இடர் நீக்கும் சங்காரம்!

நித்தசங் காரம் கருவிடர் நீக்கினால்
ஒத்தசங் காரமும் உடலுயிர் நீவுதல்
சுத்தசங் காரம் அதீதத்துட் டோ ய்வுறல்
உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே.   – (திருமந்திரம் – 427)

விளக்கம்:
நித்திய சங்காரம், கருவினால் உருவான நமது உடலின் துயரங்களை நீக்கும். ஆயுட் சங்காரத்தில் உடல், உயிர் ஆகியவற்றின் துயர் நீங்கும். சருவ சங்காரம் இவற்றை எல்லாம் கடந்து சூக்கும உடலின் துயரையும் அழிக்கிறது. துயரங்கள் நீங்கி நாம் உய்யும் பொருட்டே சங்காரம் நடைபெறுகிறது. சங்காரம் என்பது அவனது அருளே ஆகும்.


சூக்கும உடலும் அழிய வேண்டும்

நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாசங் காரமாஞ்
சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்
உய்த்தசங் காரஞ் சிவன் அருள் உண்மையே.   – (திருமந்திரம் – 426)

விளக்கம்:
மூன்று வகையான சங்காரங்களை வேறு விதமாகச் சொல்வதென்றால், நித்திய சங்காரத்தில் தூல உடலும் சூக்கும உடலும் தற்காலிக ஓய்வு பெறும் (தூக்கம்). ஆயுட் சங்காரம் என்பது தூல உடல் மட்டும் அழிவது (மரணம்). சருவ சங்காரம் என்னும் சுத்த சங்காரத்தில் தூல உடலும் அழிந்து, சூக்கும உடலும் அழியும். நமது ஆணவம் அழியப் பெற்றால் சிவனருளைப் பெற்று உய்வடையலாம்.

நமது மரணத்தின் போது, சூக்கும உடலும் அழிய வேண்டும். அதுவே நாம் உய்வடையும் வழி. அதற்கு வேண்டிய சிவனருளை வாழும் போதே பெற வேண்டும்.


மூவகைச் சங்காரங்கள்!

நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்
வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாஞ்
சுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம்
உய்த்தசங் காரம் பரன் அருள் உண்மையே.   – (திருமந்திரம் – 425)

விளக்கம்:
சிவபெருமான் மூன்று வகையான சங்காரங்கள் செய்வது உண்டு. அவை நித்திய சங்காரம், ஆயுட் சங்காரம், சருவ சங்காரம் ஆகியனவாகும். நித்திய சங்காரம் என்பது நம்முடைய அன்றாடத் தூக்கம் போன்றது. ஆயுட் சங்காரம் என்பது நமது ஆயுள் முடிந்தவுடன் நமது உடல் மட்டும் அழிவதாகும். சருவ சங்காரம் என்பது உடலுடன் நமது ஆன்மாவும் தனது தொழிலை விட்டுச் செயலற்று இருப்பது.

ஆணவம் அழியப் பெறுவதே நம்மை உய்வடையச் செய்யும் சங்காரமாகும். நாம் அந்தச் சங்காரத்தைச் செய்தால் சிவனருள் கிடைப்பது உறுதி.