ஆர்ட்டிஸ்டு!

அவரை ஆர்ட்டிஸ்ட்ன்னு தான் கூப்பிடுவோம். பொதுவா லெட்சுமி படம்னா,  சாமி ஒல்லியா இருக்கும், ஒரு ரெடிமேட் சிரிப்ப ஒட்ட வச்சிருப்பாங்க. கையில இருந்து விழுற தங்கக்காசுக்கும் லெட்சுமியோட தோரணைக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனா ஆர்ட்டிஸ்ட்  திருமகள் படத்த வரைஞ்சார்னா, வடிவமே செழிப்பா இருக்கும், கைலேருந்து தங்கமெல்லாம் விழாது, ஆனா ஒலகத்துல உள்ள மொத்தப் பணமும் என்கிட்டதாண்டா அப்படிங்கிற தோரணை இருக்கும். ஓவியனிக்கே உள்ள சாபக்கேடு அவன் கேக்குற துட்டு கெடைக்காது. ஆர்ட்டிஸ்டும் சிரிப்பு மாறாம குடுக்கிற துட்ட வாங்கிக்கிடுவார். “ஓவியனுக்கு உண்டான துட்ட குடுக்காம படம் வாங்கிட்டுப் போறவனுக்கு விருத்தியே இருக்காது”ன்னு சொல்வேன். “சேச்சே! அப்பிடில்லாம் சொல்லத” என்பார். அவருக்கென்ன? பெண்டாட்டி, புள்ளைங்க இருந்தா துட்டோட அருமை தெரியும். கல்யாணமாகி பத்து வருஷத்துல கட்டினவள ஏதோ ஒரு நோய்க்கு பறி குடுத்திட்டார்.

எப்பவுமே ரொம்ப நெதானமா பேசுற ஆளு, அன்னைக்கு அவரோட பதட்டத்த சிகரெட் பிடிச்சிருந்த விரலே காட்டிக்குடுத்துச்சு.

”என்ன ஆர்ட்டிஸ்ட் விஷயம்”ன்னு கேட்டேன்.

“நாகர்கோவில்ல ஒரு குடும்பம் ராதாக்ருஷ்ணன் படம் கேட்டாங்க. ரொம்ப வசதியானவங்க, ஒரே பொண்ணு. அந்தப் பொண்ணு ஆஸ்த்ரேலியால படிச்சு அங்கயே ஒருத்தன கல்யாணம் பண்ணிருக்கு. ரெண்டே வருஷத்தில  பத்திட்டான் போல! இப்போ இங்கதான் அந்த பொண்ணு இருக்கு கைக்கொழந்தையோட. என்னா ரசனைங்கிற அவளுக்கு!”

“அப்ப நாங்கல்லாம் ரசன கெட்டவனுங்க. என்ன?”ன்னு கேட்டதுல கொஞ்சம் பதட்டம் கொறஞ்சி சிரிச்சார்.

“பெயிண்டிங்கப் பாத்து கொஞ்ச நேரம் பித்து பிடிச்ச மாதிரி நின்னா. என்ன நெனச்சாளோ தெரில, அப்படியே என்மேல வந்து விழுந்திட்டா. நான் கோவத்தோட எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு சொல்லி தள்ளி விட்டுட்டேன்”ன்னு சொன்னவரப் பாத்து பாவமா இருந்தது.

“ஆர்ட்டிஸ்டு! அது வெளிநாட்டுல வளந்த புள்ள, அங்க இப்படித்தான் பாராட்டுவாங்க போல” என் வயித்தெரிச்சலை மறைக்க என்ன பாடுபட வேண்டியிருக்கு?

“ஏன்யா, பாராட்டுறதுக்கும், ஆசையோட பிடிக்குறதுக்கும் வித்தியாசம் தெரியாமலா இருக்கேன்”ன்னு கேட்டவர் “அம்பத்தாறு எங்க இருக்கு, இருவத்தாறு எங்க இருக்கு”ன்னு தனக்குத் தானே புலம்பினார். அதுக்கப்புறம் ரொம்ப நேரம் பேசவேயில்ல அவர். நானும் என்ன பேசன்னு தெரியாம ஃபோன எடுத்து நோண்டிகிட்டுருந்தேன்.

கிளம்பும் போது மெதுவாகச் சொன்னார் “சீக்கிரம் நாகர்கோவில்ல போய் செட்டில் ஆகிடுவேன்னு நெனைக்கேன். அவங்க அம்மாவும் அப்பாவும் இங்க வந்திருங்களேன்னு கூப்பிடுறாங்க”.

இதெல்லாம் நடந்து ஒரு வருஷம் இருக்கும், நேத்து தற்செயலா எதிர ஆர்ட்டிஸ்டப் பாத்தேன். வீட்டுக்கு கூப்பிட்டு டீ போட்டு குடுத்தார். என்னாச்சுன்னு கேட்டேன்.

“ஆஸ்திரேலியாக்காரன் நாகர்கோவில் வந்திட்டான்!” சிரிச்சுகிட்டே சொன்னார்.

அவருடைய லேட்டஸ்ட் பெயிண்டிங்கில் எல்லாம் பெண்களிடம் வேறு சாயல் வந்திருந்தது.