வட்டியினால் சேரும் செல்வம் யாருக்கும் பயன்படாது

எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன
ஒட்டிய நல்லறம் செய்யா தவர்செல்வம்
வட்டிகொணடு ஈட்டியே மண்ணில் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே. – (திருமந்திரம் –260)

விளக்கம்:
எட்டிப் பழம் பெரிதாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். ஆனால் அது கசப்புத்தன்மை கொண்டதாக இருப்பதால் யாருக்கும் பயன்படாது. அதுபோல தனக்குரிய அறத்தினை செய்யாதவர்களின் செல்வம் யாருக்கும் பயன் தராமல் வீணாகி விடும். வட்டி வாங்கி செல்வம் சேர்க்கும் பாதகர்கள், அறத்தின் பயனை அறியாதவர்கள். அவர்கள் சேர்த்த செல்வம் யாருக்கும் பயன்படாமல் மண்ணில் புதையும்.


தானம் செய்பவர்க்கே மெய்ப்பொருள் விளங்கும்

பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக் கல்லது
உற்று உங்களால் ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே. – (திருமந்திரம் –259)

விளக்கம்:
இந்த உலகில் அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கும் அந்த மெய்ப்பொருளைப் பற்றிய உண்மையை சிவபெருமான் அனைவருக்கும் உணர்த்துவதில்லை. அறநெறியில் இருப்பவர்களுக்கு மட்டுமே அவன் உணர்த்துவான். நம்மால் முடிந்தவரை பிறருக்கு தானம் செய்து உதவுவோம். அந்த தர்மம் தான் நமக்குத் துணை. அறநெறியில் நிற்கும் நமக்கு நம் அண்ணல் சிவபெருமான் சிறந்த வழியைக் காட்டுவான்.


இல்லறமும் கரையேறும் வழிதான்

திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அக் கேடில் புகழோன்
விளைக்கும் தவமறம் மேற்றுணை யாமே. – (திருமந்திரம் –258)

விளக்கம்:
நிறைந்திருக்கும் வினைக் கடலில் இருந்து கரையேறி சோர்வு நீங்கப்பெற இரண்டு வழிகள் உண்டு. அழியாப் புகழுடைய அந்த சிவபெருமான், நமக்கும் நம்மை சேர்ந்தோர்க்கும் காண்பிக்கும் ஒரு வழி தவம், இன்னொரு வழி இல்லறம் ஆகும். இவை இரண்டுமே சிறப்புற நல்வழி நடந்தால் மறுமைக்கு பயன் தருவதாகும்.

(இளைப்பு – சோர்வு.  கிளை – உறவினர், தன்னை சார்ந்தவர்.  கேடில் புகழோன் – அழியாப் புகழ் உடையவன்)


அறிவுடையவர்கள் தவத்தின் வழியே செல்கிறார்கள்

தான்தவம் செய்வதாம் செய்தவத்து அவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்
ஊன் தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வம் என்று நமன்வரு வானே. – (திருமந்திரம் – 257)

விளக்கம்:
அறிவை தெய்வமாக மதிக்கும் மனிதர்கள், தவத்தின் வழியிலே செல்கிறார்கள். நாமும் அவ்வழியிலேயே செல்வோம். நம்மில் பலர் நமது உடலையே தெய்வமாக, அதாவது முக்கியமாக நினைக்கிறோம். அப்படி நினைப்பவர்களுக்கு யமன் வந்து நான் தான் தெய்வம் என்று உணர்த்துவான்.

மான் – அறிவினால் பெரியவன்,    ஊன் – உடல்