கல்வியினால் மயக்கம் தெளியும்

நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினால் பண்பின் பயங்கெடும்
கோலொன்று பற்றினால் கூடாப் பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்க்களே. – (திருமந்திரம் –295)

விளக்கம்:
சாஸ்திரங்களைக் கற்று அறிவு நுன்மை அடையப் பெறாதவர்கள், காமத்தைப் பற்றிக் கொண்டு, தம்மிடம் உள்ள மற்ற நல்ல பண்பினால் கிடைக்கக் கூடிய பயன்களையும் கெடுத்துக்கொள்கிறார்கள். கம்பு ஒன்றைக் கையில் எடுத்தாலே கூடியிருக்கும் பறவைகள் தன்னாலே ஓடி விடுவதை போல, சாஸ்திரங்களைக் கற்றுத் தெளிந்து ஞானம் அடைந்தால் காமம் போன்ற மயக்கங்கள் தன்னாலே ஓடி விடும். ஆனாலும் மக்கள் ஆசையை பற்றிக் கொண்டு மனம் மயங்குகிறார்களே!


நல்வாழ்விற்கு வழித்துணையாய் வருபவை

துணையது வாய்வரும் தூயநற் சோதி
துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வரும் தூயநற் கந்தம்
துணையது வாய்வரும் தூயநற் கல்வியே. – (திருமந்திரம் – 294)

விளக்கம்:
நல்வாழ்விற்கு வழித் துணையாய் வரும் விஷயங்கள் இவை.

  • தூய நற்சோதி (சோதி வடிவான சிவபெருமான்).
  • தூய நல் சொற்கள் (இனிய சொற்களை மட்டும் பேசுதல்).
  • தூய நல் சுக்கிலம் (சுக்கிலம் கெடாமல் காத்தல்).
  • தூய நல் கல்வியினால் மேல் சொன்ன மூன்று துணைகளையும் பெறலாம்.

(கந்தம் – சுக்கிலம்)


கல்வியின் வேரைக் காண்போம்

கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்
பல்லி யுடையார் பாம்பரிந்து உண்கின்றார்
எல்லியும் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமும் ஆமே. – (திருமந்திரம் – 293)

விளக்கம்:
கல்வி கற்றவர்கள் கூட எல்லாருமே இறை வழிபாட்டில் ஆர்வம் கொள்வதில்லை. கல்வியின் வேரைக் கண்டவர்கள் தான் இறை வழிபாட்டின் அவசியத்தை உணர்கிறார்கள். அவர்கள் பாம்பு போல நீளும் குண்டலினியைப் பற்றி, அதன் ஆற்றலை மேம்படுத்துகிறார்கள். நாம் இரவும் பகலும் நம் இறைவனை நினைத்து வழிபடுவோம். அவ்வாறு வழிபட்டால் அந்த இறைவனின் சக்தி வலிமையாக உள்நின்று நம் உடலினைக் காக்கும்.

(பல்லி – வேர்,  எல்லி – இரவு,  வல்லி – வலிமை,  காயம் – உடல்)


கல்வியால் பாவம் தொலையும்

நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன்று இலாத மணிவிளக் காமே. – (திருமந்திரம் – 292)

விளக்கம்:
நிலைத்து நிற்கும் பரம்பொருளான சிவபெருமானின் திருவடிச் சிறப்பைச் சொல்லும் கல்வியை இளமையிலேயே கற்போம். அக்கல்வியால் நம் பாவங்கள் தொலைந்து போகும். சொல் குற்றம் இல்லாது அந்த இறைவனை தொழுவோம், ஒப்பீடு செய்ய முடியாத மணிவிளக்காய் அந்த இறைவன் தோன்றி அருள்வான்.

(செய்மின் – செய்யுங்கள், கழிந்தறும் – கழிந்து போகும்)


கற்றறிவாளர் சொல்வதைக் கேட்போம்

கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்
கற்றறி காட்டக் கயல்உள வாக்குமே. – (திருமந்திரம் – 291)

விளக்கம்:
உண்மையான கல்வி கற்ற அறிவாளர்கள் சொல்லும் கருத்தை நாம் எண்ணிப் பார்த்தால், அந்தக் கருத்தினில் ஞானம் இருக்கும். கற்றறிந்த அறிவாளர்கள் நமக்காகத் தரும் உரைகளை நாம் கற்று அறிவோம். அந்த உரைகள் நம் அறிவுக் கண்ணைத் திறக்கும்.