தேவர்களும் அறியாத இன்ப உலகம்

அளித்தான் உலகெங்கும் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான் பேரின்பத்து அருள்வெளி தானே.  – (திருமந்திரம் – 123)

விளக்கம்:
சிவபெருமான் இந்த உலகம் முழுவதும் தானே நிறைந்துள்ள உண்மையை நமக்கு உணர்த்தி அருளினான். தேவர்களும் அறியாத இன்ப உலகை நமக்குத் தந்தான். சிதம்பரம் கனக சபையில் நடனம் செய்யும் தன்  திருவடியை நாம் வணங்க அளித்தான். எல்லாவற்றிற்கும் மேலாக இன்பமயமான அருள்வெளி ஒன்று நமக்கெல்லாம் தந்தானே!


சிவயோகம்!

சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகஞ் சாராது அவன்பதி போக
நவயோகம் நந்தி நமக்களித் தானே. – (திருமந்திரம் – 122)

விளக்கம்:
சிவயோகத்தை விரும்புவோர் இறைவன் அறிவுப் பொருள் என்பதையும், இந்த உலகம் அறிவற்ற பொருள் என்பதையும் விவேகத்தால் புரிந்து கொள்ள வேண்டும்.  தீமை அளிக்கும் யோக வழிகளில் செல்லாமல், தவயோகம் செய்து வந்தால் சிவ ஒளியை உள்ளே உணரலாம். அந்த நந்தி பெருமான், தன்னுடைய வீட்டை நாம் அடையும்படியாக, புதுமையான யோகத்தை நமக்கு அளித்தான். அந்த யோக வழியில் சென்று நாம் வீடு பேறு அடையலாம்.

(சித்து – அறிவுப் பொருள் (இறைவன்),  அசித்து – அறிவற்ற பொருள் (உலகம்), பதி – வீடு, நவ யோகம் – புதுமையான யோகம்)


சிவயோகியர்!

வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே. – (திருமந்திரம் – 121)

விளக்கம்:
முந்தைய பாடலில் சொல்லப்பட்டது போல, பிறவிகளுக்குக் காரணமான தீவினைகள் அழியப் பெற்றவர்கள் மேலான நிலை அடைந்து சுத்தமான ஆன்மா ஆவார்கள். அந்த சிவயோகியர்கள், புலன்களும் உயிரும் ஒன்றாக உள்ள உடல் கொண்டிருந்தாலும், புலன்களின் வழியில் மனம் செல்லாது இருப்பார்கள். அதாவது உடலுடன் இருக்கும் போதே செத்தவரைப் போல இருப்பார்கள்.


வறுக்கப்படும் தீவினைகள்

ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே. – (திருமந்திரம் – 120)

விளக்கம்:
நம்முடைய செயல்களில் தீவினைகள் நிறைய கலந்துள்ளன. பசும்பாலில் கலந்துள்ள நீரைப் பிரிக்கும் அன்னப் பறவையைப் போல, நம் சிவபெருமான் சிதம்பரத்தில் உள்ள கனகசபையில் தன்னுடைய ஒப்பில்லாத நடனத்தினால் நம்முடைய தீய வினைகளைப் பிரித்து விடுகிறான். நம்முடைய பிறப்புகளுக்கு காரணமான தீய வினைகள், தீயில் வறுக்கப்பட்ட வித்துக்களாகி விடுகின்றன. வறுக்கப்பட்ட வித்துக்கள் முளைக்காது, அது போல நமக்கு மறுபிறவி என்பது இராது.


குருபரன் நல்வழி காட்டுவான்!

அறிவுஐம் புலனுட னேநான் றதாகி
நெறியறி யாதுற்ற நீர்ஆழம் போல
அறிவுஅறி வுள்ளே அழிந்தது போலக்
குறியறி விப்பான் குருபர னாமே.  – (திருமந்திரம் – 119)

விளக்கம்:
ஒருவன் ஆழம் தெரியாமல் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதைப் போல, நம்முடைய அறிவு ஐம்புலன்களில் மாட்டிக் கொண்டு மயங்கி நிற்கிறது. நம்முடைய குருநாதனான சிவபெருமான் நமக்கு தெளிவான வழி காட்டுவான். அப்போது நம்முடைய சிற்றறிவு பேரறிவுடன் சென்று கலந்தது போல் ஆகும்.