பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத்
தங்க இருப்பத் தலைவனு மாமே. – (திருமந்திரம் – 558)
விளக்கம்:
பத்மாசனம் முதலாக பல ஆசன முறைகள் உள்ளன. அவற்றுள் எட்டு ஆசன முறைகள் முக்கியமானவை ஆகும். சோர்வு நீக்கும் சுவத்திகாசனம் அவற்றில் சிறந்த ஒன்றாகும். இந்த ஆசனத்தில் பொருந்தி இருந்தால் சிறந்தவன் ஆகலாம்.
கால்களைக் குறுக்கிட்டு வைத்துக்கொண்டு உடல் நிமிர அமரும் ஆசனவகை இது. சுவத்திகாசனத்தை சுகாசனம் எனவும் உரைப்பர்.
பங்கயம் – பத்மாசனம், சொங்கு – சோர்வு, சுவத்திகம் – சுவத்திகாசனம்