமால், உருத்திரன் ஆகியோரை வெவ்வேறானவராக எண்ணி பேதித்துப் பிதற்றுகிறார்கள்.
(சோதித்த – ஒளி விடுகின்ற, ஆதர்கள் – மூடர்கள்)
இந்தப் பாடலில் சோதித்த என்னும் சொல் ஒளி விடுகின்ற என்னும் பொருளில் வருகிறது. கடவுள் சோதிக்கிறார் என்றால் கடவுள் ஒளி விடுகிறார் என்று அர்த்தம். கடவுள் நம்மைத் தொடர்ந்து சோதிக்கட்டும்.