பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்
உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டித்
திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே. – (திருமந்திரம் – 491)
விளக்கம்:
ஒருவரின் வாழ்நாள் முடியும் அவருடைய பருவுடலைத் தகனம் செய்து விடுகிறோம். நுண்ணுடலான உயிர் வானுலகத்தில் கரைந்து பதிந்து விடுகிறது. கடல் நீரில் உள்ள உப்பு திரண்டு வந்து வடிவம் பெறுவது போல, நுண்ணுடலான உயிர் மறுபடியும் பிறப்பு எடுக்கிறது சிவன் அருளாலே!