தன்னது சாயை தனக்குத வாதுகண்டு
என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே. – (திருமந்திரம் – 170)
விளக்கம்:
நம்முடைய நிழல் கூட நமக்கு உதவாது என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அப்படி இருக்கும் போது, நம்மிடம் இருக்கும் செல்வமெல்லாம் நமக்குச் சொந்தமானது என்று நினைப்பது அறியாமை ஆகும். உடலும் உயிரும் ஒன்றாகப் பிறந்தாலும் உயிர் போகும் போது உடல் அழிந்து விடும். அதனால் உயிர் உள்ள போதே அகக்கண்ணில் உள்ள பேரொளியை கண்டு உணர்வோம்.
சாயை – நிழல், மாடு – செல்வம், ஏழை – அறியாமையில் இருப்பவர்கள்