கிராஃபிக் டிசைனிங் – சில உதவிக்குறிப்புகள் பாகம்-02

ஒரு முழுமையான அழகுடைய பெண்ணைப் பார்த்தால், கண் நல்லாயிருக்கு, மூக்கு நல்லாயிருக்கு என்று பிரித்துச் சொல்லத் தோன்றாது. அது மாதிரி தான், நம்முடைய டிசைன், பார்ப்பவரை முழுமையான அளவில் ஈர்க்க வேண்டும், அப்படி இருந்தால் நாம் சரியாக செய்திருக்கிறோம் என்று அர்த்தம். பார்ப்பவருக்கு பேக் கிரவுண்ட், படம், டைப் ஆகியவற்றை தனித்தனியாக பிரித்துப் பார்க்கத் தோன்றக்கூடாது.  நாம் தான் நமது டிசைனின் முதல் பார்வையாளர், மனதளவில் தள்ளி நின்று, வேறு யாரோ செய்த டிசைனைப் பார்ப்பது போல பார்க்கும் மனோபாவத்தை பழகிக் கொள்வது நல்லது.

முதல் பாகத்தில் சொன்னது போல, டிசைனிங் ஆரம்பிக்கும் முன், சைஸ் தெரிந்து கொள்வது நல்லது. நம்முடைய முதல் ஸ்டெப், டாக்குமெண்ட் சைஸில் மேட்டரின் மொத்த அளவை இன்புட் செய்வதாக இருக்க வேண்டும். வெட்டுதல், மடித்தல் போன்றவை வரும் இடங்களில் Guide Lines போட்டுக் கொள்வது நல்லது. இப்படி ஆரம்பித்து வேலை செய்வது, நல்ல சாலையில் வண்டி ஒட்டுவது போல எளிதாக இருக்கும். குத்து மதிப்பாக ஒரு A4 documentல் ஆரம்பித்து மனக்கணக்கிலேயே வேலை செய்வது, ரோடு இல்லாத இடத்தில் வண்டி ஓட்டுவது போன்றதாகும், பாதியில் வழி தவறிப் போகும் வாய்ப்புண்டு. இதை over confidence என்றும் சொல்லலாம். இதைப் பற்றி இன்னும் விளக்கமாக இங்கே http://www.dayfold.com/Artwork/TabId/311/ArtMID/1018/ArticleID/17/Artwork-document-size-when-using-Cutter-Guides.aspx

புதிதாக வேலை பழகுபவர்களுக்கு, இரண்டு விதமான வழிமுறைகள் உண்டு. போட்டோஷாப்பிலும் கோரல்ட்ராவிலும் தெரிந்த toolsகளைக் கொண்டு, அந்த வட்டத்துக்குள் டிசைனை முடிப்பது. பெரும்பாலனவர்களுக்கு இதுதான் சாத்தியம், சுலபமான வழியும் கூட. இன்னொரு வழிமுறை, மனத்தில் தோன்றும் சில சித்திரங்களை எப்படி கணினியில் செயல்படுத்துவது என்று யோசித்து அந்த வழிமுறையை பழகிக் கொள்வது. கூகுளில் தேடினால், நமக்குத் தேவையான tutorials கிடைக்கின்றன. உதாரணத்திற்கு, ஒரு இடத்தில் உள்ள தலைப்பிற்கு fire effect இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும், ஆனால் எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியாது. http://10steps.sg/tutorials/photoshop/text-on-fire-effect/ என்ற முகவரிக்குப் போனால எளிமையாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள். இது போல தொடர்ந்து பல புது விஷயங்களை தெரிந்து கொள்வது க்ரியேட்டிவிட்டிக்கு உதவும்.

இன்னொரு முக்கிய விஷயம், சில நல்ல க்ரியேட்டிவிட்டி உள்ளவர்கள் கூட டிசைனை எங்கே முடிப்பது என்று தெரியாமல் திணறுவார்கள். நிறைய அலங்கார வேலைகள் செய்து கொண்டே இருப்பார்கள், ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தினால் finishing அழகாக இருக்கும். ஆனால் அதைத் தாண்டி இன்னும் மெருகேற்றலாம் என்று நினைப்பார்கள். ‘When your work speaks for itself, don’t interrupt’ என்றொரு பாடம் உண்டு. இந்த மனப்பயிற்சி முக்கியமான  விஷயம். சில சமயம், ஆரம்பித்து பத்து நிமிஷங்களில், நாம் எதிர்பார்ப்பதை விட நல்ல டிசைன் அமைந்து விடுவது உண்டு, அதோடு அந்த டிசைனை முடித்து விடுவது நல்லது. இன்னும் ஏதாவது செய்து பார்ப்போமே என்று நினைப்புத் தோன்றுவது வாடிக்கை, அந்த நினைப்பை அலட்சியப்படுத்துங்கள்.

அடுத்த பாகத்தில் Color Management பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

கிராஃபிக் டிசைனிங் – சில உதவிக்குறிப்புகள் பாகம்-01 இங்கே.

One thought on “கிராஃபிக் டிசைனிங் – சில உதவிக்குறிப்புகள் பாகம்-02

  1. தங்களுடைய கிராபிக்ஸ் டிசைன் பதிவை படித்தேன், எனக்கும் தங்களை போன்று சோறு போடுவது அதுதான், பதிவிட்டமைக்கு நன்றி, சுரேந்திரன், குண்டூர்.

Comments are closed.