கைராசிக்காரி!

ஒரு கேமெராவை எப்படி பிடிக்கணும்னு பண்ணைதான் எனக்குச் சொல்லிக் குடுத்தான். பேருதான் பண்ணை, ஆனா  கேமெராவைத் தவிர அவன்கிட்ட ஒண்ணும் கிடையாது. ஆள் பாக்க செளிப்பா தெரிவான், அவன பக்கத்துல வச்சுகிட்டா ரொம்ப ஈசியா கடன் வாங்கலாம். கேமெராவை எடது கை மட்டும் தான் அழுத்தி பிடிக்கணும், வலது கை ஃப்ரீயா மூவ் ஆகணும்பான். பழக்கதோஷத்துல நான் வலது கையவும் காமெராவில வச்சு அழுத்துவேன், கைலயே அடிப்பான் “ரெண்டு கையவும் வச்சு அழுத்துனா படம் ஷேக் ஆகும்ல” என்பான். கல்யாண வீட்டுக்கெல்லாம் வேண்டா வெறுப்பா படம் எடுப்பான், எல்லாம் துட்டுக்காகத்தான். அவன் தனிப்பட்ட மொறைல எடுத்த படத்த பாத்தாதான் அவனோட பொலம தெரியும்.

பண்ணையோட கேமெரா பொலம தெரிஞ்சவங்கள்ல செல்வியும் ஒருத்தி. கைராசிக்காரி, எந்தக் கடேல வேலைக்குச் சேந்தாலும் மூணு மாசம் தான் கணக்கு. இது வரைக்கும் திருநவேலில எட்டு ஜெராக்ஸ் கடைய மூடிருக்கிறா. பண்ணையும் செல்வியும் பேச ஆரம்பிச்சா, பக்கத்துல இருக்கிற என்ன எல்லாம் ஒரு மனுஷ ஜென்மமாவே நெனைக்க மாட்டாங்க, கூசாம எல்லாம் பேசுவாங்க. என்னையவும் படம் எடுறான்னு கெஞ்சுவா. நான் சும்மா இல்லாம “பண்ண இயற்க காச்சியத்தான் எடுப்பான்”னு சீண்டுவேன். “என்ன என்ன செஞ்சா கொண்டு வந்தாங்க? என்ன விட ஒரு இயற்கய நீ எங்க போய் பாக்கப் போற?”ன்னு பண்ணையப் பாத்து கேப்பா. ஒரு நா பேச்சுவாக்குல ‘நான் வேணா ரொம்ப இயற்கயாவே நிக்குறேன், படம் எடுக்குறியா’ன்னு ஆரம்பிச்சா, நான் எந்திச்சு ஓடியே வந்துட்டேன்.

பண்ணை அவ்வளவு லேசுல மடங்குற ஆளு இல்ல, ஆனா சில மேட்டர்லாம் அவனால செல்வி கிட்டதான் பேச முடிஞ்சது. சில சமயம் தனியா என்கிட்ட சொல்லுவான் “பெரிய ரசனக்காரில இவ, பொருந்தாத எடத்துல இருக்குறா. இருக்க வேண்டிய எடத்துல இருந்தான்னா பெரிய ஆளு இவ”ன்னான். “நீ கூட அப்படித்தான் பொருந்தாத எடத்துல இருக்குற பண்ண!”ன்னேன்.

ஒரு நாள் செல்வி உள்ள இருக்கும் போது, பண்ணை ஸ்டூடியோ கதவ உள்பக்கம் லாக் பண்ணினான்னு அந்த தெரு பூராவும் ஒரே பேச்சு! பெறகு செல்வியோட கைராசி நல்லாவே வேல செஞ்சது. பண்ணைக்கு வேல இல்லாம நொடிச்சுப் போனான். இப்ப எந்த ஊர்ல இருக்கான்னே தெரியல.

கைராசிக்காரிய மூணு வருஷம் கழிச்சு ஒரு சினிமாவுல க்ரூப் டேன்சராப் பாத்தேன். வெறுத்துப் போய் எந்திச்சு வந்துட்டேன். அவளோட ஆட்டம், நெஜத்தோட கோரத் தாண்டவமா இருந்தது.