ஒரு கனவு! நீரும் மணலுமாய் அழகான ஆறு ஒன்று. அவ்வளவு சுத்தமான ஆற்றைக் கனவில் மட்டும்தான் பார்க்க முடியும். அதன் கரையோரத்திலே “பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே” என்று பாடியபடி அந்தக்கால விஜயகுமார் தன்னுடைய சமகாலத்து மஞ்சுளாவைத் துரத்துகிறார். பாடியபடியே திரும்பிப் பார்க்கும் விஜயகுமார் என்னைப் பார்த்து சிநேகமாகச் சிரிக்கிறார். அப்போது தண்ணீருக்குள் இருந்து புலி ஒன்று சாவகாசமாக வெளியே வருகிறது. முழுசாக ஆச்சரியப்படக்கூட நேரமில்லை. இன்னும் நான்கைந்து புலிகள் தண்ணீரை விட்டு வெளியே வருகின்றன. அடுத்த வினாடி ஒரு சிறிய குகைக்குள் அந்த புலிகள் என்னைச் சுற்றி வளைத்து நிற்கின்றன.
தலைமைப்புலி என்னைப் பார்த்து “இன்னைக்கு நீ தப்பிக்க முடியாது” என்று உறுமியபடி தன் கூரிய நகங்களால் என்னை நெருக்குகிறது. என் பக்கத்தில் நிற்கும் என் தங்கையின் மகன் விக்கி “மாமா! உங்க செருப்புல சாணியா ஒட்டிருக்கு. ஏன் மாமா சாணிய மிதிச்சீங்க?”ன்னு கேட்கிறான். புலியின் நகங்கள் கழுத்தை நெருக்க நெருக்க நான் ஒரு முடிவுக்கு வந்து ஆனாபானா தியானம் செய்ய ஆரம்பிக்கிறேன். வாழ்க்கையின் கடைசி மூச்சு தியானம் செய்தபடி போகட்டுமே! எல்லாம் அடங்கி ஓய்ந்த மாதிரி இருக்கும் போது என் சட்டைப்பையில் உள்ள அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி ‘you have been upgraded to heaven’ என்று. அடுத்த கணம் கனவில் இருந்து விழித்துக் கொண்டேன்.
என் கனவுக்குள் வேறு யாரும் வந்து குரல் கொடுக்க முடியாது. ஆனால் என் கனவில் விக்கியின் அதே குரலைக் கேட்டேன். ஒரு புலி நிஜமாகப் பேசினால் எப்படியிருக்கும் என்பதைத் தத்ரூபமாகக் கேட்டேன். அதன் நகங்கள் என் கழுத்தை நெறித்தால் எப்படி இருக்கும் என்பதை அப்படியே உணர்ந்தேன். என் கனவில் என்னைத் தவிர வேறு யாரும் பிரவேசிக்க முடியாது. தசாவதாரம் கமல் மாதிரி என் கனவில் வரும் எல்லாப் பாத்திரங்களையும் நானே நடித்திருக்கிறேன். அந்தப் புலிகள், விஜயகுமார், மஞ்சுளா, விக்கி, நான் எல்லாரும் நானே! எல்லாருக்கும் நானே குரல் கொடுத்திருக்கிறேன். என் கனவில் வந்த இடங்கள் எல்லாம் இதுவரை நான் எங்குமே பார்த்திராதவை. அவையனைத்தும் என் கற்பனையே!
இது ஒரு சிறிய கனவு பற்றிய சிந்தனை. இதையே கொஞ்சம் பெரிய அளவில் யோசித்துப் பார்த்தேன்.
“தற்பரனின் கனவு இந்த உலகம்” என்கிறார் திருமூலர்.
இப்போது யோசித்துப் பாருங்கள் இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்று. நாம் காண்பது எல்லாமே அந்தக் கடவுளின் கற்பனையே. நானும் நீங்களும் அவன் காணும் கனவே! நாம் பேசுவதெல்லாம் அவன் குரலே! நம்முடைய செயல்கள் எல்லாம் அவனுடைய கற்பனையே! நமக்கு நிகழ்வது எல்லாமே அவன் கனவுப்படியே!
இந்தக் கட்டுரையும் தற்பரனின் கற்பனையே ஆகும்.