சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம்
சோம்பர் கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே. – (திருமந்திரம் – 128)
விளக்கம்:
தனக்கென்று எந்த செயலும் இல்லாமல் இருக்கும் சித்தர்களைச் சோம்பர் என்கிறார் திருமூலர். அவர்கள் சுத்தமான வெளியிலே பேரின்பத்தை அனுபவித்து, தன்னிலை மறந்து அங்கேயே கிடப்பார்கள். அந்த பேரின்ப நிலை, வேதத்தினாலும் எட்ட முடியாதது. அந்த பேரின்ப நிலையில் வேதங்களை எல்லாம் அவர்கள் மறந்து விடுவார்கள். அவர்களுக்குத் தெரிவதெல்லாம் சிவமாகிய பேரின்பம் மட்டுமே.
சுருதி என்றால் எழுத்து மூலம் இல்லாமல் வாய் மொழியினால் கற்ற வேதம். வேதங்களுக்கு ஆரம்பத்தில் எழுத்து உரு கிடையாது, வாய்மொழியாகத் தான் கற்பிக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தான், வேதங்கள் எழுத்து உருவில் பதிவு செய்யப்பட்டன.