ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே. – (திருமந்திரம் – 600)
விளக்கம்:
ஞானக்கண் கொண்டு உணரப்படும் அந்த சோதியில் இரண்டு கண்களும் பொருந்தியிருக்குமாறு செய்து, புருவங்களுக்கு மத்தியில் சலனமில்லாமல் தியானம் செய்வோம். அவ்வாறு தியானித்திருந்தால் வான்கங்கை பாயும் அருள்வெளியைக் காணலாம். அவ்வெளியிலே மனம் ஓடினால் சுயம்புவான மூர்த்தியைக் காணலாம்.
புருவ மத்தியில் தியானம் செய்து அதிலே கலந்து விட்டால், அருட்பெருவெளி ஒன்றைக் காணலாம், அங்கே சிவபெருமானை தரிசிக்கலாம்.
ஒண்ணா நயனம் – ஒன்றான ஞானக்கண், விண்ணாறு – வான கங்கை, பண்ணாமல் நின்றது – செய்யப்படாத சுயம்பு மூர்த்தி