சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்
கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதுவ துன்னுடல் உன்மத்த மாமே. – (திருமந்திரம் – 582)
விளக்கம்:
மனத்தை உள் நிறுத்தித் தியானம் செய்யும் போது, கீற்று போன்ற சுடரொளி தோன்றினால் அது குற்றம் எதுவும் இல்லாத பரமானந்தம் ஆகும். அவ்வொளியை நோக்குதலை குறிக்கோளாகக் கொண்டால் நேர்மை விளங்கும். கழுத்துப் பகுதியில் மனத்தை நிறுத்தித் தியானப் பயிற்சி செய்தால் உள்ளே நிலவொளி தோன்றும், உடலில் ஆனந்தப் பரவசம் உண்டாகும்.
கழுத்துப் பகுதியில் மனத்தை நிறுத்துவது விசுத்தி எனப்படும் ஐந்தாவது ஆதார நிலையாகும்.
கோதில் – குற்றம் இல்லாத, நேர்திகழ் – நேர்மை உண்டாகும், கொண்மின் – கொள்ளுங்கள், கண்டத்தே – கழுத்துப்பகுதி, உன்மத்தம் – பரவசம்