கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசுஅறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே. – (திருமந்திரம் – 318)
விளக்கம்:
சிலர் ஞானம் பெறுவதற்கல்லாமல், தர்க்கம் செய்வதற்காகவே ஆன்மிக நூல்களைக் கற்பார்கள். அவர்கள் தீய குணம் உடையவர்கள், தங்கள் சுற்றமாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை விடமாட்டார்கள். தன் குற்றங்களை நீக்கிக் கொள்ளாத அந்த மூடர்கள் எந்த விஷயத்தையும் பல கோணங்களில் ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். ஞானக் கல்வி பெற்று அன்பில் நிற்பவர்கள், வாழும் முறை அறிந்தவர் ஆவார்கள்.
கல்லாதவர்களை விட வீண் தர்க்கத்திற்காகவே கற்பவர்களால் ஏற்படும் தீமை அதிகம்.
(கலதி – தீயவர், வீடார் – விட மாட்டார், துரிசு – குற்றம்)